மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 22)




ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 22

அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான

பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே

சங்க மிருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்

கிங்கிணிவாய்ச் செய்த தாமரைப் பூப்போல

செங்கண் சிறுச்சிறிதே யெம்மேல் விழியாவோ

திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்

அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்

எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்.

பாடியவர் –  பவ்யா ஹரி

விளக்கம்:  

இந்தப் பாசுரமும் கண்ணனிடத்தில் அருளை வேண்டுவதே ஆகும். “பெரியதான இவ்வுலகினில் உள்ள அரசர்கள் பலரும், தங்களின் ஆணவத்தை விட்டொழித்து வந்து, உன்னுடைய சிம்மாசனத்தின்கீழ் கூட்டம் கூட்டமாக நிற்கிறார்கள். அதுபோன்றே, நாங்களும் உன்னுடைய திருவடிக்கீழ் வந்து நிற்கிறோம். தாமரைப்பூப் போன்ற செம்மைமிக்க உன் திருக்கண்களை மெல்ல மெல்லத் திறந்து எங்களைக் காணாயோ? சந்திரனும் சூரியனும் ஒருசேர உதித்ததுபோல், அழகிய கண்கள் இரண்டையும் எங்கள்மீது விழித்தாயென்றால், எங்கள் சாபங்கள் யாவும் அழிந்துவிடும்’ என்று நோன்பியற்றும் பெண்கள் கோரிக்கை வைக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு: 

இப்பாசுரமும்  ஆணவம் தொலைத்து வந்திருக்கும் தன்மையைக் காட்டுகிறது. கண்ணன் அரண்மனை வாயிலில் பெருங்கூட்டம் ஒன்று நிற்கிறது }ஆணவத்தைத் தொலைத்துவிட்டுக் கண்ணனுடைய நட்பைப் பெறவேண்டும் என்பதற்காக வந்து நிற்கிற கூட்டம். கடவுளை அணுகுவதற்குத் தடையாக இருப்பது ஆணவம். தடையை வென்று எம்பெருமானை அடையும் வழியை இவ்விரண்டு பாசுரங்களும் விளக்குகின்றன. “கிங்கிணி’ என்பது சலங்கையிலும் கொலுசிலும் காணப்படும் முத்துப்பரல்; இதற்குள்முத்துபோன்ற சிறு மணி இருக்கும். கிங்கிணி முழுவதுமாக மூடப்படாமல், பாதித் திறந்திருக்கும். அப்போதுதான், உள்ளிருக்கும் மணி உருள உருள, அதன் ஓசை இனிமையாக ஒலிக்கும். கூடுதலாக மூடினால், ஒலி கேட்காமல் மழுங்கும்; கூடுதலாகத் திறந்தால், உள்ளிருக்கும் மணி விழுந்துவிடும். கண்ணனைக் கண் விழிக்கச் சொல்பவர்கள், முழுவதுமாகக் கண்களைத் திறந்தால், தம்மால் தாங்க முடியா தென்பதால், “சிறுச்சிறிதே’ விழிக்கக் கோருகிறார்கள். கிங்கிணி தக்க அளவே திறந்திருப்பதுபோல், கண்களும் தக்க அளவு திறக்கவேணும்.  கடவுளின் கண்கள், நல்லவர்களுக்குச் சந்திரனாகவும் தீயவர்களுக்குக் கதிரவனாகவும் இருக்கின்றன. “எம் மேல்’, “எங்கள் மேல்’, “எங்கள் மேல்’ என்று மும்முறை வேண்டுவது, மிகவும் தீனர்களான தங்களின் நிலையைக் காட்டுவதற்காக எனக் கொள்ளலாம். 

******

ஸ்ரீமாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி – பாடல் 2  

அருணன்இந் திரன்திசை அணுகினன்; இருள்போய்

அகன்றது; உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ நயனக்

கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்

திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே!

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே!

அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே! 

பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் – ஆலவாய் அண்ணல் தேவாரப் பாடசாலை மாணவர்கள்

விளக்கம்:

உதய நேரத்து நடப்புகள் நினைவூட்டப் பெறுகின்றன. “கதிரவனின் தேரோட்டியான அருணன், தன்னுடைய செவ்வொளியைப் பரப்பிக் கொண்டு, கிழக்கு திசையை நெருங்கிவிட்டான். இருள் அகன்றுவிட்டது. இது புறத்தே நிகழும் உதயம். நாங்கள் மற்றொரு உதயத்தை எதிர்நோக்கி நிற்கிறோம். இறைவா! உன்னுடைய மலர்முகத்தில் கருணைச் சூரியன் எழவேண்டும். தாமரை முகத்தில் தாமரைகளாகத் திகழ்கிற உன்னுடைய திருக்கண்கள், ஒளியின் வீச்சில் மெல்ல மெல்ல மலர வேண்டும். மலர்களின் மலர்ச்சியைக் கண்டு மகிழும் வண்டுகளாக, சிவசிவ என்னும் திருநாமத்தை ரீங்காரமிட்டுக் கொண்டு இதோ, அடியார் கூட்டம் வந்துவிட்டது. இவற்றை எண்ணிப் பார்த்து, இறைவா எழுந்திருக்கவேணும். அருள் செல்வத்தை வாரி வழங்கும் பெருமலையே! ஆழத்தேக்கி அருளும்கடலே! எழுந்திருக்கவேணும்’ என்று சிவனாரின் அருள் வேண்டப்படுகிறது. 

பாடல் சிறப்பு:

அகத்தே நிகழும் உதயமே, திருப்பள்ளியெழுச்சியின் அடிப்படை என்பதை உணர்த்தும் பாடல். அருணன் என்பவன் கதிரவனின் தேரோட்டி. சூரியோதயத்திற்கு முன்னர், கிழக்கு வானில் காணப்படும் சிவப்புப் பரவலை அருணோதயம் என்று குறிப்பதுண்டு. இந்திரன் கிழக்கு திசைக் காவலன் என்பதால், கிழக்கு என்பதைக் காட்ட, “இந்திரன் திசை’ எனப்படுகிறது. அண்ணல், மலை, கடல் போன்ற சொற்களால் சிவபெருமானைச் சுட்டுவது, கடவுளின் எல்லையற்ற ஆற்றலையும் பேரருளையும் காட்டுவதாகும். அறுபதம் = வண்டு. அறுகாலி, ஷட்பதம்,ஷட்சரணம் என்பவை வண்டுக்கான பிற பெயர்கள். மலரின் மகரந்தத்தில் தோயும் வண்டுகள்போல், இறைவன் அருளில் தோயும் அடியார்கள். இறைவனின் நயனத் தாமரைகள் மலர்வதற்குப் புறத்தே ஒரு சூரியனை உருவகப்படுத்தாமல், இறைவனின் கருணையையே சூரியன் என்பது கவித்துவச் சிறப்பு. 

இன்றைய பாசுரங்களான இரண்டிலும் (திருப்}22, பள்ளியெழுச்சி}2), இறைவனின் திருக்கண்களை மெல்ல மெல்லத் திறக்கச் சொல்லியும், மெல்ல மெல்ல அடியார்மீது விழிக்கச் சொல்லியும் வேண்டுவது, எண்ணியெண்ணிப் பெருமைப்பட வேண்டிய சிறப்பு. அடியார் உள்ளங்களின் அகநோக்கை, ஆண்டாளும் மாணிக்கவாசகரும் ஒருசேரக் காட்டுகிறார்கள்.

-டாக்டர் சுதா சேஷய்யன்
 







நன்றி Hindu

(Visited 10044 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 8 =