மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம் 18)




ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

நந்தகோ பாலன் மருமகளே நப்பின்னாய்!

கந்தங் கமழுங் குழலி! கடைதிறவாய்

வந்தெங்கும் கோழி அழைத்தனகாண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட

செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப

வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பாடியவர் – பவ்யா ஹரி

விளக்கம்: 

கண்ணனுடைய திருவாட்டியான நப்பின்னை எழுப்பப்படுகிறாள். “வலிமைமிக்க யானைகளைக் கொண்டவனும் போர்க்களத்தில் புறமுதுகு காட்டாதவனும் தோள்வீரம் செறிந்தவனுமான நந்தகோபனுடைய மருமகளே, நறுமணம் வீசும் கூந்தலைக் கொண்டவளே, கதவைத் திற. எல்லா இடங்களுக்கும் பரவிய கோழிகள் ஒலியெழுப்புகின்றன. குருக்கத்திப் பந்தல்களில் குயில்கள் அமர்ந்து கூவுகின்றன. பந்தைப் பிடித்திருப்பவளே! உன் கணவனின் திருநாமத்தை நாங்கள் பாடுகிறோம். உன்னுடைய கைவளைகள் ஒலிக்க வந்து, உன்னுடைய தாமரைக் கைகளால் கதவைத் திற’ என்று விண்ணப்பிக்கிறார்கள். 

பாசுரச் சிறப்பு:

பிராட்டியின் வழியாகவே பிரானை அணுக வேண்டும் என்பது மரபு. அவ்வகையில், நப்பின்னையை அணுகித் தங்களுக்கு அருளப் பிரார்த்திக்கிறார்கள். விடியலின் அடையாளங்களாகக் கோழிகளின் குரலையும் குயில்களின் பாட்டையும் உணர்த்துகிறார்கள். ஆயர்பாடியில், கண்ணனுக்கு நப்பின்னையே பட்டமகிஷி. “பந்தார் விரலி’ என்னும் தொடர் சிறப்பு. ஒரு கையில் பூப்பந்தைப் பற்றியிருக்கும் நப்பின்னை, இன்னொரு கையில் கண்ணனைப் பற்றியிருக்கிறாள். அதாவது, ஒரு கையில் உடைமை, ஒரு கையில் உடையவன். இது போன்றே, உடைமைகளான நம்மை (ஜீவன்கள்) ஒரு கையில் பற்றிக்கொண்டு போய், இன்னொரு கையிலுள்ள எம்பெருமானிடம் சேர்க்க வல்லவள் பிராட்டி என்பதை உணர்த்தும் தொடர். பிராட்டியின் புருஷகாரத்தைச் (ஜீவன்களுக்காகப் பெருமானிடம் பரிந்துரைக்கும் பாங்கு) சிலாகிக்கும் பாசுரம்

அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்

கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்

பெண்ணே!இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்

பாடியவர்கள் : ஆலவாய் அண்ணல் பாடசாலை மாணவர்கள்

பாடியவர் – மயிலை சற்குருநாதன்

பாடியவர் – பொன் முத்துக்குமரன்

விளக்கம்:

ஒளிப்பிழம்பாகத் தோற்றம் தந்த இறைவன், அண்ணாமலையானாக நிற்கிறான். இந்த இறைவனின் திருவடியில், தேவர்கள் வந்து வணங்குகின்றனர். இவ்வாறு வந்து வணங்கித் தாள் பணிகையில், அவர்களின் தலைகளில் தாங்கியிருக்கும் கிரீடங்களின் நவரத்தின ஒளி குன்றுகிறது. இந்தக் காட்சியைக் காலை விடியலுக்கு ஒப்பாக்குகின்றனர் இப் பெண்கள். இரவு நேரம், வானில் நிலவு தெரியும்; விண்மீன்கள் சுடரும். சூரியன் மெல்ல மெல்லத் தலைக்காட்டும்போது, விண்மீன்கள் மெதுவாக மறையத் தொடங்கும்; சந்திரனும் காணாமல் போகும். சிறிது பொழுதில், மொத்தமாகக் கதிரவக் கதிர்கள் நிறையும். இத்தகைய விடியல் காட்சியை விவரிக்கிறார்கள். இப்படிப்பட்ட விடியல் பொழுதில், “பெண் வடிவங்களாக, ஆண் வடிவங்களாக, இரண்டுமில்லா அலி வடிவங்களாக, இவையும் தவிர, விண்ணிலும் மண்ணிலும் உயிரற்ற பல்வேறு வகை வடிவங்களாக வெளிப்பட்டு நிற்கும் இறைவனை, எங்களுக்குக் கண்ணுக்கு அமுதமாய்க் காட்சி தருகிற நாயகனைப் பாடுகிறோம்; அவன் தாள் பணிகிறோம்’ என்றும் உரைக்கின்றனர். 

பாடல் சிறப்பு:

பொழுது ஏறத்தாழ புலர்ந்துவிட்டது என்னும் சூழலைக் காட்டுகிற பாடல். இறைவன் திருவடியில் தேவர்கள் பணிய, அப்போது அவர்களின் திருமுடிக் கிரீடங்கள் ஒளியிழக்கின்றன என்னும் தகவலில் ஆழமான பொருள் பொதிந்துள்ளது. பாற்கடல் அமுதம் பெற்று, அதனால் இறவா நிலையைப் பெற்றுவிட்டோம் என்னும் இறுமாப்பு கொண்டவர்கள் தேவர்கள். நவரத்தினக் கிரீடங்களில் அவர்களின் இறுமாப்பும் ஆணவமும் தெரிகின்றன. எவ்வளவு நேரம் இறுமாப்பும் ஆணவமும் இருக்க முடியும்? இறைவன் காலடியில் பணியும்போது, தங்களின் பளபளப்பு இறைவனுக்கு முன் ஒன்றுமில்லை என்று உணரும்போது, அவை அடங்குகின்றன. ஆணவமும் இறுமாப்பும் அடங்குகிற பொழுதுதான், பொன் விடியல். பெண், ஆண், அலி வடிவங்கள் மாத்திரமில்லை; உயிரற்ற பொருள்களும் நிலமும் நீரும் விண்ணும் மண்ணும் அனைத்துமே இறைமை என்று உணரும் நிலைக்கு இப்பெண்கள் பக்குவப்பட்டு விட்டார்கள். பாற்கடல் அமுதம் இல்லாமல், கண்ணுக்கு அமுதமான கடவுள் என்று கூறும் பாங்கு, எண்ணி எண்ணி வியக்க வேண்டியது ஆகும். பயனற்ற பாற்கடல் அமுதம் வேண்டாம், கண்ணார் அமுதமான கடவுளே எங்கள் நோக்கம் என்பது குறிப்பு.  கடவுளின் திருவடிப் பெருமையைக் கூறும் பாடல். 

-டாக்டர் சுதா சேஷய்யன்







நன்றி Hindu

(Visited 10053 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − two =