ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 23
மாரி மலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில் நின் றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.
பாடியவர் – பவ்யா ஹரி
விளக்கம்:
சிங்கமென எழுந்து சிம்மாசனத்தில் அமர்ந்து தங்களின் கோரிக்கையைச் செவிமடுக்க வேண்டுமென்று நோன்பியற்றும் பெண்கள் விண்ணப்பிக்கும் பாசுரம். “மழைக் காலத்தில் மலைக் குகைக்குள்உறங்குகிற சிங்கம், மழை முடிந்தவுடன் கண்களை உருட்டி விழித்து, பிடரி குலுங்கும்படிச் சிலிர்த்து, உதறி எழுந்து, முதுகை நீட்டி நிமிர்த்தி, குகையை விட்டு வெளியில் வரும். அந்தச் சிங்கம் போல் நீயும் புறப்பட்டு வா கண்ணா! காயாம்பூ வண்ணனே, சிங்கம் போன்றே நீயும் எழுந்தருளி, உன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்திருக்கிறோம் என்பதை விசாரித்து அருள வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறார்கள்.
பாசுரச் சிறப்பு:
எம்பெருமானுக்குச் சிங்கம் உவமையாகக் காட்டப்பெறுகிறது. மழைக் காலத்தில் குகைக்குள் அடைப்பட்டிருக்கும் காட்டு அரசனான சிங்கம், மழை முடிந்தவுடன் தன்னுடைய காட்டின் நிலையை அறிவதற்காக வேகமாக எழுந்து வருமாம். அதுபோல், உறக்க குகையிலிருந்து கண்ணன் எழுந்து வரவேண்டும் என்பது பிரார்த்தனை. சிங்கம் இரு பக்கமும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தவாறே நடக்கும். அதுபோல், “காத்திருக்கும் எங்களைப் பார்த்தவாறே வரவேணும்’ என்னும் ஆதங்கம். பூவைப்பூ என்பது காயாம்பூ; கருநீல மலர். “யாம் வந்த காரியம் ஆராய்ந்து’ } அதிகாலைப் பொழுதில், ஒருவரையொருவர் எழுப்பி, தூயவர்களாய் வந்து, கோயில்}வாயில் காப்பவரைப் பணிந்து, நந்தகோபன், யசோதை, பலராமன், நப்பின்னை என்று பெரியோர் பலரின் துணைகொண்டு வந்திருக்கிறோமே, எங்களின் இத்தனை முயற்சிகளையும் மனத்தில் கொண்டு அருள வேண்டும். முதல் பாசுரத்தில் “யசோதை இளஞ்சிங்கம்’ என்பது, இப்பாசுரத்தில் “சீரிய சிங்கம்’ஆனதை எண்ணி மகிழலாம்.
ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 3
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்
தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே!
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்
விளக்கம்:
உதயத்தின் அடையாளங்கள் காட்டப் பெறுகின்றன. “குயில்கள் கூவிவிட்டன; கோழிகளும் நாரைகளும் இன்னும் பல பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன. திருக்கோயில்களில் சங்கநாதம் ஒலிக்கிறது. நட்சத்திரங்கள் ஒளி மழுங்கிவிட்டன. கதிரவனுடைய ஒளி ஒருங்கிணைந்து நிகரின்றித் தோன்றுகிறது. எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும், அத்தகைய பேரறிவுக்கும் அரிதானவனே, அன்பினால் எங்களுக்கு எளிதாகக் கிட்டுபவனே, பெருங்கருணையோடு உன்னுடைய திருவடிகளை எமக்குக் காட்டி அருள வேண்டும்’ என்னும் விண்ணப்பம் உரைக்கப்படுகிறது.
பாடல் சிறப்பு:
காலைப்பொழுதில், பறவைகள் பலவிதமாக ஒலியெழுப்புவதைச் சுட்டுகிற பாடல். “கோழிச் சிலம்ப’ எனத் தொடங்கும் திருவெம்பாவை எட்டாவது பாடலையும், “புள்ளும் சிலம்பின’, “கீசுகீசென்று ஆனைச்சாத்தன் பேச்சரவம்’ போன்ற திருப்பாவை வாசகங்களையும் ஒப்பு நோக்கலாம். குயில்கள் சற்றே வெளிச்சம் வந்தபிறகு கூவும்; எனவே, பொழுது புலர்ந்துவிட்டது என்பதன் அடையாளம். வெளிச்சம் நன்கு பரவிவிட்டதால், நட்சத்திரங்கள் புலப்படவில்லை. இதுவும் காலை மலர்ந்துவிட்டதைக் காட்டும். பள்ளியெழுச்சியில், திருவடியைக் காட்ட வேண்டும் என்று கேட்பது சற்றே புதுமையானது. எனினும், இறைவனின் திருவடியைப் பற்றிக்கொள்ளுதலே சிறப்பு என்னும் வகையில், மணிவாசகப் பெருமான் திருவடியைக் கேட்டார் எனக் கொள்ளலாம். குயில்கள் மரத்திலிருந்து “அ…அக்கூ உ..உ…’ என்று கூவுகின்றன; கோழிகள் தரையிலிருந்து “கொக்கரக்கோ…ஒ…ஒ…’ என்று இசைக்கின்றன. இடைப்பட்ட நிலையில், பல்வேறு பறவைகளின் ஒலிகள் சேர்ந்து “ம்’ என்னும் ரீங்காரம் கேட்கிறது. இவற்றின் கூட்டொலி, ஓங்காரப் பிரணவமாக ஒலிக்கிறது. இதுவே, சங்கநாதமாகவும் ஒலிக்கிறது. அறிவுக்கு அரிதான இறைவன், அன்புக்கு எளியவன் என்பதே இப்பாடலின் மையக் கருத்து. முந்தைய பாடலில் வண்டுகளின் ரீங்காரத்தைக் குறிப்பிட்டு, இப்பாடலில் பிரணவ நாதத்தைக் குறிப்பிடுவதன் நயம், மீண்டும் மீண்டும் அனுபவித்துச் சுவைக்க வேண்டிய அழகு.
-டாக்டர் சுதா சேஷய்யன்