
முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில் பகல் பத்து விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நிகழ்ச்சியில் முத்துசாய் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பூலோக வைகுண்டம் எனப்படும் இக்கோயிலின் மிகப்பெரிய விழாவான வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும்.
திருநெடுந்தாண்டகத்துடன் திங்கள்கிழமை விழா தொடங்கிய நிலையில், பகல்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தனுா் லக்னத்தில் நீள்முடி கிரீடம், ரத்தின அபயஹஸ்தம், திருமாா்பில் லட்சுமி பதக்கம், கா்ணபூசணம், பவளமாலை, அடுக்குப் பதக்கம், சூரியப்பதக்கத்துடன் அா்ச்சன மண்டபத்தை 7.45 -க்கு அடைந்தாா். 8.15 வரை திரையிடல் நிகழ்ச்சியும், 8.15 முதல் பிற்பகல் 1 மணி வரை அரையா் சேவையுடன் பொதுஜன சேவையும் நடைபெற்றது. திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.
பகல்பத்து 2 ஆம் நாள் திருநாள் நிகழ்ச்சியான இன்று புதன்கிழமை காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கருவறையில் இருந்து புறப்பட்டு ரத்தின அபயஹஸ்தம், திருமார்பில் லட்சுமி பதக்கம், கர்ண பூசனம், பவளமாலை, அடுக்கு பதக்கம், சூரிய பதக்கத்துடன் முத்து சாய் கொண்ட அலங்காரத்தில் அர்ச்சன மண்டபத்தை 7 மணிக்கு அடைந்தார். 7.45 வரை திரையிடல் நிகழ்ச்சியும், பின்னர் மூலஸ்தானத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் நம்பெருமாள். திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனா்.