வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க முடியாதவர்களிடம், அவர்கள் மனம் விட்டுப் பேசும் தருணத்தில், அவர்களின் இலட்சியங்களை ஏன் அவர்களால் அடைய முடியவில்லை என்று கேட்டால்,அவர்களில் பெரும்பாலானோர் கூறும் பதிலில் ஒரு ஒற்றுமையைக் காண முடியும். வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க துடித்த போது தங்களை ஊக்குவிக்க யாரும் இல்லை அதனால் தான் வெற்றி இலக்கை தங்களால் அடைய முடியவில்லை என்பர்.
அப்படியானால் நாம் வாழ்வில் முன்னேறிட நமது இலட்சியங்களை அடைய நிச்சயமாக வெளியிலிருந்து நமக்கு உந்து சக்தி வேண்டும் என்று கூறலாகுமா?
நம் வாழ்வில் நாம் சாதிக்க பல நேரங்களில் பிறரின் நேரடியான ஊக்குவிப்பு கிடைத்தல் சாத்தியமாகாது. எனவே நாம் சாதிக்க உத்வேக உந்துசக்தியாக நம் கண்முன்னால் வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழும் எடுத்துக்காட்டுகளாக இருக்கும் மனிதர்களை கண்டறிந்து, அவர்களை உற்று நோக்க வேண்டும். அவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்கும் நல்ல பண்புகளை முடிந்தவரை நாமும் பின்பற்றலாம். அவர்களுடன் முடிந்தால் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். அதேபோல வாழ்வில் உங்களைப்போலவே வெற்றி பெறத் துடிக்கும் இலட்சிய மனிதர்களின் நட்பு கிடைத்தால் அவர்களுடன் எப்போதும் தொடர்பிலேயே இருங்கள். நீங்கள் முன்னேற துடிப்புடன் இருக்கும் காலம்வரை அந்த பண்புகளால் ஈர்க்கப்படுவார்கள் உங்களுக்கு அயர்வு ஏற்படும் சமயங்களில் அவர்களின் சுறுசுறுப்பு உங்களையும் உசுப்பி விடும்.
கடினமாக உழைத்து செய்து முடிக்கும் செயலை விட, விரும்பி ஆர்வத்துடன் செய்து முடிக்கும் செயலே சிறந்த முடிவுகளைத் தரும். ஏனென்றால் சாதனையாளர்கள் ஒருபோதும் சிறப்பான செயல்களைச் செய்வதில்லை அவர்கள் தாங்கள் செய்யும் சிறிய செயல்களை கூட சிறப்பாக செய்பவர்கள். எனவே நீங்களும் உங்கள் துறை சார்ந்த செயல்களை செய்யும்போது ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடனும் செய்தால் உங்களின் சிறிய செயல் கூட பிறர் அடையாளம் காணும் அளவிற்கு தனித்தன்மை வாய்ந்ததாக அமையும்.
நம்மை வாழ்வில் சாதனையாளராக மாற்றுவது நாம் செய்யும் செயலின் மீது நாம் கொண்ட ஆர்வமும் நமது உழைப்பும் என்றால், நமது வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நமக்கு வாழ்வில் உதவுபவர்கள் நம்முடைய போட்டியாளர்கள். எனவே போட்டியாளர்கள் இல்லை என்றால் நாமே அவர்களை உருவாக்கிக் கொள்ளுதல் அவசியம். காரணம் என்னவென்றால் போட்டியாளர்களே நம்மை தொடர்ந்து சாதிக்க தூண்டுபவர்கள் நம்மை ஓய்வெடுத்து விடாமல் இயங்க வைப்பவர்கள்.
வாழ்க்கையில் நாம் சாதிக்க நேரிடையாக இல்லையானாலும் மறைமுகமாக நம்மை சாதிக்கத் தூண்டும் வெற்றியாளர்களை கண்டறிந்து, வெற்றிக்கான அவர்களின் சிறந்த பழக்கங்களை நாமும் கடைப்பிடித்து, செய்யும் செயல்களை அர்ப்பணிப்போடும் ஆர்வத்தோடும் செய்தால் அந்த வானமும் வசப்படும். கிடைத்த வெற்றியை தக்கவைத்து கொள்ள நம்முடைய போட்டியாளர்களை கண்டறிந்து அவர்களைத் தாண்டி ஓடுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிதல் அவசியம்.