மனித சமூகம் வேட்டையாடி உணவு உண்டு குகைகளில் வாழ்ந்த காலங்களில் குடும்பம் அளவில் பெரிதாய் இருந்தது. அந்தக் குடும்பத்திற்கு தலைமை உறுப்பினர் ஒரு பெண்தான்.
அக்குடும்பத்தில் அனைவருக்கும் அவள்தான் தாய். வேட்டையாடுவது, உணவு சேமித்து வைப்பது, வாழ்விடம் தேடுவது எதிரிகளோடு சண்டை போடுவது ஆகிய அனைத்திற்கும் அவள்தான் சூத்திரதாரி. அதன் பின்னர் வேதங்கள் என்ற பெயரில் சில ஆண்கள் வஞ்சனை யோடு ஆண்-பெண் வாழ்க்கை முறைகளையும் அவரவருக்கான கடமைகளையும் வகுத்து அதுதான் மனித வாழ்க்கைக்கான பொது விதி என்று போதித்தனர். அதன் பின்னர்தான் பெண்ணிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ஆண் வசமானது.
இன்று உலக மகளிர் தினத்தை கொண்டாட உற்சாகமாக குறிப்பிட்ட பெண்கள் பல வளர்ந்த நாடுகளில் உலா வருகின்றனர்.
மகளிரின் உன்னதம் பற்றியும் உழைப்பைப் பற்றியும் அவர்களுக்கான உரிமைகள் பற்றியும் உதட்டளவில் அந்த நாளுக்காக மட்டுமே பேசும் சமூக ஆர்வலர்கள்,இன்னும் பல நாடுகளில் நினைத்ததை பேசவோ, எழுதவோ, உண்ணவோ,உடுத்தவோ, உரிமை கோரவோ,ஏன் வீட்டை விட்டு வெளியேறவோகூட அனுமதிக்கப்படாமல் இல்லத்திற்கு உள்ளாக இருட்டுக்குள்ளாக, இடைவிடாத இடுக்கண்களோடு,இருதய மற்ற மனிதர்களின் இரும்புக் கோட்டைக்குள் அடைபட்டு வாழும் பெண்கள் தான் உலகத்தின் பெரும்பான்மையானோர் என்பதை உணர மறுக்கின்றனர். மெய்யாகவே மகளிர் தான் தங்களுக்கு உயிர்மெய் தந்தவர்கள் என்பதை ஆண்கள் உணரும் பட்சத்தில் அவர்களை வெறும் உணவிற்காகவும், உல்லாசத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்தும் பழக்கத்தை நிச்சயமாக மாற்றிக்கொள்ள முடியும்.
வீட்டிலேயே வேலை இல்லாமல் இருக்க நேரிட்டாலும் எந்த வீட்டு வேலையும் செய்யாத ஆடவர் ஆயிரம் உண்டு.
நாட்டையே ஆளும் பெண்ணானாலும் தனது வீட்டு வேலையை செய்யாத பெண்ணை காண முடியுமா?
மூட்டை தூக்கும் தொழிலாளி முதல் லட்சங்களில் சம்பாதிக்கும் மென்பொருள் ஊழியர் வரை தங்களின் வருமானம் குறித்த உண்மையை தம் மனைவியிடம் கூறும் கணவன்மார்கள் எத்தனை பேர்? அரசாங்க வேலையில், பார்ப்பவர் பொறாமைப்படும் அளவிற்கு ஊதியம் ஈட்டினாலும் அவர்களின் பண எந்திர அட்டையை கூட பறித்து வைத்திருக்கும் கணவன்மார்கள் எத்தனை பேர்?
‘அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே’ என்பர். மக்களை நல்வழியில் வழிநடத்த வேண்டிய அரசும், அவர்களுக்கு துணை நிற்க வேண்டிய அதிகாரிகளிடமுமே நாம் பெண்களை அவதூறு செய்யும் அவமதிக்கும் வழக்கத்தை பார்க்க முடிகிறதே பின்னர் பொதுமக்களிடம் நியாயத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? பெண்களுக்கு இட ஒதுக்கீடு, சலுகை,பாதுகாப்புச் சட்டம் என்று சட்டசபையில் சத்தமாக பேசும் ஆட்சியாளர்கள் பெண்களுக்கு, மாணவிகளுக்கு, சிறுமிகளுக்கு, ஏன் பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நடக்கும் பாலியல் கொடூரங்களை முற்றிலுமாக நிறுத்துவதற்கு பலன் தரும் வகையில் ஏதேனும் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறதா? அரசு அலுவலகங்களில் கூட பல இடங்களில் சக ஆண் அதிகாரிகளின் இச்சைகளுக்கு இலக்காக தானே இன்னும் பல பெண்கள் உள்ளனர் அந்தக் கொடுமைகளை வெளியில் கூட சொல்ல முடியாமல் தங்களுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளும் அல்லல்படும் பெண்கள் எத்தனை பேர்?
ஆறில்லா ஊர் மட்டுமல்ல பெண் இல்லா வீடும் பாழ்தான். அதனை ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண்களும் உணர வேண்டும். பெண்களுக்கான வாழ்க்கைமுறையை தீர்மானிக்க பூமியில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் தனிப்பட்ட முறையில் உரிமை உண்டு. அது எப்பொழுது அவர்களுக்கு வசப்படுகிறதோ அன்று தான் அவர்களுக்கு உண்மையான மகளிர் தினம்.
Real Truth
Excellent!