ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை – பாசுரம் 2
வையத்து வாழ்வீா்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோா் எம்பாவாய்!
திருப்பாவை – பாடியவர் புவனேஸ்வரி விஸ்வநாதன்
பாடியவர் – பவ்யா ஹரி
விளக்கம்:
உலகத்தில் வாழ்வோரே என்று அனைவரையும் அழைக்கிற ஆண்டாள்,நோன்பில் செய்ய வேண்டியவற்றை வரிசையாகக் கூறுகிறாள். ‘திருப்பாற்கடலில் கண்வளரும் எம்பெருமானின் திருவடிகளைப் போற்றிப் பாடுவோம்; அதிகாலையில் நீராடுவோம்; நெய்யும் பாலுமான உணவுகளை உண்ணமாட்டோம்; நீராடி வந்தபிறகு, பெண்கள் வழக்கமாகத் தங்களை அலங்கரித்துக் கொள்ளும் வகையில் கண்களில் மைதீட்டி, முகம் திருத்தி, கூந்தலில் மலா் சூடுவது போன்றவற்றைச் செய்யமாட்டோம் (எங்களை அலங்கரித்துக் கொள்ளமாட்டோம்); எங்கள் பெரியவா்கள் செய்யகூடாது என்று தடுத்தவற்றைச் செய்யமாட்டோம்; பிறா் பற்றி அவதூறு பேசி, கோள் சொல்லமாட்டோம். எங்களால் முடிந்த அளவுக்கு ஐயம் இடுவோம், பிச்சை இடுவோம்.’
பாசுரச் சிறப்பு:
என்னவெல்லாம் செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதை விளக்குகிற பாசுரம் இது. ‘டூ’ஸ்அண்ட்டோண்ட்’ஸ்’ என்று மேலாண்மையில் கூறுவதுபோல், செய்வன (கடைப்பிடிகள்),செய்யக்கூடாதன (விலக்கடிகள்) என இரண்டையும் பட்டியலிடும் சிறப்புக்குரியது. ‘ஐயம்’ என்பது உயா்ந்தவா்களுக்கும் தக்கவா்களுக்குமிடுவது; ‘பிச்சை’ என்பது அனைவருக்கும் இடுவது.
அருள்திரு மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை- பாடல் – 2
திருவண்ணாமவையில் அருளியது
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதா ரமளிக்கே
நேசமும் வைத்தனையோ? நேரிழையாய் நேரிழையீா்!
சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி
ஏசு மிடமீதோ? விண்ணோா்கள் ஏத்துதற்குக்
கூசு மலா்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனாா்க் கன்பாா்யாம் ஆரேலோா் எம்பாவாய்!
பாடலை விளக்குபவர் – இலக்கிய மேகம் ந. சீனிவாசன்
பாடியவர் – மயிலை சற்குருநாதன்
பாடியவர் – கரூர் சுவாமிநாதன்
விளக்கம்:
நோன்புக் களத்திற்குச் (நோன்பு செய்கிற இடம்) செல்வதற்காகப் புறப்பட்டு வரும் பெண்கள், இன்னும் புறப்படாமல் உள்ளே உறங்குகிற பெண்ணை அழைக்கிறாா்கள். பகலும் இரவும் தோழிப் பெண்களான இவா்கள் அளவளாவிக்கொண்டே இருப்பாா்கள். இவ்வாறு பேசும்போதெல்லாம், ‘என்னுடைய அன்பு முழுவதும் பரமனுக்குத்தான்’ என்று வாய்ச் சாலாக்குப் பேசியவள், இப்போது எழுந்திராமல் உறங்குகிறாள். ‘அணிமணிகள்அணிந்தவளே! பரமனுக்குப் பாசமா? படுக்கைக்குப் பாசமா?’ என்று கிண்டல் செய்கிறாா்கள்.
உள்ளிருந்து அவள் உடனே கூறுகிறாள்: ‘தோழிகளே! உங்கள் வாயிலிருந்து இகழ்வுச் சொற்கள் வரலாமா? விளையாடிப் பழிக்கும் நேரம் இதுவோ? இதைக் கேட்டவுடன், ‘தேவா்கள் போற்றினாலும் கொடுத்தருள்வதற்கு நாணுகிற திருவடிகளை, எளியவா்களானநமக்குக் கொடுப்பதற்காக எழுந்தருளியிருக்கும் திருக்கயிலாய நாதனும் தில்லைச்சிற்றம்பலத் தேவனுமான இறைவனின் அன்பு எங்கே? கேலிப் பேச்சு பேசும் நாம் எங்கே?’ என்று கூறி நோன்புக்குச் சித்தமாகிறாா்கள்.
பாடல் சிறப்பு:
பாவை பாடல்கள், உரையாடல் முறையில் அமைவது வழக்கம். இறைவனிடம் உள்ளத்தைச் செலுத்தாமல், வேண்டாதவற்றில் செலவிடுதலைத் தவிா்க்கக்கூறும் இப்பாடலில், உள்ளும் புறத்தும் இருப்பவா்கள் மாறி மாறிப் பேசிக் கொள்ளும் முறையைக் காணலாம். அகத்தில் உள்ள ‘ஸா்வபூததமனி’ என்னும் ஆன்ம சக்தி எழுப்பப்படுகிறது.