திருவிழா காசு

இன்றைய தலைமுறை சிறுவர் சிறுமியருக்கு திருவிழா காசு ஒரு பெரிய மகிழ்ச்சியை தர வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்களுக்கு வேண்டிய பொருள்களை, விளையாட்டு சாமான்களை திருவிழா காசு கொண்டு தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களின் பெற்றோர் அவர்கள் கேட்பதற்கு முன்பே விரும்பிய பொருளை வாங்கித் தரும் வழக்கத்தை கொண்டிருக்கின்றனர். திருவிழா காசின் அருமையை 90களின் குழந்தைகளான நாங்கள் தான் நன்கு அறிவோம். ஆண்டிற்கு ஒருமுறை வரும் திருவிழாக்கள் தான் எங்களை எங்களின் பெற்றோர் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வைத்தது. ஐயா, அப்பத்தா, சித்தப்பா,சித்தி அத்தை,மாமா,அக்கா,தங்கை தம்பி போன்ற உறவுகளை நேரில் பார்க்க மட்டுமல்ல அன்றைய காலகட்டங்களில் இன்றுபோல் தொலைத் தொடர்பு இல்லாததால் அவர்களுடன் பேசுவதும் கூட அன்றைய தினங்களில் தான்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கூடிவாழ்ந்தான்குடி கிராமம்தான் எங்கள் ஊர்.

எங்கள் வீட்டில் அண்ணனும்,  நானும்.முதல் சித்தப்பாவிற்கு ஒரே ஒரு பெண்பிள்ளை என்னை விட ஆறுமாதம் மூத்தவள். இரண்டாவது சித்தப்பாவிற்கு ஆண் ஒன்று பெண் ஒன்று. அத்தைக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை பேறு இல்லை.

 ஒரு திருவிழா நாளில் சித்தப்பாவும் அப்பாவும் வீட்டின் வாசலிலேயே நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து அப்போதைய அரசியல் நிகழ்வுகளைப் பற்றி காரசாரமாக பேசிக் கொண்டிருக்கையில், ஐயா எங்களுக்கெல்லாம் தின்பண்டங்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு நடக்கலானார். ஆனால் அவருக்கு தெரியாமலேயே நாங்கள் வருவதற்கு சில நாட்களுக்கு முன்னரே அப்பத்தா எங்களுக்காக பலகாரங்கள் செய்து பரணியிலே மறைத்து வைத்திருந்தார். சித்திகளும், அம்மாவும், அத்தையோடு அவரவர் பக்கத்துவீட்டு கதைகளை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அக்காவும் தங்கையும் பக்கத்து வீட்டு தோழிகளுடன் எங்கள் வீட்டை ஒட்டி இருக்கும் அந்தோனியார் தேவாலயத்திற்குள் ஏறி குதித்து உள்ளே சென்று ஒளிந்து பிடிக்கும் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

 எங்கள் வீட்டிற்கு எதிரே இருந்த பொது பாதையின் வடதிசையில் தான் காஜா மாமாவின் வீடு. என் அப்பாவின் பால்ய நண்பர். நாங்கள் திருவிழாவிற்கு வந்திருப்பதை அறிந்து எங்களைப் பார்ப்பதற்காக வேகவேகமாக எங்கள் வீட்டை நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார். நாங்கள் திருவிழாவிற்கு வரும்போதெல்லாம் இரண்டு நாட்கள் எங்கள் கூடவே தான் இருப்பார். வருடத்திற்கு ஒரு முறை தான் வருகிறோம் என்பதாலும் மிகவும் பழைய காலத்து வீடு என்ற காரணத்தாலும் எங்கள் வீட்டில் அய்யா கழிவறை  கட்டயிருக்கவில்லை. எனவே திருவிழா சமயங்களில் நாங்கள் வருகின்ற போது எங்கள் வீட்டுப் பெண்கள் அனைவரும் அவரது வீட்டிற்கு வெளியே இருக்கும் அவர்களது கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள சொல்லி இருந்தார்.

 “வாங்க மாப்பிள்ளைகளா ” என்று கூப்பாடு போட்டுக் கொண்டே வந்தார் காஜா மாமா . சித்தப்பாக்கள் இருவருடனும் கைகுலுக்கிக் கொண்டவர், அப்பாவை கட்டி தழுவிக்கொண்டார்.

 “என்ன மாப்ள, தங்கச்சிக்கு இப்ப உடம்பு எப்படி இருக்கு?”

 “இப்ப மாத்திரை அதிகம் இல்லை மச்சான் உடம்பும் பழைய மாதிரி இருக்காப்ல தான் தெரியுது” என்று பதிலளித்தார் சித்தப்பா.

 “சரி மாப்ள வா முதல்ல உன் இடத்தை போய் பாத்துட்டு வந்துருவோம்”. என்று அப்பாவை அழைத்தார்.

