ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 8
கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென் றாராய்ந்து அருளேலோர் எம்பாவாய்!
பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்:
இப்பொழுது எழுப்பப்படுபவள், கண்ணனுக்கு மிகவும் பிடித்தமானவள்; எப்போதும் உற்சாகமாக இருப்பவள். “கீழ்த்திசை வானம் வெளுத்துவிட்டது. பால் கறப்பதற்கு முன்னர், எருமை மாடுகளை ஆயர்கள் அவிழ்த்து விட்டுள்ளனர். அம் மாடுகள், ஆங்காங்கே உள்ள சிறு புல்லை மேய்கின்றன. நோன்புக்குப் புறப்பட்டுவிட்ட பிற பெண்கள், நோன்புக்களம் நோக்கிச் செல்கின்றனர். அவர்களைத் தடுத்து உன்னையும் அழைத்துப் போவதற்காக வந்தோம். பதுமை போன்றவளே, எழுந்திரு. நோன்பியற்றி, குதிரையின் வாயைப் பிளந்தவனை, மல்லர்களோடு போரிட்டு வென்ற தேவாதி தேவனை நாம் வழிபட்டால், நமக்கு என்னவேண்டும் என்பதை ஆராய்ந்து அவன் அருள்வான்’ என்று அழைக்கிறார்கள்.
பாசுரச் சிறப்பு:
பொழுது விடிவதற்கான அடையாளங்களாகப் பறவைகளின் ஒலி, திருக்கோயில் சங்கநாதம், முனிவர்களும் யோகிகளும் இறைவன் திருநாமம் கூறும் மிடற்றொலி, இல்லங்களில் பெண்கள் நடமாடும் ஒலி ஆகியவற்றைக் காட்டிய ஆண்டாள், இப்பாசுரத்தில் எருமைகளின் நுனிப்புல் மேய்தலைக் காட்டுகிறாள். இடையர்கள், அதிகாலை நுனிப்புல் மேய்வதற்காக மாடுகளை விடுவார்கள். அருகிலிருக்கும் புல்வெளியில் சிறிது பொழுதே கிடைக்கும் அவகாசம் இது. நாள் முழுதும் மேய்ச்சல் காட்டில் கிடைப்பது பெருவிடுதலை என்றால், இதைச் சிறு விடுதலை (வீடு=விடுதலை) என்று மாடுகள் நினைக்குமாம். உள்ளுறைப் பொருளில், எம்பெருமானாலேயே “நம்முடையவர்’ என்று பிரியம் காட்டப்பட்டவரும் கலிக்கு விடியலாகத் தோன்றியவருமானநம்மாழ்வாரை இப்பாசுரம் சுட்டுகிறது.
அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – பாடல் 8
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்!
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பாவாய்.
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர் – மயிலை சற்குருநாதன்
பாடியவர் – சுந்தர் ஓதுவார்
விளக்கம்:
சிவபெருமான் பெருமையைப் பாடிக்கொண்டு வந்து புறத்தே நிற்கும் பெண்கள், இப்பொழுது, விடியலின் அடையாளங்களைக் கூறத் தொடங்குகிறார்கள். “வீட்டில் வளர்க்கும் கோழிகள் கூவுகின்றன. குருகுகள் (நாரைகள்) உள்ளிட்ட பிற பறவைகளும் ஒலி எழுப்புகின்றன. மக்களும் விழித்தெழுந்து, திருக்கோயில்களை அடைந்து மங்கலக் கருவியாம் நாகஸ்வரத்தையும் வெண்சங்குகளையும் இசைக்கிறார்கள்.
ஒப்பற்ற பேரொளியே, ஒப்பற்ற பெருங்கருணையே, ஒப்பற்ற விழுப்பொருளே என்றெல்லாம் வாயார இறைவன் பெருமையைப் பாடுகிறோம். எந்த ஓசைக்கும் நீ எழவில்லையென்றால், இதென்ன பேருறக்கமோ புரியவில்லையே! ஊழிக்காலத்தில் முழு முதல்வனாகவும் மாதொருபாதியனாகவும் திகழ்கிற பெருமானை நாங்கள் பாடுகிறோம். ஒருவேளை இவ்வாறு கிடப்பதுதான் இறைவன் மீது நீ வைத்திருக்கும் அன்போ?’ என்று வினா எழுப்புகிறார்கள்.
பாடல் சிறப்பு:
“ஏழை பங்காளன்’ என்னும் சொற்றொடர் கவனத்திற்குரியது; ஏழை என்பது ஏந்திழை; ஏழை பங்காளன் என்பது பெண்ணைத் தன் பங்காகக் கொண்டவன்; அர்த்தநாரீஸ்வரப் பெருமான். கோழி, குருகு, நாகஸ்வரம், சங்கு ஆகியவற்றின் ஒலிகளைக் குறிக்கிறார்கள் என்றாலும், அவையும் தத்தம் முறையில் இறைவன் பெயரை உரைப்பதாகவே இப்பெண்களுக்குப் படுகிறது. “கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை’ என்பதே வள்ளல் பெருமானின் “அருட்பெருஞ் சோதி தனிப்பெருங்கருணை’ வாசகம் ஆனது. அகத்திலுள்ள சேட்டை (ஜேஷ்டை) என்னும் நீர்வடிவ சக்தி எழுப்பப்படுகிறது.
– டாக்டர் சுதா சேஷய்யன்