ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 24
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி!
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி!
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்.
பாடியவர் – பவ்யா ஹரி
விளக்கம்:
மேல் பாசுரத்தில் (பா.23) “சிம்மாசனத்தில் வீற்றிரு’ என்று வேண்டியதற்கேற்ப இப்போது கண்ணன் அமர்ந்துவிட்டான். எனவே, போற்றிப் பாடுகிறார்கள். “அன்றொரு அவதாரத்தில், வாமனனாகத் தோன்றித் திரிவிக்ரமனாக வளர்ந்து உலகை அளந்தாய், அந்தத் திருவடிகளுக்குப் போற்றி. இராமாவதாரத்தில் தென் திசை சென்று இலங்கை அரசனை வீழ்த்தினாய், அந்த வலிமைக்குப் போற்றி. சக்கரமாக ஒளித்திருந்த சகடாசுரனை அழித்தாய், உன்னுடைய புகழுக்குப் போற்றி. கன்றாக மறைந்திருந்த வத்ஸôசுரனை எறிதடியாக்கி, கபித்தாசுரன்மீது எறிந்தாய், உன் திருவடிகளுக்குப் போற்றி. கோவர்த்தனம் என்னும் குன்றைக் குடையாகத் தூக்கினாய், உன் குணத்திற்குப் போற்றி. பகைவர்களை வென்றழிக்கும் உன்னுடைய கையிலுள்ள வேலுக்குப் போற்றி. இவ்வாறெல்லாம் பலவாறாக உன்னுடைய வீரத்தையும் திறனையும் புகழ்ந்து பாடிக்கொண்டே உன்னிடம் பரிசு பெற்றுக்கொள்வதற்காக வந்திருக்கிறோம். அருள வேண்டும்’ என்று பாராட்டிப் பணிகிறார்கள்.
பாசுரச் சிறப்பு:
அடியார்களின் அன்பு முழுமையாக வெளிப்படுகிற பாசுரம் இது. நோன்பு நோற்று, கண்ணனிடம் பரிசு பெறுவதற்காக வந்திருப்பவர்கள் இப்பெண்கள். இவர்களுக்கு அருள்வதற்காகக் கண்ணன் சிம்மாசனத்தில் வந்து அமர, தாங்கள் கேட்க வேண்டியதை விட்டுவிட்டுக் கண்ணனுக்குப் “போற்றி’ இசைக்கிறார்கள். கண்ணனின் பேரழகைக் கண்டவுடன், தங்களின் கோரிக்கை மறந்து, இந்த அழகுக்குக் கண் திருஷ்டி நேர்ந்துவிடுமே என்னும் கவலை எழுகிறது. ஆகவே, காப்பிடுவதுபோல “போற்றி’ இசைக்கிறார்கள்.
ஆண்டவன் மீதான அடியார்களின் அளப்பரிய அன்பு இது. கண்ணனைப் போற்றினாலும், வாமனஅவதாரத்தையும் இராமாவதாரத்தையும் பாடுவதில் ஆண்டாளுக்கு உள்ள அவாவினை 3, 17 (வாமனன்), 10, 12 (இராமன்) பாசுரங்களில் காணலாம். வலிமைக்கும் திறமைக்கும் புகழுக்கும் “போற்றி’ சொன்னாலும், திருவடிக்கு இருமுறை கூறுவது (அடி போற்றி, கழல் போற்றி), பக்தியின் பாங்கு. பிறவற்றில் வலிமைக்கும் கழலுக்கும் “போற்றி’ சொல்லிவிட்டு, கோவர்த்தனத்தைத் தூக்கியதற்கு குணத்தைப் போற்றுகிறார்கள். ஆயர்களையும் ஆடுமாடுகளையும் மழையிலிருந்து காப்பதற்காக ஒருவார காலம் கோவர்த்தனத்தைக் கையில் தாங்கியிருந்தது, எம்பெருமானின் செüசீல்ய குணத்தை (நீர்மையாகப் பாயும் கருணையை) அல்லவா காட்டுகிறது!
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்:
அதிகாலைப் பொழுதில், சிவபெருமான் சந்நிதிக்கு அருகே காத்திருப்பவர் யார் யார்? வீணைகளையும் யாழ்களையும் கையிலேந்திக் கொண்டு இசை பாடும் வித்தகர்கள் ஒருபக்கம். ரிக் வேதம் உள்ளிட்ட மந்திரங்களையும் தோத்திரங்களையும் ஓதுபவர்கள் ஒருபக்கம். நெருக்கமாக மலர்களைச் சேர்த்து வைத்து மாலை கட்டுபவர்கள் ஒருபக்கம். கைகூப்பித் தொழுபவர் ஒருபக்கம். நெகிழ்ந்து அழுபவர் ஒருபக்கம். வழிபட்டு ஆடுபவர் ஒருபக்கம். கரங்களைத் தலைக்குமேல் கூப்பி வணங்குபவர் ஒருபக்கம். “இவ்வாறு பலரும் பலவகையாக வழிபட, (தாழ்வான) என்னையும் ஆட்கொண்டு அருள்கிற ஆண்டவனே, திருப்பெருந்துறையில் எழுந்தருளிய சிவபெருமானே, எம்பெருமானே, எழுந்திருக்கவேணும்’ என்று பிரார்த்திக்கப்படுகிறது.
பாடல் சிறப்பு:
இறைவனை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வழிபடுகிற சிறப்பு இப்பாடலில் காட்டப்பெறுகிறது. இசை தெரிந்தவர்கள் இசைத்தும், வேத மந்திர தோத்திரம் தெரிந்தவர்கள் ஓதியும், மாலை கட்டத் தெரிந்தவர்கள் மலர்களைக் கட்டியும் வழிபடுகிறார்கள். “ரிக்’ என்னும் சொல் மந்திரம் என்று பொருள்படும். ரிக் என்பதே தமிழ் முறையில் “இருக்கு’ என்றானது. ரிக் வேதம் என்றும், ஒன்றைச் சுட்டித் தொடர்பானவற்றை விளக்கும் வகையில் வேத மந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து மந்திரங்கள் என்றும் விவரிக்கலாம். திரு ஐந்தெழுத்து என்னும் “நமசிவாய’ மந்திரத்தை “ரிக்’ என்றும் “இருக்கு’ என்றும் குறிப்பிடுகிற வழக்கம், சைவ மரபில் உண்டு.
தொழுகையர் – அழுகையர் – துவள்கையர் – இதனை முந்நிலை வளர்ச்சி என்று நோக்கலாம்; முதலில் தொழுபவர்கள், உள்ளம் உருகிப் போக, அழுகையர்ஆகின்றனர்; தொடர்ந்து, அழுகை மீக்கூர்ந்த நிலையில், உள்ளமும் உடலும் புலன்களும் செயலிழக்கத் துவண்டு போகின்றனர். அழுகையர், துவள்கையர் என்பவற்றைத் தனியாகப் பிரித்து வேறு வகையிலும் பார்க்கலாம்; இவ்வகையில், இசையும், தோத்திரமும், மாலை கட்டலும், வழிபாட்டு முறையும், அஞ்சலி கூப்புதலும், இன்னும் எதுவுமே தெரியாதவர்கள், அழுகின்றனர்}துவள்கின்றனர் என்றாகும். இவற்றையும் இறைவன் ஏற்றுக் கொள்வான் என்பது குறிப்பு. “என்னையும்’ என்பதில், எதுவும் தெரியாத இந்த இழிநிலையே சிறப்பாக எடுத்துரைக்கப்படுகிறது.
-டாக்டர் சுதா சேஷய்யன்