 அத்தெருவில் உள்ள சிறுவர்களோடு, அண்ணனும் நானும் ஒரு பனை மரக்கட்டையை கொண்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தோம். நான் பேட் பிடிக்கையில் கவனக்குறைவால் மட்டையில் இருந்த சிலாம்பு பிசிர் என் கைக்குள் ஏறியது. எனக்கு வலி தாங்கமுடியவில்லை சிலாம்பை எடுப்பதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. எனது வேதனையை பார்த்த தங்கை,”ஏன் இந்த கட்டயெல்லாம் வச்சு விளையாடுற” என்று கடிந்து கொண்டாள். பின்னர் அவளே சென்று அப்பத்தாவை கையோடு அழைத்துவந்து பிசிறை எடுத்துவிட செய்தாள். அப்பொழுது தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு தூரத்தில் ஐயா வந்து கொண்டிருப்பதை பார்த்து விட்ட தம்பி.” ஏய் மிச்சர், வருக்கி எல்லாம் வாங்கிக்கிட்டு அய்யா வராரு… ” என்று தண்டோரா போட, அடித்துப் பிடித்துக்கொண்டு அனைவரும் வீட்டிற்குள் வருகை பதிவு செய்து கொண்டோம். ஐயா தனது சாய் நாற்காலியில் அமர்ந்தபடியே எங்களுக்கு அத்தை தின்பண்டங்களை பங்கிட்டுக் தருவதையும், நாங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு பரிமாறப்பட்ட தட்டுகளாக உருவிக் கொண்டு ஓடுவதையும் இரசித்து சிரித்த பொழுது, பற்களில் இருந்து வெற்றிலைச்சாறு அவரது உதட்டுக்கும் கீழே வழிந்து ஓடியது.

அப்போது தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தின்பண்டங்களை சாப்பிட்டு முடித்து இருந்த அண்ணன், கடைசியாக பரிமாறப்பட்ட தட்டிலிருந்து ஒரு லட்டை எடுத்து லபக்கென்று விழுங்கி விட்டான்.அது அக்காவுக்காக பரிமாறப்பட்ட தட்டு என்பதால் அவளுக்கும் அண்ணனுக்கும் சிறியதாக ஆரம்பித்த சண்டை, கடைசியில் அய்யாவின் வெள்ளி வெற்றிலைப் பெட்டியை கொண்டு அண்ணனின் மண்டையில் அக்கா அடிக்கும் அளவிற்கு பெரிதாகியது. அண்ணனின் மண்டை எலுமிச்சம் பழம் அளவிற்கு வீங்கியிருந்தது. இதனை கவனித்த சாந்தி சித்தி,அக்காவின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்ததில் அக்காவின் கன்னத்தில் சித்தியின் மூன்று விரல்களின் தடம் அப்படியே பதிந்திருந்தது. ஆனால் அக்கா சற்று கூட அளவே இல்லை. அக்கா அவர்களது வீட்டில் சித்தியிடம் இவ்வாறு அடிக்கடி அடிவாங்கி பழக்கப்பட்டவள்தான்.

 “அவனுக்கு தான் ஏற்கனவே கொடுத்தாச்சுல்ல அப்புறம் எதுக்கு என் தட்டிலிருந்து எடுக்குறான்?” என்று கோபமாய் கத்தினாள். தம்பி கொடுத்த தகவலின் பேரில் அடுப்படியில் இருந்து அனைவரும் வந்து அண்ணனின் காயத்தை பரிசோதித்துக் கொண்டு இருந்தனர். அப்பத்தா கொடுத்த கோடாரி தைலத்தை கொண்டு அத்தை வீக்கத்தில் நன்கு அழுத்தி தேய்த்து விட்டார்.”ஏன்டி ஏற்கனவே குடுத்தா என்ன? உன் அண்ணன் தானே அவனுக்காக நீ கொடுக்க கூடாதா? இதுக்கு போயா இப்படி சண்டை போட்டுக்குவாங்க?” என்றார் சாந்தி சித்தி.

 நல்லவேளையாக அப்பாவும் சித்தப்பாவும் அவ்விடத்தில் இல்லை. காஜா மாமா அப்பாவையும் சித்தப்பா களையும் அழைத்துச் சென்றிருந்தது எங்களது இடத்தை பார்வையிட தான்.

 ஊரின் எல்லைப் புறத்தில் நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் ஐயாவிற்கு பத்து சென்ட் இடம் இருந்தது. அதில் அவரது மகன்கள் மூவருக்கும் 3 சென்ட் களும் எங்களது அத்தைக்கு ஒரு சென்ட் இடமும் சென்ற ஆண்டு எழுதி வைத்திருந்தார்.

 சித்தப்பாக்களின் இடங்களை அவர்கள் நான்கு மாதங்களுக்கு முன்புதான் ஐயா எவ்வளவு சொல்லியும் கேட்காமல், வியாபார வளர்ச்சிக்கு தேவை என்று ஒரு சித்தப்பாவும், சித்ரா சித்தியின் இருதய அறுவை சிகிச்சைக்காக மற்றொரு சித்தப்பாவும் 40 ஆயிரம் ரூபாய்க்கு மொத்தமாக சிதம்பரம் செட்டியாரிடம் விற்றிருந்தனர். பின்னர் அப்பா அவர்களது இடத்திற்கு, செட்டியார் விலை மிகவும் குறைவாக தந்து இருப்பதாகவும் கூடுதலாக 10 ஆயிரம் இருவருக்கும் தருமாறும் அந்தோணியார் கோயில் பொறுப்பாளரான சகாயம் ஐயாவையும், காஜா மாமாவையும் கூட்டிக்கொண்டு செட்டியாரிடம் போய் சண்டை கூட போட்டார். ஆனால் எதற்கும் சிதம்பரம் செட்டியார் செவிசாய்க்கவில்லை.

“அடேய் பெரியவன் மகனே..” என்று அப்பத்தா அழைப்பதைக் கேட்டும் எனது கவனம் வேறு திசையில் சென்றது.” அன்பார்ந்த கூடிவாழ்குடி பொதுமக்களே, திருவிழா காண வந்திருக்கும் அதிதிகளே, இன்று மாலை சரியாக ஆறு முப்பது மணி அளவில் நமது பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள கால்பந்து மைதானத்தில் கூடிவாழ்குடி இளைஞர்கள் நடத்தும் 14வது மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் அம்மனை தரிசித்து அருகிலேயே நடைபெறவிருக்கும் கபாடி போட்டிக்கும் பார்வையாளர்களாக தவறாது கலந்து கொண்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு விழா கமிட்டியின் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்ளப்படுகிறது”,என்ற அறிவிப்பை ஆட்டோவில் இருந்த பெரியவர் ஒலிபெருக்கியில் முழங்கிக்கொண்டே சென்றார்.

“அண்ணே உன்னைத்தான் அப்பத்தா ரொம்ப நேரமா கூப்பிட்டுக்கிட்டு இருக்கு”. என்றாள் தங்கை.

 “சொல்லு அப்பத்தா..”

“உன் அப்பன்,சித்தப்பன் எல்லாம் நம்ம இடத்துக்கு போய் இருக்காங்க பொழுது சாயுற நேரத்துக்கு இளந்தாடிக்கார பயலுக காட்டுக்குள்ள போய், முயல் புடிச்சிட்டு வரப்பபோவாங்க நமக்கு ரெண்டு முயல் வேணும்னு அவங்க கிட்ட சொல்லிவிட சொல்லு” என்றார். என்னுடன் தங்கை வளரையும் கூட்டிக் கொண்டேன், வீட்டை விட்டு இரண்டடி தான் நடந்திருப்போம் என் கையை உதறிவிட்டு வேகமாக வீட்டினுள் நுழைந்த அவள், ஐயாவிடம் சென்று

” ஐயா.. “, என்று கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு தயங்கியவாறே நின்றிருந்தாள்.

 அவளைப் பார்த்த ஐயா “கழுதை, திருவிழா காசு தானே?.. ” என்றதும், வளருக்கு அப்போதே திருவிழா இராட்டினத்தில் சுற்றிய மகிழ்ச்சி.

 “நாளைக்கு தான் தருவேன் உனக்கு மட்டும் தனியா தர முடியுமா? நல்லா விவரமா இருக்கியே உன் ஆத்தா மாதிரியே?”

 “என்ன மாமா, இப்போ என்ன நாங்க விவரமா இருந்து சொத்து சேர்த்து வச்சிருக்கோம்?” என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்தார் சித்ரா சித்தி. வீட்டின் முன்னறையில் சித்தி இருந்ததை கவனிக்காத ஐயா சற்றே,தான் மருமகள் இருக்கிறாள் என்று தெரியாமல் பேசியது குறித்து தனது தப்புக்காக நுனி நாக்கை பற்களால் கடித்து கொண்டாலும் பின்னர், தான் பேசியது நியாயம்தான் என்று காட்டும் விதத்தில்,

“பின்ன..,உங்களுக்கு கொடுத்த இடத்தை முடியல ஆத்தலன்னு உடனே விக்க வச்சுப்புட்டல்ல அதை தான் சொன்னேன்”.

