செங்கல்பட்டு பகுதியில் உள்ள கோயில்களில் ஆடித்திருவிழா, கூழ்வார்த்தல் அண்மையில் நடைபெற்றது.
செங்கல்பட்டு பழைய பேருந்துநிலையம் அருகில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, கடந்த 18-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், 22-ஆம் தேதி கரக ஊர்வலமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தீமிதி விழாவும், அம்மன் வீதி உலாவும் நடைபெற்றது.
24 ஆம் தேதி கடும்பாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூழ்வார்த்தல் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கே.ஜெயவேல், ஜே.பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இதேபோன்று, செங்கல்பட்டு காட்டுநாயக்கன் வீதியில் உள்ள முத்துமாரியம்மனுக்கு 56-ஆம் ஆண்டு உற்சவத்தையொட்டி, கடந்த 22-ஆம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியும், மறுநாள் பூங்கரகம் வீதிவலமும், 24 ஆம் தேதி கூழ்வார்த்தில் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
இரவு உற்சவ அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் டி.பாலகுமார், ஆர்.வீரராகவன், காட்டுநாயக்கன் கிளை சங்கத் தலைவர் கே.எஸ்.முருகன், செயலாளர் இ.செல்வம், தர்மகர்த்தா கே.வெங்கடேசன், துணைத் தலைவர் ஓ.குமார் உள்பட கோயில் நிர்வாக குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டு முருகேசனார் தெருவில் உள்ள கங்கையம்மன் கோயில் ஆடி உற்சவ விழாவில் காப்புகட்டுதல், கரக ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
24 ஆம் தேதி கூழ்வார்த்தலைத் தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி நடைபெற்றது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ரத வீதியுலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.