தமிழர்களுக்கு மாதந்தோறும் பண்டிகைகள்தான். பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல், திருவள்ளுவர் திருநாள், வைகாசி விசாகம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பெருக்கு, ஆவணி அவிட்டம், கிருஷ்ண ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி, திருக்கார்த்திகை தீபம் உள்ளிட்ட ஏராளமான பண்டிகைகள் உள்ளது. அதில்,சில பண்டிகைகள் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில், மார்கழி மாதம் வரக்கூடிய திருவாதிரை திருநாள் முக்கியமானதாகும்.
மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரமும், பெளர்ணமியும் சேரும் திருநாள் திருவாதிரை திருநாள் ஆகும். திருவாதிரைப் பண்டிகை தென்னிந்திய சைவர்களால் கொண்டாடப்படுகின்றது. அனைத்து சிவாலயங்களிலும் உறையும் சிவபெருமானுக்கும், தியாகராஜர், நடராஜப் பெருமானுக்கும் திருவாதிரை அன்று விசேஷமாக ஆறு கால பூஜைகளும், அபிஷேகங்களும் செய்யப்படும். முடிவில், கூடியிருக்கும் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிப்பார். இதை ஆரூத்ரா தரிசனம் என்பர்.
ஐம்பூதங்களில் ஆகாசத்தலமான சிதம்பரம் ஷேத்திரத்திலும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலும் திருவாதிரை திருநாள் ஆண்டுதோறும் மிகப் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. (இந்த ஆண்டு கரோனா தொற்றால் நடத்தப்படவில்லை.) சிதம்பரத்தில் அஷ்ட மூர்த்திகள் காட்சியளிப்பது போலவே, மன்னார்குடி தேரடி, ராஜகோபால சுவாமி கோயில் முன்பு, அஷ்டமூர்த்திகளும் அலங்காரக் கோலத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.
திருவாதிரை நாளன்று வீடுகளில் பெண்கள் நோன்பிருந்து களியும், கூட்டும் சமைத்து கடவுளுக்கும் படைத்து வழிபடுவர். அன்று சிவபெருமான் களியும், கூட்டும் சாப்பிட்டு களியாட்டம் ஆடி, கூடி நின்ற பக்தர்களுக்கு தில்லை மூவாயிரவர் எனப்படும் சிவனடியார்க்கு தரிசனம் கொடுத்ததாக ஐதீகம். திருவாதிரை நாளன்று சிவபெருமானுக்கு படைத்த களியை பிரசாதமாக உண்ணுவதில் பெண்களுக்குத்தான் முன்னுரிமை.
கடவுள் எதிரில் ஒரு வாழையிலையையும், வீட்டிலுள்ள கட்டுக் கிழத்தியாருக்கும், கன்னிப் பெண்களுக்கும் வாழையிலைகள் போடப்பட்டு, இலை நுனியில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் வைப்பர். கடவுளுக்கு நிவேதனம் செய்து அப்படியே பெண்களும் தங்களது இலைகளுக்கு நீர் சுற்றி களி நிவேதனம் செய்து வணங்கி சாப்பிடுவர். சாப்பிட்டு முடித்த பின் தங்களின் கணவரை அழைத்து வணங்கி ஆசி பெறுதல் மரபு. பிறகு வீட்டில் உள்ள ஆண்களுக்கு பிரசாதம் பரிமாறப்படும்.
திருவாதிரைக் களி பிரசாதம் சாப்பிட்டால் மிகவும் விசேஷமாகும். திருவாதிரைக் களியை திருடியாவது தின்ன வேண்டும் என்று ஒரு வழக்கு (பழமொழி) இருக்கிறது. இந்த சிறப்பு மிகுந்த களியை எப்படி சமைப்பது என்று சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை. அதனால் களி செய்வதின் செயல்முறையைப் பார்ப்போம்.
களி செய்யத் தேவையான பொருட்கள்
பச்சரிசி, வெல்லம் தூளாக்கியது. துவரம் பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய், முந்திரி, திராட்சை, கனிந்த பூவன் வாழைப்பழம், பச்சை கற்பூரம், நெய் ஆகியவைகளை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
செய்முறை
அரிசியை சிவக்க வறுத்து நொய் (குருணை)யாகப் பொடியாக்க வேண்டும். துவரம் பருப்பையும் சிவக்க வறுக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் தேவையான அளவுக்கு தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி, துவரம் பருப்பையும் அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பைப் போட்டு, அரிசி நொய்யை கொஞ்சம் கொஞ்சமாகத் தூவி அடிப்பிடிக்காமல் கிளறிக் கொண்டிருக்கவும். நொய் அரை வேக்காடு வெந்ததும் பாத்திரத்தை மூடி அடுப்புத் தீயை குறைத்து வைக்கவும். இன்னொரு அடுப்பில் வெல்லம் நனையும் அளவுக்கு தண்ணீர் விட்டு, வெல்லத்தைக் கரைய விடவும். வெல்லம் கரைந்ததும், இறுத்து களியில் ஊற்றவும். வாழைப்பழத் துண்டுகளையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். நெய் ஊற்றி முந்திரி,திராட்சைகளை பதமாக வறுத்து, தேங்காய் துருவல் ஏலப்பொடியுடன் சேர்த்து களியில் போட்டு நன்றாக கிளறி, அடுப்பை நிறுத்தி விடவும்.
திருவாதிரைக் கூட்டு
ஏழு விதமான காய்கள். (கொடிக்காயாக இருந்தால் ரொம்ப விசேஷம்). பரங்கிக் கீற்று, வெள்ளைப் பூசணிக்கீற்று, அவரைக்காய், மொச்சைக் கொட்டை , பாகற்காய், காராமணிக்காய் , சேனை வள்ளிக் கிழங்கு, வாழைக்காய் பெரிசு, உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம், தேங்காய் துருவல், மஞ்சள் பொடி, தேவையான உப்பு, புளி ஆகியவைகளை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
புளியை முதலிலேயே ஊற வைத்து கல் மண் இல்லாமல் கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்கறிகளை நன்றாகக் கழுவி குக்கரிலேயே வேக வைக்கலாம். கறிகாய்களை ஒரே சீராக நறுக்கினால் ஒரு சீராக வேகும். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு, தண்ணீர் விட்டால் போதும்.
ஒரு ஸ்பூன் எண்ணெய்யில் பெருங்காயம், மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு மற்றும் தனியாவைப் போட்டு சிவக்க வறுக்கவும். இறக்கும் முன்பு தேங்காய் துருவலையும் போட்டு ஒரு புரட்டு புரட்டவும். சூடு ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். புளித்தண்ணீரில் மஞ்சள் பொடி, வெந்த காய்கறிகள் தேவையான அளவு உப்பு போட்டு 5 நிமிஷம் கொதிக்க விடவும். பொடித்த மசாலாவைத் தூவி நன்றாக கிளறி கடுகு போட்டுத் தாளிக்க வேண்டும். கறிவேப்பிலை கொத்தமல்லி தழைகளைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.
திருவாதிரைக் களியும், கூட்டும் ரெடி. சாப்பிட நீங்க ரெடியா.