” உடம்புக்கு வியாதி எல்லாம் சொல்லிட்டு வருமாக்கும், நான் என்னமோ முடியாம இருக்கிறதா நடிச்ச மாதிரில பேசுறீங்க? ” என்று சித்தி கோபத்தில் சத்தமாகப் பேசிக் கொண்டிருக்கும்போதே,

” அண்ணி இப்ப ஏன் அவரோட சரிக்கு சரி பேசிக்கிட்டு இருக்கீங்க? விடுங்க அவர் இப்படித்தான் என்னத்தையாவது சொல்லிக்கிட்டு இருப்பாரு, யப்போய் வாயில போட்ட வெத்தலைய மென்டு துப்பியாச்சுன்னா, மறுபடி 4 வெத்தலைய போட்டு மெல்லு, வாய் சும்மா தானே இருக்குன்னு யாரு சேதியையாவது போட்டு மென்னு கிட்டு இருக்காத”. என்று கறாராகக் கூறினார் அத்தை. பின்னர் நானும், தங்கையும், திருவிழா கடைகளையும், இராட்டினங்களையும், ஐஸ் வண்டிகளையும், வேடிக்கை பார்த்துக்கொண்டே எங்களது இடத்தை அடைந்தோம். கருவேல மரத்தை ஒட்டி இருந்த தும்பை செடியில் இரண்டு வண்ணத்துப்பூச்சிகள் விளையாடிக் கொண்டிருந்தன, அதைப் பிடிக்க ஆவலோடு அதனருகே முன்னேறிய தங்கை, செருப்பு போடாததால் கருவேல முள் ஒன்றைக் காலில் குத்திக் கொண்டாள். சற்றுமுன்னர் யாரோ முள்ளை வெட்டி இழுத்துச்சென்றிருக்க வேண்டும் அதில் சிதறிய ஒரு முள்தான் அவளது பாதத்தை பதம் பார்த்திருக்கிறது. முள் குத்திய வேகத்தில் தடுமாறி மேலும் ஓர் அடி எடுத்து வைக்க முள்ளின் முனை ஒடிந்து பாதத்திலேயே தங்கிவிட்டது. மீண்டும் ஒற்றைக் காலைத் தூக்கி தடுமாறியவளை கைத்தாங்கலாக பக்கத்தில் இருந்த கல்லின் மீது அமர வைத்தேன்.முள்ளை எடுக்க முயன்று பலனற்றுப் போகவே எருக்கம்பால் எடுக்க விரைந்தேன்.

 அப்போது சகாயம் ஐயா, அப்பா,சித்தப்பாக்களுடன் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது.

“அய்யாவு,உங்க  இடத்துக்கு பின்னாடிதான் இந்தப் பள்ளிக்கூடம் வரப்போகுதுன்னு முன்னாடியே அந்த ஆளுக்கு தெரிஞ்சிருக்கு அதுதான் உங்க சூழ்நிலைய பயன்படுத்தி அவசர அவசரமா ரெண்டு பேரோட இடத்தையும் வாங்கிப் போட்டிருக்கான். உங்ககிட்ட 40 ஆயிரம் கொடுத்து வாங்கிட்டு அந்த ஆறு செண்டையும் இலட்சத்தி இருபது ஆயிரத்துக்கு வீரப்ப முதலியாருக்கு எழுதிக் கொடுத்திருக்கான். உன் இடத்துலதான் பள்ளியோட முகப்பு வருது அதுதான் இப்போ உங்க இடமும் வேணும்கறாப்ல”.

” மாமா நான் ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் இவங்க ரெண்டு பெரும் இடத்தை வித்ததுலயே எனக்கு உடன்பாடு இல்லை, இப்ப அவரு கேக்குற எம்புட்டு இடத்தில தான், என் தாத்தன பொதச்சிருக்கு, இதை நான் எப்படி கொடுப்பேன்? “.

 இதற்கிடையில் நான் எருக்கம் பாலை எடுத்து முள் குத்திய வாயில் லேசாக தடவி விட்டேன்.

“ஐயா எனக்கு நீ சொல்றது புரியுது,அவரு என்னைக் கேட்கச் சொன்னார் கேட்டேன்”.

“யோவ் சித்தப்பு அவர் சொன்னா நீ கேட்பியா? ஆளையும் மண்டையும் பாரு..”.

“காசா நான் உன் கிட்ட பேசல”.

“அட பேசாம இருங்கப்பா உங்க பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தா இருக்கு” என்றார் சித்தப்பா.

“கடைசியா ஒன்னு சொல்லிக்கிறேனப்பா உன் தம்பிகளுக்கு அந்த ஆறு சென்டுக்கு செட்டியார் கொடுத்த பணம் 40ஆயிரம், இப்ப உன் அதிர்ஷ்டம் இந்த மூனு சென்டுக்கு மட்டும் ஒரு லட்சம் தறேன்கிறாரு, நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உன் பாடு”.

 இப்போது காலை எடுத்து பார்க்கையில், முள் நன்றாக தெரிந்தது, ஊக்கை கொண்டு முள்ளை எடுத்தபின்,அப்பத்தா சொல்ல சொன்ன செய்தியை அப்பாவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து நடக்கும் முன், என் செருப்பை கழற்றி தங்கையிடம் கொடுத்து மாட்டிக் கொள்ளச் சொன்னேன். எனது செருப்பு அவளுக்கு மிகவும் பெரியதாக இருந்ததால் அவள் நடக்கும் பொழுது அடிக்கு ஒருமுறை கழன்று கொண்டே வந்தது, ஆனால் அது கூட அவளுக்கு ஒரு விளையாட்டாய் அமைந்தது.

 நாங்கள் ஊருக்குள் வந்தடைந்த நேரத்தில் சரியாக நாட்டார் அழைப்பு நிகழ்ச்சி நடந்து  கொண்டிருந்தது. அந்நிகழ்ச்சியில் எப்போதும் பழமையான இசைக்கருவிகளை வாசித்து நாட்டார்க்கு மரியாதை செலுத்துவது வழக்கம்,அதில் ஒரு கருவியை பார்த்தாலும், அதில் இருந்து வரும் இசையை கேட்டாலும், எனக்கு சிறு வயதிலிருந்தே மிகவும் பயம். அக்கருவி பார்ப்பதற்கு பாம்பு தலையை தூக்கி படமெடுத்து நிற்பது போலவும், அதன் இசை சங்கிலிருந்து வரும் ஒலியை போன்றும் இருக்கும். தங்கையை இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாய் வீடு வந்து சேர்ந்தேன். அண்ணன், அக்கா,தம்பி அனைவரும் புத்தாடை அணிந்து கோயிலுக்கு செல்வதற்கு தயாராக இருந்தனர். அதுவரை முள் குத்தியதால் மெதுவாக நடந்து வந்த தங்கை, வீட்டின் அருகே வந்ததும் ஓட்டமாய் வீட்டிற்குள் ஓடினாள் உள்ளேயிருந்த ஐயாவிடம் சென்று,

 “ஐயா எல்லாருக்கும் திருவிழா காசு கொடுத்துட்டீங்களா? ” என்றாள் ஆவலாக.

“நான்தான் சொன்னேன்ல, நாளைக்குதான்” என்றார் தனது அலமாரியில் எதையோ தேடிக் கொண்டே. நானும்,தங்கையும் உடைமாற்றிக்கொண்டு அவர்களோடு சேர்ந்து கொண்டோம். ஐயாவும் தேடிப்பிடித்து அணிந்த தனது வெள்ளை நிற ஜிப்பாவுடன் தலைமை தாங்கி எங்களை அழைத்துக் கொண்டு கோயிலை நோக்கி முன்னே சென்றார். இராட்டினம் விளையாடும் சிறார்கள் எழுப்பிய ஆரவாரம், எங்கள் அனைவரையும் வேறு எங்கும் கவனிக்க விடாமல் செய்தது. மேலும் தங்கையும் சேர்ந்து கொண்டு, அவளே இராட்டினத்தில் போவதைப் போல் அவர்களோடு ஒருமித்த குரலில் ஆர்ப்பரித்தாள். ஐயா அவளது மகிழ்ச்சியை கண்டு மனமிறங்கி,

 ” என்ன குட்டி நீயும் சுத்துறியா? ” என்றார்.

 உடனே, ” ம்.. ம்.. ம்..” என்று வேகமாய் தலையை ஆட்டி கொண்டு அடுத்த சுற்றுக்கு காத்திருந்தாள். அக்கா தம்பி தங்கை மூவரையும் தாத்தா ராட்டினத்தில் ஏற்றிவிட ஒத்துக்கொண்டபின்,

 “சீறிப்பாயுர காளை முடிஞ்சா புடிச்சு பாரு.., சிவகங்கை அணியோட நட்சத்திர வீரர் மருது களத்தில இறங்கிருக்காப்ல, பொதுமக்களே,திருவிழாவுல அங்கே இங்கே வேடிக்கை பார்த்தது போதும், உங்க தொலைஞ்சு போன இளவட்டங்களை தேட வேணாம், நம்ம மருது பாடி வரத பார்த்துகிட்டு எல்லாரும் இங்கதான் இருக்காங்க. மைதானத்தை நோக்கி நீங்களும் ஓடியாங்க” என்று காஜா மாமா வர்ணனை செய்வது, கேட்பதற்கு நகைப்பாகவும், போட்டியை பார்க்க தூண்டவும், நானும் அண்ணனும் அய்யாவிடம் கண்ணை காட்டிவிட்டு சடுகுடு சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடினோம். களத்தில் விளையாடிய ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தனி பாணியும், பாட்டும் இருந்தது பார்ப்பவரை பெருங்கூச்சலிட செய்தது. எங்கு பார்த்தாலும் கைதட்டல்,  இளசுகளின் பெருவிரலும் ஆள்காட்டி விரலும் போட்டிகள் முடியும் வரை அவரவர், வாயிலேயே இருந்தது. சற்று நேரத்தில் என் தம்பி, தாத்தாவோடு பேத்திகளும், எங்களுடன் போட்டியை இரசிக்க மைதானத்திற்கு வந்து விட்டனர். ஒரு சில வீரர்களின் உடற்கட்டு, நானும் உடற்பயிற்சி செய்து இவர்களைப் போல் உடம்பை மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை என் மனதில் விதைத்தது. இரவு மணி 9க்கு மேல் ஆகிவிட்டது வீடு வந்து சேர, அனைவருக்குமே சரியான பசி. வழியிலேயே தூங்கிப் போன பாப்பாவை, அண்ணன்தான் தூக்கி வந்தான். நாங்கள் வீட்டினுள் நுழைந்த பொழுது வீடு தேர்வு மையத்தை போல் பேரமைதியாய் இருந்தது.

சித்தப்பாக்களும் மாமாவும் வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்து  இருந்தனர். அப்பத்தா முத்தத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் கண்களை மூடி படுத்திருந்தாள். நாங்கள் அனைவருமே நேராக அடுப்படிக்குள் சென்றோம். அடுப்படியின்  முதற்கட்டில் சித்திகள் இருவரும் எதிரெதிரே அமர்ந்து சுவற்றில் சாய்ந்த படியே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் இருந்தனர்.

 “சித்தி பசிக்குது” என்று நான் கூறியதும்,என் முகத்தை பார்த்துவிட்டு, தலையை இடது புறமாக திருப்பி இரண்டாம் கட்டை சுட்டிக்காட்டினார் சாந்தி சித்தி . உள்ளே அம்மா குழம்பை சுடவைத்து கொண்டிருந்தாள்.

 நாங்கள் அனைவரும் ஆளுக்கு 4,3,5 என்று அவரவர் பசிக்கு ஏற்ப இட்லிகளை சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்துவிட்டு நான் முகப்பிற்கு வந்தேன். “ஏம்பா நீங்க எல்லாம் சாப்டறீங்களா இல்லையாப்பா இப்போ, இப்படி பட்டினியா கிடக்கிறதுக்குத்தான் திருவிழாவுக்கு வந்தீங்களா?” என்ற  தாத்தாவின் குரலில் கோபத்தை விட தழுதழுப்பே அதிகமாயிருந்தது.

 “பின்ன என்ன மாமா, அந்த எடத்த ஒரு லட்ச ரூபாய்க்கு கேட்கிறான் அந்த ஆள், யார் கொடுப்பா அந்த இடத்துக்கு இவ்வளவு காசு? வித்துப்புட்டு எங்க ரெண்டு பேருக்கும் ஏதோ அவரால முடிஞ்ச காசு கொடுக்கலாம்ல நாங்க இப்ப கஷ்டத்துல தானே இருக்கோம்?”

 “உங்களுக்கு எப்ப தான் கஷ்டம் இல்லாம இருந்துச்சு?” என்றாள் அத்தை சற்று நக்கலாக.

“ஏ ஆத்தா உனக்கும் சேர்த்துதான் நாங்க பேசுறோம் எங்களுக்கு ஆளுக்கு 20, 20  ஆயிரம் கொடுத்தாலும் உனக்கு பத்தாயிரம் கொடுக்க மாட்டாரு?” இது சித்ரா சித்தி.

உடனே தாத்தா சற்று கோபமாய்,

 “இங்க பாருங்கம்மா ஏற்கனவே நீங்க அந்த இடத்தை வித்ததே எனக்கு சுத்தற புடிக்கல இப்ப இந்த இடத்தையும் விக்க சொல்றீங்க நாள பின்ன வீடு வாசி கட்டுறதுக்கு உங்களுக்கு ஒரு இடம் வேண்டாம்?”

 “என்ன மாமா பேசுறீங்க உங்க காலத்துக்கு அப்புறம் நாங்க இந்த ஊர்ல வந்து வீடு கட்டி வாழப்போறோம்னு நினைக்கிறீங்களா? ஏதோ திருவிழா தேவையின்னு வந்துட்டா கோயிலுக்கு வந்துட்டு அப்படியே போயிட போறோம் அப்படி இல்லையா இந்தா இருக்கே பொது வீடு,இங்க இருந்துட்டு போ போறோம்”.

 “சரித்தா அப்படியே பாத்தாலும் அது அவனோட இடம் அத விக்கணுமா வேணாமான்னு அவன் தான் முடிவு பண்ணனும்”.

உடனே சாந்தி சித்தி, “சரியா போச்சு, அப்புறம் எதுக்கு பெரியவங்க நீங்க  இருக்கீங்க எடுத்து சொல்லுங்க, உன் தம்பிக இரண்டு பேரும் அன்னிக்கு விவரம் இல்லாம அந்த இடத்தை அடிமாட்டு விலைக்கு வித்துப்பிட்டாங்க, பாவம் ரொம்ப கஷ்டப்படுறாங்க, இன்னைக்கு அது நல்ல விலைக்கு போகுது,நீ  இடத்தை வித்து அம்பது எடுத்துக்கிட்டு மீதிய தம்பிகளுக்கும் தங்கச்சிக்கும் பிரிச்சு கொடுத்துரு அப்படின்னு நீங்க தானே எடுத்துச் சொல்லணும்?”

