மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 19)




ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்

வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்

மைத்தடங் கண்ணினாய் நீ உன் மணாளனை

எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்

எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்

தத்துவ மன்று தகவேலோ ரெம்பாவாய்.

பாடியவர் – பவ்யா ஹரி
 

விளக்கம்: 

கீழ்ப்பாசுரத்தில் நப்பின்னை நல்லாளின் உதவியை நாடியவர்கள், இப்போது கண்ணனையும் நப்பின்னையையும் ஒருசேரப் பிரார்த்திக்கிறார்கள். “நிலை விளக்குகள் வெளிச்சம் தந்து கொண்டிருக்க, யானைத் தந்தத்தாலான கால்களைக் கொண்ட கட்டிலின்மீது, மெத்தென்றிருக்கும் படுக்கையின்மீது, கூந்தலில் மலர் சூடியவளான நப்பின்னையை அணைத்துக்கொண்டு கிடக்கும் கண்ணனே, எங்களுக்காக உன் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்ல மாட்டாயா? அஞ்சனமை தீட்டிய அழகிய கண்களைக் கொண்டவளே நப்பின்னாய், உன்னுடைய கணவனை ஒரு நொடியும் எழுந்திருக்க விடமாட்டாய். ஒரு கணமும் அவனை உன்னால் பிரிய முடியாது. (எனினும்) நீ இப்படி இருப்பது உனக்குத் தக்கதில்லை’ என்றே தங்களின் வருத்தத்தை உரைக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

அடியார்களுக்கு அருள்வதில், எம்பெருமானும் பிராட்டியும் போட்டி போடுவார்களாம். அதற்கொப்ப, இருவரையும் இப்பாசுரத்தில் வேண்டுகிறார்கள். கோபியருக்கு நப்பின்னை மீது ஏற்படக்கூடிய லேசான பொறாமையும் இங்கு எட்டிப் பார்க்கிறது. “நாங்களெல்லாம் குளிரில் புறத்தே காத்துக் கிடக்க, கண்ணனை உனக்கானவனாக மட்டும் பிடித்து வைத்திருக்கிறாயே’ என்னும் பொறாமை. “பஞ்ச சயனம்’ என்பது ஐந்து தன்மைகளைக் கொண்ட படுக்கை. படுக்கையென்பதில், அழகு, குளிர்ச்சி, வெண்மை, மென்மை, நறுமணம் ஆகிய ஐந்து தன்மைகளும் இருக்க வேண்டும். பருத்தி, இலவம் பஞ்சு, பட்டு, மலர்கள், துளிர் இலைகள் ஆகிய ஐந்துப் பொருள்களால் படுக்கை உருவாக்கப்படலாம். “பஞ்சினால் ஆன சயனம்’ என்பதும் “பஞ்ச சயனம்’ ஆகும். உள்ளுறைப் பொருளில், ஐந்து என்பது அர்த்தபஞ்சக ஞானத்தைச் சுட்டுவது. ஈச்வர ஸ்வரூபம் (மிக்க உயர் நிலை), ஜீவ ஸ்வரூபம் (உயிர் நிலை), முக்திக்கான வழியாக உபாய ஸ்வரூபம் (தக்க நெறி), விரோதி ஸ்வரூபம் (இறைவனைஅடைவதைத் தடுக்கும் தீவினைகள்), முக்தி ஸ்வரூபம் (வாழ்வினை) என்னும் இவ்வைந்தினைப் பற்றிய அறிவே, “அர்த்தபஞ்சகம்’ ஞானம். இஞ்ஞானத்தை உணர்த்துகிற பாசுரம். 

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று

அங்கப் பழஞ்சொற் புதுக்கும்எம் அச்சத்தால்

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்!

எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க;

எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க;

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க;

இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோ ரெம்பாவாய். 

பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் – மயிலை சற்குருநாதன்

பாடியவர் – பொன் முத்துக்குமரன்

விளக்கம்:

வழக்கில் உள்ள பழமொழி ஒன்றை நினைவுபடுத்திப் பேசுகிற பாடல். திருமண காலத்தில், மணப்பெண்ணின் பெற்றோர், மணாளனின் கையில் பெண்ணைக் கொடுத்து, “இந்தப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்றுரைப்பது வழக்கம். அடைக்கலம் என்றானபின்னும், திருமண பந்தம் உற்ற நிலையிலும், அந்த மணாளன் எண்ணுகிற வழியிலும், சொல்லுகிற வழியிலும் வாழ வேண்டிய நிலை பெண்ணுக்கு உண்டு.

தங்களுக்கு வரக்கூடிய கணவன்மார்கள், சிவனடியார்களாகவோ, இறை அன்பர்களாகவோ இல்லையெனில் என்ன செய்வது? இந்தச் சந்தேகம் வந்தவுடன், கடவுளிடம் வேண்டுகோள் வைக்கின்றனர். “எங்களுடைய மார்புகள், உன் அன்பர் இல்லாதவரின் தோள் சேரும்படிச் செய்துவிடாதே; எங்கள் கைகள் உனக்கான தொண்டு அல்லாமல் வேறு செய்யும்படி விட்டுவிடாதே; எங்களின் கண்கள் உன்னைத் தவிர வேறெதையும் காணும்படித் தள்ளிவிடாதே. இதை மாத்திரம் நீ எங்களுக்கு அருள் செய்வாயாயின், சூரியன் கிழக்கே உதித்தால் என்ன, மேற்கே உதித்தால் என்ன?’ என்று விண்ணப்பம் சாற்றுகிறார்கள். 

பாடல் சிறப்பு:

நோன்பு தலைக்கட்டும் நிலைக்கு வந்துவிட்ட பெண்கள் வைக்கும் விண்ணப்பம் சற்றே நுணுகி ஆராய்வதற்கு உரியது. “உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்பது முதுமொழி. இதனைத் திருமண காலத்தில் சொல்வதை, இப்பெண்கள் நினைவுகூர்ந்தனர் எனக் கொள்ளலாம். காரைக்கால் அம்மையின் வாழ்க்கை இவர்கள் மனங்களில் ஓடியிருக்க வேண்டும். செல்வந்தக் குடும்பம், வசதியான வாழ்க்கை என்பவை இருந்தாலும், ஈசன் அருள் என்பதையோ இறை நம்பிக்கை என்பதையோ சிவனடியார் தொண்டு என்பதையோ புரிந்துகொள்ள முடியாத கணவன் வாய்க்கப் பெற்றதால், அம்மையின் இல்லற வாழ்க்கை சிதிலமானது. புனிதவதியார் சமாளித்தார்; கடவுளாலேயே “அம்மை’ என்றழைக்கப் பெற்றார்.

ஆனால், எம்மால் சமாளிக்க முடியுமா? என்னும் தவிப்பு இவர்களுக்கு! சூரியன் எங்கே உதித்தால் என்ன? என்னும் வினா, புறத்தே எவ்வளவு துன்பம் வந்தாலும், சிவத்தொண்டு செய்யும் பேறு கிடைத்தால் போதும் என்னும் ஆவலைக் காட்டுகிறது. முதலில் சுட்டிய பழமொழியை, சிவனிடம் தங்களை அடைக்கலப்படுத்தி, “உன் கையில் எங்களை அடைக்கலமாகக் கொடுத்துவிட்டோம்; நீ தருவதை ஏற்க வேண்டும்; இருந்தாலும் ஒருவேளை முரண்பாடு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறோம்; ஆகவே, கேட்கிறோம்’ என்று விண்ணப்பிப்பதாகவும் கொண்டால், மேலும் பொருத்தம். நோன்பின் சிறப்புப் பயன் காட்டும் பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்







நன்றி Hindu

(Visited 10027 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =