ஏழே நாட்களில் அழகான கையெழுத்து

தினசரி ஒரு மணி நேரம் என ஏழு நாட்கள் கேலிகிராஃபி பயிற்சி வழங்கி, கிறுக்கலான ஆங்கிலக் கையெழுத்தையும் அழகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார் அரசுப் பள்ளி அன்பாசிரியர் பூபதி அன்பழகன்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார் பூபதி. கரோனாவுக்கு முன்னர் தன்னுடைய பள்ளி மாணவர்களின் கையெழுத்தைப் பயிற்சி மூலம் முத்து முத்தாக மாற்றியவர், தற்போது தமிழகம் முழுவதும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கையெழுத்துப் பயிற்சியை வழங்கி வருகிறார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய ஆசிரியர் பூபதி, ”அழகான கையெழுத்து, அசத்தலான ஆங்கிலம் ஆகியவைதான் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப முக்கியக் காரணம் என்பது என்னுடைய கருத்து. அதை நாம் கொடுத்துவிட்டால் எங்களை நோக்கியும் மாணவர்கள் வருவார்கள் என்று நினைத்துதான் இதை ஆரம்பித்தேன்.

கேலிகிராஃபி என்னும் வெளிநாட்டுக் கையெழுத்துப் பயிற்சியை, கோவை இளைஞரிடம் கற்றுக்கொண்டேன். அவர் மூலம் எங்கள் பள்ளியில் 4 முதல் 8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுத்தோம். இதில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்கள் அச்சுக் கோத்தது போல எழுதப் பழகினர். கரோனா காலத்தில், வீட்டில் சும்மா இருப்பதைவிட இதை மற்ற பள்ளி மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கலாமே என்று தோன்றியது.

அடிப்படை கேலிகிராஃபிக்கென யூடியூப் பக்கத்தை ஆரம்பித்தேன். அதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் பலர் முன்வந்தனர். வாட்ஸ் அப் மூலம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன்.

கேலிகிராஃபி பயிற்சிக்கு அடிப்படை சாய்வுக் கோடு, மேல் வளைவு, கீழ் வளைவு ஆகிய மூன்று காரணிகள். முதல் நாளில் இதுகுறித்த அடிப்படைப் பயிற்சிகள், இரண்டாம் நாளில் a முதல் m வரை எப்படி எழுதுவது என்று பயிற்சி கொடுக்கப்படும். மூன்றாவது நாளில், n முதல் z வரை எழுதப் பயிற்சி அளிப்பேன். நான்காம் நாளில் A முதல் M வரையிலான சொற்களையும் ஐந்தாம் நாளில் N முதல் Z வரையான சொற்களையும் எழுதும் பயிற்சி உண்டு. அதேபோல 6-வது நாளில், ஒரு பத்தியை எழுதவும் 7-வது நாளில் ஒரு முழுப்பக்கக் கடிதம் எழுதும் பயிற்சியையும் கொடுக்கிறேன். அத்துடன் பயிற்சி முடிந்தது. இத்துடன் தினசரி அரை மணி நேரம் எழுதிப் பழகினால் போதும், கையெழுத்து நிச்சயமாக மாறும்.

மேற்புற, கீழ்ப்புற வளைவுகளை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் மாணவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டதுண்டு. அதேபோல, கேப்பிட்டல் எழுத்துகளை எழுதவும் மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். 6-வது நாளில் இருந்து ஒற்றைக்கோடு உள்ள நோட்டில் எழுதப் பயிற்சி வழங்குவதால், மாணவர்களால் சுலபமாக அச்சில் கோத்தாற்போல எழுத முடியும்.

இதுவரை தமிழகம் மற்றும் புதுவையில் 120 மாணவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் தங்கள் கையெழுத்தை அழகாக்கி இருக்கின்றனர். 60 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்திருக்கிறேன். இன்னும் சில நண்பர்கள் ஆர்வத்துக்காகக் கற்றுக்கொள்கின்றனர். 45 வயதான எல்ஐசி ஏஜெண்ட் ஒருவர், என்னிடம் கற்றுக்கொண்டு அவரின் விண்ணப்பப் படிவத்திலும் கேலிகிராஃபி முறையில் எழுதுகிறார். சில தலைமை ஆசிரியர்களும் ஆர்வத்துடன் கற்றனர்.

ஆசிரியர் பூபதி

தமிழக அரசுப் பள்ளிகள் முழுக்க இந்த முறையை முன்னெடுத்து, மாணவர்களின் கையெழுத்தை அழகாக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை’’ என்றார் அன்பாசிரியர் பூபதி.

அன்பாசிரியர் பூபதி- தொடர்புக்கு: 7667312312

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in




Source

(Visited 100102 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =