ஜங்க் உணவுகள் சாப்பிடுவதை நிறுத்த ஏழு எளிய வழிகள்




உடலுக்கு ஊறு விளைவிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவ்வப்போது எழுவதும் ஒரு கெட்டப் பழக்கம்தான். ஆனால் அதிலிருந்து எளிதாகவே விடுபடலாம்.

சிப்ஸ், பாக்கெட் உணவுகள், குளிர்பானங்கள் முதல் ஜங்க் உணவுகளின் பட்டியல் நீண்டு கொண்டேதானிருக்கும். 

அவற்றின் தோற்றமும், ருசியும் நம்மை அடிக்கடி சாப்பிட தூண்டும் வகையில் இருப்பதும் ஒரு காரணம்.

சரி அதிலிருந்து விடுபட எளிய வழிகள் இருக்கின்றன.

1. கைவசம் எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பொருள்களை பையில் வைத்திருங்கள். எதையாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்ததும் அதனை எடுத்து சாப்பிடுங்கள்.

உதாரணமாக, வேர்க்கடலை பர்ஃபி, வறுத்த வேர்க்கடலை, முந்திரி, உலர் திராட்சை, பாதாம் போன்றவற்றை எப்போதும் கைவசம் வைத்திருக்கலாம்.

2. எங்குச் சென்றால் அதிகமாக ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ அங்குச் செல்வதை தவிர்த்து விடுங்கள். கட்டாயமாக செல்ல வேண்டும் என்று இருந்தால், உங்களுக்கு மிகவும் பிடித்த, ஆரோக்கியத்தை அதிகமாகக் கெடுக்காத ஏதேனும் ஒரு ஜங்க் உணவை வாங்கிச் சாப்பிடலாம். ஒட்டுமொத்தமாக ஜங்க் உணவுகளை ஓரம்கட்டிவிட முடியாது. அதனால் அடிக்கடி என்றில்லாமல் எப்போதாவது வாங்கிச் சாப்பிடலாம்.

3. ஜங்க் உணவுகளை தயாரிக்கும் முறை மற்றும் அதில் கலந்திருக்கும் பொருள்களின் தீங்குகள் குறித்து அவ்வப்போது விடியோக்களில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள். அதன் விளைவுகள் தெரிந்து கொண்டால், அவ்வப்போது அதனை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மட்டுப்படும்.

4. நண்பர்கள்.. யாருடன் சென்றால் அதிகளவில் ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள். உங்கள் முடிவை. அவர்கள் சாப்பிட்டாலும் உங்களை வற்புறுத்த வேண்டாம் என்று. அது சாத்தியமில்லாவிட்டால், அதுபோன்ற நண்பர்களை சந்திப்பதைத் தவிர்த்து, நட்பை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொப்பையை அல்ல.

5. ஏமாற்றுதல் அவசியம்.. ஆம் ஒரேயடியாய் ஜங்க் உணவுகளை தவிர்த்து விடுவது அவ்வளவு எளிதல்ல. நல்லதும் அல்ல. இதனால், திடீரென இந்த முடிவிலிருந்து மாறி முழுக்க முழுக்க ஜங்க் உணவுகளின் பக்கம் நீங்கள் போய்விட முடியும். எனவே, நீங்களே உங்களுக்கு ஒரு நாளை ஒதுக்கி, அன்று ஜங்க் உணவுகளை சாப்பிட அனுமதி அளியுங்கள். இதனால் உங்கள் ஜங்க் உணவுப் பிரியரான அந்த அந்நியன் ஓரளவு திருப்தி அடைவார்.

6. ஆரோக்கியமான உணவுகளில் அதிக வெரைட்டி இருக்கிறது. அவற்றை தேடி தேடி ருசிபாருங்கள். ஆர்டர் செய்தும் வாங்கி உண்ணுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் திறமையை சமையலறையில் காட்டுங்கள். அதனை ஸ்டேட்டஸில் போட்டு பெருமை பீற்றிக் கொள்ளுங்கள்.  இது உங்கள் மீது ஒரு ஆரோக்கிய உணவுப் பிரியர் என்ற பிம்பத்தை ஏற்படுத்தும். அதனை அப்படியே பராமரிக்க நீங்கள் விரும்பினால் நல்லதுதானே.

7. உணவை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். அதிகமாக மென்று சாப்பிடும்போது குறைவான உணவுதான் சாப்பிட முடியும். உடலுக்கு நல்லதும் கூட. மென்று சாப்பிட நேரம் இல்லாத போதும் அதை வலுக்கட்டாயமாக கடைப்பிடியுங்கள். அப்படியில்லாவிட்டால் ஜங்க் உணவுகளை அதிகமாக மென்று சாப்பிடுங்கள். இதனால் குறைவான ஜங்க் உணவுகளை சாப்பிட முடியும்.
 







நன்றி Dinamani

(Visited 10071 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + fourteen =