‘சத்தான உணவே ஆரோக்கியமான வாழ்விற்கு ஆதாரம்‘ . இந்தியாவில் மட்டுமல்லாமல் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே பெரும்பாலான மக்கள் அதிகம் கவலை கொள்ளும் ஒரு பிரச்சனை அதீத உடல் பருமன். படிக்காத பாமர மக்களில் ஒரு பகுதியினர் பெரும்பாலும் தொழிற்சாலைகளில் மூட்டை தூக்கியோ அல்லது போக்குவரத்து துறையில் பொதுமக்களுக்காக சுமைதூக்கும் தொழில் செய்தோ வருகின்றனர் .ஆனால், நல்ல வசதியோடு விரும்பியதையெல்லாம் வாங்கி உண்ணும் ஆற்றல் படைத்த பல மனிதர்கள் தேவையற்ற உணவை மிகுதியாய் உண்டு பின்னர், உடலில் கொழுப்பு அதிகரித்து தங்களின் உடல் எடையையே தங்களால் சுமக்க முடியாத சூழலில் உள்ளனர்.
ஆரோக்கியத்திற்கு உகந்த உணவு எது ?தீங்கு விளைவிக்கும் உணவு எது ? என்று உண்பதற்கு முன்பே நன்கு தெரிந்தாலும் கூட , நாக்கு ஆசைப்படும் ஒரே காரணத்திற்காக நாம் நாக்கை விட அதிகமாகவே வளைந்து கொடுக்கிறோம். ஆனால், அல்லல் படுவதோ கடைசியில் வயிறு தான்.
‘யாகாவாராயினும் நாகாக்க‘ என்று வள்ளுவர் கூறியது நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளை மட்டும் தான் என்று நான் எண்ணவில்லை அது நாக்கு விரும்பியதை எல்லாம் உண்ணக்கூடாது என்று கூறும் அறிவுரையாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் உண்ணும் உணவு தான் நம் உடம்பில் வரும் பல நோய்களுக்கு முதற்கண் காரணமாக உள்ளது. பொதுவாக நமக்கு நோய் ஏற்பட்டால் அதனை தீர்க்க நாம் சாப்பிடுவது மருந்து. திருவள்ளுவரும் ‘மருந்து‘ என்ற அதிகாரத்தில் ஏழு குறட்பாக்களில் உணவைப் பற்றியும் அதனை நாம் உண்ண வேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் கூறியுள்ளார். நான் இதுபற்றி மேலும் நீட்டி முழக்காமல் நேரடியாக விடயத்திற்கு வருகிறேன் .நாம் இன்றைய உலகமயமாக்கலின் பல வசதிகளை அனுபவித்து வரும் காலகட்டத்தில் ,நமது நாட்டின் தட்ப வெப்பத்திற்கும் நமது உணவு கலாச்சாரத்திற்கும் பொருந்தாத பல உணவுகளை விரும்பியோ விரும்பாமலோ உண்ண வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மாறாக, இயல்பாகவே மனித சமூகத்தின் அன்றாட செயல்களில் இன்றியமையாததாக இருக்க வேண்டிய உடற்பயிற்சியை நம்மில் முக்கால்வாசி பேர் வாரம் ஒரு முறை கூட செய்வதில்லை. நாம் ஏன் தினசரி உடற்பயிற்சி செய்ய பழக்கப்பட வில்லை என்ற ஆராய்ச்சிக்குள் நாம் நுழைந்தோமானால் அது தனி ஒரு தலைப்பில் விவாதிக்கப்பட வேண்டியது. நான் இப்போது உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்த போவது இல்லை. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நாம் உண்ணும் உணவின் மூலமாகவே எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை மட்டும் பார்க்கலாம்.
உடல் பருமனை குறைப்பதில் இரண்டு விதங்கள் உண்டு.
ஒன்று , நாம் உண்ணும் உணவின் அளவை குறைப்பது.
மற்றொன்று ,உணவில் கலோரிகள் குறைவாக உள்ள உணவினை உண்பது.
நமது உடம்பிற்கு அனைத்து விதமான சத்துகளும் தேவை என்பதால் நமது உணவில் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, தாது,வைட்டமின்கள் போன்ற அனைத்து சத்துக்களும் அன்றாடம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். ஒரு சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 2,000 கலோரிகள் எரிசக்தி தேவைப்படுகிறது ,எடுத்துக்காட்டாக நாம் ஒரு நாளைக்கு உண்ணும் உணவின் அளவை குறைப்பது மூலம் 1,500 கலோரிகள் கிடைக்குமாறு செய்தோமானால் தேவைப்படும் மீதமுள்ள 500 கலோரிகளை நம் உடம்பில் தேக்கி வைத்திருக்கும் கொழுப்புச் சத்தில் இருந்து நம் உடல் தானாகவே எடுத்துக்கொள்ளும். எனவே கொழுப்பு குறைகின்ற காரணத்தால் உடல் எடையும் குறைய ஆரம்பித்து விடும். சரி அவ்வாறானால்,1500 கலோரி களுக்காக நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவு என்னென்ன என்ற கேள்வி வரும் .
நம் இந்தியர்களுக்கான உணவு அட்டவணை:
காலை – 3 இட்லி/ 3 தோசை சாம்பார், சட்னி
மாற்று உணவு 300 கிராம் அளவிற்கு பழத் துண்டுகளும் 25 கிராம் அளவிலான உலர் பழங்கள்.
மதியம் : 150 கிராம் அளவு சாதம் சாம்பார்,தயிர் ஒரு கோப்பை மற்றும் சாதத்தை விட இரண்டு மடங்கு காய்கறி (எண்ணெயில் பொரிக்காதது)
இரவு : இரண்டு சப்பாத்தி 200 கிராம் அசைவ கறி அல்லது இரண்டு முட்டை,சைவம் உண்பவர்களுக்கு கொண்டைக்கடலை 150 கிராம்.
மேற்கூறிய இந்த உணவு முறையை தொடர்ந்து கடைப்பிடிக்கும் பட்சத்தில் நிச்சயமாக உடல் எடையில் 10 கிலோ கிராம் வரையில் குறைக்க முடியும்.இந்த உணவு அட்டவணை தனிப்பட்ட முறையில் நான் தயாரித்தது அல்ல உலக அளவில் நல்ல பலன் தந்துள்ள உணவுமுறை. மேலும் ,உணவு முறையை கடைபிடிப்பவர் இரத்த அழுத்தம், சர்க்கரை, தைராய்டு,இருதய நோய், சிறுநீர் தொடர்பான நோய் போன்ற எவ்வித நோயும் இல்லாதவராக இருக்கும் பட்சத்தில் தாராளமாக அப்படியே பின்பற்றலாம். ஏதேனும் ஒரு நோய்க்கு சிகிச்சை எடுப்பவராக இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்த பின் முடிவெடுக்கலாம். இந்த உணவுமுறை , முதல் 10 நாட்களுக்கு உங்களுக்கு கடினமானதாகவும் ,சாப்பிட்ட பின்னரும் பசி அடங்காதது போலவும் தான் இருக்கும்.ஆனால் ,நிச்சயமாக அதன் பின்னர் உடல் உணவு முறைக்கு பழக்கப்பட்டு விடும்.…
Thanks for tip
you are welcome.