பீத மாதமும் பாவை நோன்பும்
மார்கழி மாதம்தான், சாந்தீபனியின் ஆச்ரமத்தில் கிருஷ்ணர் பாடம் கேட்டார் என்னும் நம்பிக்கையும் உண்டு. மார்கழி மாதத்தை தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என்று விவரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும், சூரியோதயத்திற்கு முன்னதாக இருக்கும் 96 நிமிடங்கள், பிரம்ம முகூர்த்தமாகும். பொழுது புலர்ந்து நாள் தொடங்குவதற்கு முன்னர், கடவுளை வணங்கி வழிபட வேண்டிய நேரம் அது.
நம்முடைய ஓராண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்; தை முதல் ஆனி வரையிலான உத்தராயண ஆறு மாதங்கள் அவர்களுக்குப் பகல்; ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயண ஆறு மாதங்கள் அவர்களுக்கு இரவு. இந்தக் கணக்கில், தேவ பகல் தொடங்கும் தை மாதத்திற்கு முன்னதான மார்கழி, தேவர்களின் பிரம்ம முகூர்த்தமாகும். இந்த வேளையில், தேவர்களும் முனிவர்களும் இறைவனை வழிபடுகிறார்கள்.
மார்கழி மாதத்தில் இறைவனைத் துதித்துப் பலவாறாக நம்முடைய முன்னோர்கள் வழிபட்டார்கள் என்பது புராணங்கள் வழியாகவும் இலக்கியங்கள் வழியாகவும் புலனாகிறது.
ஆயர்பாடிப் பெண்கள், ஆற்று மணலில் பாவை (அம்பிகை போன்ற பொம்மை) பிடித்து வைத்து வழிபட்ட தகவல், ஸ்ரீமத் பாகவதத்தின் தசம ஸ்கந்தத்தில் (பத்தாவது தொகுப்பு) காணப்படுகிறது.
ஹேமந்தே ப்ரதமே மாஸி நந்த வ்ரஜகுமாரிகா:
சேருர்ஹவிஷ்யம் புஞ்சானா: காத்யாயன்யர்ச்சனவ்ரதம்
ஆப்லுத்யாம்பஸி காலிந்த்யா ஜலாந்தே சோதிதே அருணே
க்ருத்வா ப்ரதிக்ருதிம் தேவீமானர்சுர் – – –
காத்யாயனி மஹாமாயே மஹாயோகின்யதீச்வரீ
நந்த கோப ஸூதம் தேவி பதிம் மே குரு தே நம:
ஹேமந்த பருவத்தின் முதல் மாதத்தில் (மார்கழி), நந்த விரஜையின் கோபிகைகள், விரதமிருந்து, காத்யாயனி வழிபாடு செய்தார்கள். காளிந்தி நதியின் (யமுனை) கரையில் மணல் பாவை பிடித்து அம்பாளாக வழிபட்டார்கள். காத்யாயனி, மகாமாயீ, மகா யோகீச்வரி என்றெல்லாம் அழைத்து, “நந்தகோபர் மகனாக கண்ணன் என் கணவனாக ஆகும்படி அருள்வாயாக’ என்று வேண்டினார்கள். சங்கத் தமிழ் நூலான பரிபாடல், அம்பா ஆடலைக் குறிப்பிடுகிறது.
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிரும் திங்கள் மறுநிறை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப
வெம்பாதாக, வியன் நில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப்புலர் பாடி…
ஆதிரையோடு நிலவு சேர்கிற நன்னாளில், விரிநூல் அந்தணர்களின் விழா தொடங்கியபோது, கன்னியர் அம்பா ஆடல் ஆடினர். மிருகசீர்ஷத்திற்கு அடுத்த நட்சத்திரம் திருவாதிரை. ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி நிலவானது 2 நட்சத்திரத்தோடு இணையும் (27 நட்சத்திரங்கள் – 12 மாதங்கள், ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் 2 நட்சத்திரங்கள்). மார்கழிப் பெளர்ணமியில் (அது மிருகசீர்ஷம் அல்லது ஆதிரை என்று எதுவானாலும்) அந்தணர்கள் தங்களுடைய அத்யயனத்தைத் தொடங்கினார்கள். அதே நாளில், கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மணலால் அம்பிகை வடிவம் செய்து நோன்பு நோற்றார்கள்.
நூற்றாண்டுகள் பலவற்றுக்கு முன்னர் அம்பா ஆடலாக இருந்த நோன்பு முறை, பின்னர், தைந்நீராடல் என்றும் வழங்கப்பட்டிருக்கிறது. எவ்வாறு? சந்திர- சூரிய அசைவுகளைக் கொண்டு நாள்களைக் கணிக்கும்போது, நட்சத்திரக் கணக்கு சில நாள்கள் முன்னும் பின்னும் வரக்கூடும். இதனால், மார்கழியில் தொடங்கினாலும், விரத நாள்களின் கணக்கானது, தை மாதம் வரை நீளக்கூடும். தை மாதமும் ஹேமந்த ருதுவின் காலமும் முன்பனிக் காலமும் ஆகும். ஆக, மார்கழி நீராடல் என்பது தைந்நீராடலும் ஆனது. திருவாதிரையில் தொடங்கி (மார்கழிப் பெளர்ணமி) பூசம் வரை (தை / புஷ்யப் பெளர்ணமி) தைந்நீராடல் என்று கணக்கு.
பாகவதமும் பரிபாடலும் கூறுவதைக் காணும்போது, தங்களின் எதிர்காலம் நன்கு அமைய வேண்டும் என்பதற்காக நல்ல கணவனை நாடி இப்பெண்கள் நோன்பு நோற்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. கூடவே, நல்ல மழை பொழிந்து நிலம் வளமாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்திருக்கிறார்கள். நல்ல கணவனை வேண்டுவது சுயநலம் போல் தோன்றினாலும், மழையும் வளமும் நலமும் என்று வேண்டும்போது, இதுவே பொது நலமாகவும் மாறுகிறது என்பார் பேரறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார்.
எப்படியாயினும், இந்த நோன்பானது, மனக் கட்டுப்பாட்டையும், செயல் கட்டுப்பாட்டையும் தந்தது என்பதில் ஐயமில்லை. மணல் பாவையைப் பிடித்து வைத்ததால், பாவை பாடல் என்னும் பெயர் வந்ததாகக் கூறினாலும், இப்பெண்கள் பாடிய பாடல்களின் முற்றுவரி “பாவாய்’ என்று நிறைவு பெற்றதால், இந்த இலக்கிய வகைக்குப் பாவை பாடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வார்கள்.
பாவை பாடலின் நன்னோக்கமும் மன உறுதியும், மாணிக்கவாசகர் காலத்திலும், ஆண்டாள் காலத்திலும் ஆன்மிகப் பக்குவத்தை அடைந்து, மார்கழி மாத நோன்புக்கும் வழிபாட்டிற்கும் வழி
கோலின.
(நிறைவு)
டாக்டர் சுதா சேஷய்யன் எழுதும் திருப்பாவை – திருவெம்பாவை உரைவிளக்கம் நாளை முதல்…