 தாத்தா அம்மாவின் முகத்தைப் பார்த்தார்.

 “நாங்க அக்காட்ட ஏற்கனவே பேசிட்டோம் அவங்க எதுவும் வாயை தொரக்கற மாதிரியே இல்லை” என்றாள் சித்ரா சித்தி.

 “இதுல நான் என்ன சொல்றதுக்கு இருக்கு உங்க மச்சான் தான் முடிவு எடுக்கணும்னு  நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே?” என்று இந்தப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக வாய் திறந்தாள் அம்மா.

 அப்போது தூரத்தில் காஜா மாமா வீட்டின் அருகே நின்று கொண்டு அப்பா காஜா மாமாவின் அம்மாவிடம் ஏதோ சொல்லிவிட்டு எங்கள் வீட்டை நோக்கி நடந்தார்.

 அதைப்பார்த்ததும் சித்திகள் இருவரும் சத்தமில்லாமல்  வீட்டிற்குள்ளே சென்றது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.

 அருகில் வந்ததும் அப்பாவிடம் தாத்தா, ” ஏம்பா அந்த இடம்… ” என்று முடிப்பதற்குள்,  “அவங்களுக்குதான் புரியலைன்னா உங்களுக்குமா புரியல? உங்க அப்பாவ அங்கதானே அடக்கம் பண்ணியிருக்கோம் அந்த இடத்தை போய் எப்படி விக்க முடியும்? நீங்க பேசாம இருந்தீங்கன்னா போதும் அவங்க கோவிச்சுக்கிட்டா கோவிச்சுக்கட்டும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை”.

 நெடுநெடுவென்று வீட்டின் வெளியே வந்த சித்ரா சித்தி, “ஆனா ஒன்னு மாமா இனிமேல் திருவிழா, தேவன்னு எங்களை கூப்பிடாதீங்க இனிமே எந்த திருவிழாவுக்கும் நாங்க வர்றதா இல்லை”. என்று கூறிவிட்டு,

“இன்னும் எதுக்கு உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க, வாங்க நேரத்தோட போய் படுக்கலாம், காலையில மொத வண்டிய புடிச்சு  ஊருக்கு போகணும்” என்று சித்தப்பாவிடம் கூறிவிட்டு வீட்டின் உள்ளே சென்றார்.

 அனைத்து பெரியவர்களும் மனதில் ஒவ்வொன்றை நினைத்துக் கொண்டு வெகுநேரம் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தனர், வீட்டின் பேரமைதியில் தூரத்தில் நடந்துகொண்டிருந்த வள்ளி திருமண நாடக வசனங்கள் மட்டும் தெள்ளத் தெளிவாய் கேட்டது. ஆனால் அதற்கு மேல் என்னால் தூக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. திடீரென்று என்னை யாரோ எழுப்புவதை உணர்ந்து கண்களை விழித்து பார்த்தேன் அருகில் தங்கை நித்யா, “அண்ணே நான் போயிட்டு வரேன்”

என்று கவலை தோய்ந்த முகத்தோடு எனக்கு ‘டா டா’ காண்பித்தாள். தலையசைப்பதைத் தவிர எனக்கு வேறு எதுவும் செய்ய  தோன்றவில்லை.

 அதன் பிறகு அனைவரும் மெதுவாக குளித்து கிளம்பி அவரவர் ஊர்களுக்கு புறப்பட தயாரானோம். ஐயா ஒவ்வொருவருக்கும் ஆசிகள் வழங்கி திருவிழா காசு கொடுத்தார். எனக்கு தங்கையின் ஞாபகம் வந்தது.

 “ஏன் ஐயா வளருக்கு திருவிழா காசு கொடுத்துடீங்களா? “

 “வாங்காம நகர்வாளா இந்த இடத்தைவிட்டு அவ? கருக்கல்லயே என்னைய எழுப்பி காசு கொடுன்னு கேட்டு வாங்கிட்டா “

 வேலு சித்தப்பா குடும்பம் சென்று அரை மணி நேரம் கழித்து நாங்களும் ஐயா அப்பத்தாவிடம் விடைபெற்றுக்கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு சென்றோம். சைக்கிளில் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த காஜா மாமா, தன் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டையும், தண்ணீர் பாட்டிலையும் எங்களிடம் கொடுத்தார்.

 “அப்புறம் மாப்ள இடத்தைப் பத்தி எதுவுமே சொல்லாம போற, கடைசியா என்னதான் முடிவெடுத்து இருக்க?” என்று அப்பாவிடம் வினவினார். பேருந்து சற்று தூரத்தில் வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

” இப்போதைக்கு விக்கிற மாதிரி எந்த யோசனையும் இல்லை”. என்று கூறிவிட்டு மேலும் ஏதோ சொல்ல எத்தனிக்க, அதற்குள் பேருந்து, நிறுத்தத்திற்கு வந்துவிடவே, “சரி அப்புறம் பேசிக்குவோம்”.

