சாக்லேட் முதல் காஃபி வரை இந்த 10 உணவுப் பொருட்களை கண்ட நேரத்தில் சாப்பிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்து!!




 

நீண்ட நாட்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் சந்தோஷமா வாழணுமா? அப்போ ஆரோக்கியமான உணவுப் பொருட்களை சாப்பிடுங்கள் அப்படினு பலரும் சொல்லி கேட்டிருப்போம், அது உண்மையும் தான். ஆனால், அதே சமயம் எவ்வளவு ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதைச் சாப்பிடுவதற்கும் ஒரு நேரம் காலம் உள்ளது. நமக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அதைக் குணப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரையைச் சாப்பிடுவதற்கு கூட ஒரு குறிப்பிட்ட நேரம் சொல்லப் படுகிறது. அப்படியிருக்கையில் கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் இந்த 10 உணவுப் பொருட்களை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்து உங்கள் உயிருக்கே ஆபத்தாகவும் அமையலாம் என்கிறது ஆராய்ச்சி முடிவுகள்.

இந்த 10 உணவு வகைகள் கிடைப்பதற்கே அரிதான பொருட்கள் அல்ல நம் அன்றாட வாழ்வில் சாப்பிடும், தவிர்க்கவே முடியாத இடத்தைப் பிடித்த உணவுகள் தான் அவை. வாருங்கள் அந்த 10 என்னவென்று தெரிந்துகொள்வோம்.

1. வாழைப்பழம்:

எல்லாப் பருவங்களிலும் எல்லா இடத்திலும் மிகவும் எளிமையாக கிடைக்கக் கூடிய ஒரு பழம் வாழை. நமது ஜீரண சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்று பிரச்னைகளில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வரை வாழைப்பழத்திற்குப் பல மருத்துவ குணங்கள் உண்டு. அதிக பொட்டாஷியமும், நார் சத்தும் நிறைந்த வாழைப்பழத்தைக் காலை உணவாகவே பலரும் வெறும் வயிற்றில் சாப்பிடுகிறோம், அதன் ஆபத்து தெரியாமல். வாழைப்பழம் அமிலத் தன்மை கொண்டது, இதை வெறும் வயிற்றில் உட்கொண்டால் குடல் பிரச்னைகளை இது உண்டாக்கும். அதே போல் வாழைப்பழத்தில் சர்க்கரை அளவும் அதிகமாக இருப்பதால் சில மணி நேரத்திலேயே உங்கள் உடலின் எனர்ஜி குறைந்து உங்களைப் பலவீனமாக்குவதோடு, சோர்வான உணர்வைத் தரும். பின் நாட்களில் குடல் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்க வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிருங்கள்.

2. தயிர்:

வெயில் காலம் வந்துவிட்டாலே வெப்ப சலனத்தில் இருந்து நமது உடலைப் பாதுகாக்க நாம் நாடும் உணவு வகைகளில் மிகவும் முக்கியமானது தயிர். ஒரு சிலருக்கு தயிர் இல்லாமல் சாப்பாடே இறங்காது. ஆனால், என்னதான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் தயிரை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடல் உஷ்ணத்தை அதிகரிக்கும். இரவு உறங்கச் செல்வதற்கு முன்பு தயிர் சாப்பிட்டால் தயிரில் இருக்கும் லாக்டிக் ஆசிட் செரிமான பிரச்னையை உண்டாக்கி, மூச்சுக் குழாயில் அடைப்பு, இரும்பல் ஆகிய சிக்கல்களை ஏற்படுத்தும்.

3. கிரீன் டீ:

உடல் எடை குறைய வேண்டுமா? ‘என்னுடைய அழகான உடல் அமைப்பிற்குக் காரணம் கிரீன் டீ!’ என்று பல சினிமா பிரபலங்கள் சொல்லக் கேட்டு பிடித்தும் பிடிக்காமலும் அந்த கிரீன் டீ குடிப்பவர்கள் பலர். ஆனால் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கிரீன் டீ குடிப்பது மிகவும் ஆபத்து என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அதில் இருக்கும் கஃபைன் உடலில் உள்ள நீர் சத்தை குறைத்து தலை சுற்றல், வாந்தி போன்ற பிரச்னைகளை உண்டாக்கும். அது மட்டுமின்றி 3 அல்லது 4 மணி நேரத்திலேயே உடல் சோர்வை ஏற்படுத்தி நம்மைப் பலவீனமாக்கி விடும்.  

4. சாதம்:

நீரிழிவு, ரத்த கொதிப்பு எனப் பல பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் சொல்லும் முதல் கண்டிஷன் இரவில் சாதம் சாப்பிடாதீர்கள் என்பது தான். ஏன் நாள் முழுக்க நாம் சுறுசுறுப்புடன் செயல்படத் தேவையான கர்போஹைட்ரேட்டை தருவது இந்தச் சாதம் தான், ஆனால் அதே சமயம் இரவு நேரத்தில் சாதம் சாப்பிட்டால் அதில் அதிகமாக இருக்கும் ஸ்டார்ச் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கும். அதிகமான உடல் எடை பின் நாட்களில் ரத்த அழுத்தம், இதய நோய் என நம் உயிருக்கே ஆபத்தாகக் கூடிய பல நோய்களை வரவழைக்கும்.

5. பால்:

எந்தச் சத்து உடலில் குறைந்தாலும் சரி அது சரி செய்யப் பால் மட்டுமே போதும். கால்சியம், பொட்டாசியம், வைட்டமின், புரதம் மற்றும் கொழுப்பு என அனைத்துச் சத்துக்களும் பாலில் நிறைந்துள்ளது. பாலை இரவு உறங்கப் போவதற்கு முன்பு குடித்தால் நல்ல நிம்மதியான தூக்கம் வருவதோடு பாலில் உள்ள மொத்த சத்துக்களையும் உடல் ஈர்த்துக்கொள்ளும், ஆனால் அதே சமயம் பகல் வேலையில் பால் குடிப்பது மந்தமான உணர்வைக் கொடுக்கும். 

6. ஆப்பிள்:

நாள்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் உண்டு என்பதை நமது பள்ளி காலம் முதலே நாம் படித்து இருப்போம். ஆனால் அத்தனை ஆரோக்கியமான ஆப்பிளைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. ஆப்பிளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடண்ட்ஸ் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தித் தூக்கத்தை கெடுக்கும். இரவு வேளையில் உணவு செரிமானம் ஆக மிகவும் நேரம் எடுக்கும் என்பதால் அமிலம் நிறைந்த இந்த ஆப்பிள் நீண்ட நேரம் நம் வயிற்றில் தங்கி வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.  

7. சாக்லேட்:

சாக்லெட்டில் இருக்கும் ஆர்கானிக் கலவைகள் உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும். ஆனால் டார்க் சாக்லேட்டில் குறைவாக இருக்கும் சர்க்கரை மற்றும் அதிகமான கோகோ பொருட்கள் இரவில் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்திலேயே உங்கள் சுயநினைவை நீங்கள் இழக்க நேரிடும். ஆகையால் இனிமேல் இரவு உணவிற்குப் பிறகு டெஸர்ட்டாக சாக்லேட் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருந்தால் அதை முதலில் நிறுத்தி விடுங்கள், அல்லது மிகவும் குறைவாக சாப்பிடுவது மிகப் பெரிய பிரச்னை ஏதும் ஏற்படாமல் நம்மைப் பாதுகாக்கும்.

8. காஃபி:

நம்மில் பலருக்கும் இரவு நேரத்தில் ஏதேனும் வேலை இருந்தால் தூங்காமல் இருக்க 2, 3 அல்லது அதற்கும் அதிகமான கப் காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். காஃபியில் இருக்கும் கஃபைன் செரிமானக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி இரவு முழுவதும் அமைதியற்ற ஒரு நிலையை உண்டாக்கும். காஃபிக்கு பதிலாக இரவில் பால் குடிப்பது ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும்.

9. ஆரஞ் ஜூஸ்:

ஆரஞ் பழச்சாற்றில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகமாக இருப்பதால் இதைப் பகல் வேளையில் குடிப்பது உடலின் சக்தியை அதிகரித்து உங்களைச் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும். அதே சமயம் ஆரஞ்சில் இருக்கும் ஃபாலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ‘டி’ உடலின் மெட்டபாலிஸத்தின் அளவையும் அதிகரிக்கும். ஆனால் இதை இரவில் குடிப்பது வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து வயிற்றெரிச்சலை உண்டாக்கும்.

10. சர்க்கரை:

நீங்கள் உங்களது காலை உணவில் எவ்வளவு வேண்டுமானாலும் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லையென்றால்) அது உங்களது ஆற்றலை அதிகரிக்கும் ஆனால் அதே சமயம் இரவு உறங்குவதற்கு முன்பு குடிக்கும் பால் அல்லது உணவிலோ சர்க்கரை சேர்த்துக் கொள்வது தேவையில்லாத கொழுப்பை உங்கள் உடலில் தங்கச் செய்யும். இந்தத் தேவையில்லாத கொழுப்பு இதய நோய் முதல் பல நோய்களை வரவழைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்த 10 உணவுகள் மட்டும் இல்லை ஒவ்வொரு உணவையும் சாப்பிடுவதற்கு என ஒரு கால நேரம் இருக்கிறது, அதை உணர்ந்து உண்பதே உங்களைத் தேவையில்லாத பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.







நன்றி Hindu

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 13 =