ஸ்ரீரங்கம் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடங்கியது




திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசியையொட்டி பகல்பத்து உற்சவம் தொடங்கியது. முக்கிய வைபவமான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 25 ஆம் தேதி நடைபெறுகிறது. 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது. பகல்பத்து, ராப்பத்து இயற்பா என 21 நாள்கள் இந்த விழா நடைபெறும். 

இந்த ஆண்டுக்கான வைகுந்த ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் 14 ஆம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழி திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு அர்ஜூன மண்டபம் வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடினர்.

மாலை 6.30 மணிக்கு அர்ஜூன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பகல் பத்தின் முதல் நாளான நேற்று மூலவர் ரெங்கநாதர் முத்தங்கி சேவையில் காட்சியளித்தார். இந்த முத்தங்கி சேவை தொடர்ந்து 20 நாள்களுக்கு நடைபெறும்.

இதே போல் பகல்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (24-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். 

ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள்(25 ஆம் தேதி) வைகுந்த ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு  அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

சொர்க்கவாசல்  26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பகல் 1 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 31 ஆம் தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும். ஜனவரி 1 ஆம் தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை.

சொர்க்கவாசல் திறப்பு தினமான 25 ஆம் தேதி முதல் ராப்பந்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. ராப்பத்தின் ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் ஆயிரங்கால் மண்டபத்தின் நடுவே  உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.

ராப்பத்து ஏழாம் திருநாளான 31 ஆம் தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், எட்டாம் திருநாளான ஜனவரி 1 ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், பத்தாம் திருநாளான 3 ஆம் தேதி தீர்த்தவாரியும், 4 ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியும் நடைபெறும். இத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா நிறைவு பெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுஸ்ரீனிவாசன், கோவில் இணை  ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி, அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

18 விதமான வாத்தியங்கள்

ஸ்ரீரங்கம் அரங்நாத சுவாமி திருக்கோயிலில் தினமும் நடைபெறும் வைபவங்களில் 10 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். வைகுந்த ஏகாதசி விழா காலங்களில் மட்டும் 18 விதமான வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். இதில் பெரியமேளம், நாதஸ்வரம், டக்கை. சங்கு,  மிருதங்கம், வெள்ளியெத்தாளம், செம்புயெத்தாளம், வீரவண்டி உள்பட 18 வாத்திய கருவிகள் வாசிக்கப்படும். 







நன்றி Hindu

(Visited 10069 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − four =