 நாங்களும் அவருக்கு கையசைத்து விட்டு பேருந்தில் ஏறினோம். முக்கால்வாசிப் பேர் நாங்கள் ஏறிய நிறுத்தத்தில் இறங்கியதால் பேருந்து காலியாகவே இருந்தது. நானும் அண்ணனும் தனித்தனி இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம்.  எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்திருந்தனர். அது அரசு பேருந்து என்பதால் பாட்டு  சத்தமில்லாமல் பயணிக்க மனதிற்கு அமைதியாய் இருந்தது. அப்பாவும் அம்மாவும் பேருந்திலும்  இடப் பிரச்சனை குறித்தே பேசிக் கொண்டு வந்தனர்.

“ஏன் காஜா அண்ணன்கிட்ட அப்படி சொன்னீங்க?”

” என்ன சொன்னேன்?”

 “இல்ல இப்போதைக்கு விக்கிற யோசனை இல்லைன்னு சொன்னீங்களே?”

 “ஆமா அதுக்கு என்ன இப்போ? “

 “அப்படின்னா பின்னாடி விக்கிற மாதிரி யோசனை இருக்கோ? “

“ம்”

 “அப்புறம் எதுக்கு ஐயா சமாதி அப்படி இப்படின்னு உருக்கமா பேசினீங்க?”

 “நான் மட்டும் அப்படி பேசலனா,நம்ம இடத்தை என்னைய விக்க வெச்சிட்டு தான் மறுவேலை பாப்பாங்க , இப்பதானே பள்ளிக்கூடம் கட்ட ஆரம்பிச்சு இருக்கானுக, இன்னும் ஒரு ஆறு மாசம் போகட்டும், ரோட்டு இறக்கத்தில முதல்ல நம்ம இடம்தான் அதைத் தாண்டித்தான் அவன் பள்ளிக்கூடமே வருது.

 அதனால கண்டிப்பா இன்னும் ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் சேர்த்து தருவான் ஆனா அது வரை நம்ம எதுவுமே பேசாமல் பொறுமையா இருக்கணும்.”

” அப்போ ஒன்றரை லட்சம் கிடைச்சுதுன்னா உங்க தம்பிகளுக்கும் தங்கச்சிக்கும் ஆளுக்கு  கொஞ்சம் பணம் கொடுபிங்களா?”

 “கொடுப்பேன்,ஆனா ஒரு லட்சத்துக்கு வித்ததா தான் அவனுங்ககிட்ட சொல்லுவேன், அப்பத்தான் அண்ணன் நமக்காக செஞ்சாருன்னு நாளைக்கு நம்ம என்ன சொன்னாலும் கேப்பானுங்க.”

 அப்பாவின் செயலுக்குப் பின்னால் இருந்த இவ்வளவு பெரிய சதியை நான் அப்போதுதான் தெரிந்து கொண்டேன். வீடு வந்து சேரும் வரை,எனக்கு அப்பா தன் உடன் பிறந்த தம்பிகளிடமே இவ்வாறு ஏன் போலியாக  நடந்துகொள்கிறார் என்ற யோசனையே இருந்தது.

” டேய் என்ன நானும் வந்ததிலிருந்தே பார்த்துகிட்டு இருக்கேன் என்னமோ யோசிச்சுக்கிட்டே இருக்க? உன் பையிலிருந்து அழுக்குத் துணி எல்லாம் எடுத்து வெளியில் போடு துவைக்கணும்” என்றாள் அம்மா.

 துணிகளை எடுத்து வெளியில் போடும் பொழுது  என் பேக்கிர்க்குள் ஒரு காகிதம்,கடிதத்தை போல் நான்காக மடித்து இருப்பதை பார்த்தேன். அதைப் பிரித்து பார்க்கையில் உள்ளே ஒரு முழு 50 ரூபாய் நோட்டு இருந்தது. அந்த காகிதத்தில் ஏதோ கடிதம் போல எழுதி இருந்தது. “அண்ணே தாத்தா கொடுத்த திருவிழா காசு அம்பது ரூபா இதுல வச்சிருக்கேன், நீ விளையாட பேட் இல்லைன்னு சொன்னல்ல இந்த காசையும் தாத்தா உனக்கு குடுக்கற திருவிழா காசோட சேத்து ஒரு நல்ல பேட்டா வாங்கிக்கண்ணே” என்ற பொருள்பட என் தங்கையின் பிஞ்சுக் கரங்களால் எழுத்துப் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது . எந்தப் பருவத்தில் மனிதன் சுயநலமாய் மாறுகிறான் என்ற கேள்வி எனக்குள் உதித்தது.

(Visited 100100 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =