ஒரு ஜாதகர் எப்படிப்பட்ட குழந்தை பாக்கியத்தை பெறுவார்?




 

குழந்தை பாக்கியத்தைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்… 

முதலில் ஒருவர் திருமணம் ஆன பின்னர், திருமணம் செய்து வைத்த பெற்றோர், ஜோதிடரிடம் முதலில் கேட்பது.. எனது மகன் / மகளுக்கு எத்தனை குழந்தைகள்? குழந்தை எப்போது பிறக்கும்? இதுபோன்று நிறையக் கேள்விகள் கேட்பார்கள். அதேபோல் தான் காதல் திருமண தம்பதியினரும், தமது விருப்பம் திருமணத்தில் நிறைவேறினாலும் அடுத்து குழந்தையைப் பற்றிய கவலை சூழ்ந்துகொள்ளும்.

“எப்படிப்பட்ட” என்பதில் இருவேறு கேள்விகள் உள்ளது. முதலில் இயற்கை முறையில் குழந்தை பிறப்பா? அல்லது செயற்கை முறையில் குழந்தை பிறப்பா? என்பது அடுத்தது, அப்படிப் பிறக்கும் குழந்தை அதன் குண நலன்களில் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பது.

ஜாதகருக்கு எத்தனை குழந்தைகள்? 

ஒருவரின், ராசி சக்கரத்தில், லக்கினத்திற்கு 5ஆம் அதிபதி யாரோ, அவர் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் எனக் குறிப்பெடுத்துக் கொள்ளவும். அந்த வீட்டை முதலாவதாக, ராசி சக்கரத்தில் கொண்டு, லக்கினம் வரும் வரை எண்ண, எத்தனை கிரகங்கள் வருகிறதோ, அத்தனை குழந்தைகள் எனக் கொள்ளலாம்.

அதில் ஆண் கிரகங்களான செவ்வாய், குரு, சூரியன் மற்றும் ராகு இருப்பின் அத்தனை ஆண் குழந்தைகள் என்றும், பெண் / அலி  கிரகங்களான சந்திரன், புதன், சுக்கிரன், சனி, கேது இருப்பின் அத்தனை பெண் குழந்தைகள் என்றும் அறியலாம். இதில் மாந்தி இருப்பின், அது ஒரு கருச் சிதைவையோ அல்லது பிறந்து இறத்தலையோ உணர்த்தும். இன்னும் துல்லியமாகக் கூறப்போனால், மேற்சொன்ன கிரகங்கள் பெற்ற சாரம், பிறக்கும் குழந்தைகளின், ஆண் / பெண் வாரிசைப் பற்றி நன்கு  உணர்த்தும்.

இதில் தம்பதிகள் இருவருக்கும் ஒன்றாக வந்தால், நிச்சயமாக நமது கணிப்பு தப்பாது. ஆனால், ஒருவருக்கு வரும் கிரகங்கள் 3 என்றும் மற்றவருக்கு இரண்டும் என்றும் வந்தால், நிச்சயம் 2 குழந்தைகள் உண்டு எனலாம். ஆனால், அதற்கடுத்து பிறக்கும் குழந்தையோ அல்லது முதல் குழந்தைக்கும் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கும் இடையிலோ, கருவிலேயே சிதைவு ஏற்படவோ அல்லது பிறந்து உடனே இறக்கவோ நேரிடும். ஆக மொத்தம் இரண்டு குழந்தைகள் நிச்சயம் உண்டு எனலாம்.

இப்படிப்பட்ட குறைந்த எண்ணிக்கையில் (ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான்) வருகிறபோது, அந்த தம்பதியினருக்கு, ஒரு ஜோதிடர், குழந்தை பிறப்பைத் தள்ளியோ அல்லது வேண்டாம் என்றோ செய்துவிடாதீர்கள் என எச்சரிக்கை செய்வார். ஏனெனில் ஒரு சிலருக்கு ஒரு குழந்தை தான் என இருக்கும் போது, அதனை உதாசீனப்படுத்துவார்களானால், அவர்களுக்கு அடுத்து குழந்தை பாக்கியம் பெறுவது மிகவும் கேள்விக்குறியாகிவிடும். இதில் எச்சரிக்கை அதிகம் தேவை.

இது ஒரு ஜோதிடம் மூலம் பெறும் அனுமானமே.. ஏனெனில் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. ஜோதிடம் ஒரு முன்னெச்சரிக்கை / வழிகாட்டி தானே தவிர, முற்றும் உணர்த்தும் நிலை இல்லை. அதோடு, ஜோதிடர் ஒரு படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவும் இல்லை. சிலருக்கு, ஜோதிட ரீதியாகப் பிள்ளைகள் இல்லை என அறிந்து சொன்ன ஜாதகருக்கு, தகுந்த பரிகாரங்கள் மற்றும் இறை அருளால் புத்திர பாக்கியம் பெற்றவர்களையும் பார்க்கவே முடிகிறது.

மேலும், ஜோதிட விற்பன்னர், கல்யாண ராமர் தமது சாராவளி எனும் நூலில், இரண்டு முதல் 6 கிரகங்கள் வரை ஒரே ராசியில் (எந்த ராசியானாலும்) ஜனன காலத்தில் இருப்பின், அதன் பலன்களைத் தெளிவாகக் கூறியுள்ளார். அதில் ஒன்று, எந்த ஒரு ராசியில் சூரியன் மற்றும் சனி, புதன் எனக் கூட்டு இருந்தாலும் அவர் மூன்றாம் பாலினத்தவராக இருப்பார் என அறுதியிட்டுக் கூறுகிறார். இதனை சில ஜாதகத்தை ஆய்வு செய்தபோது, அது உறுதியானது.

ஆண் மலடு உண்டு. பெண் மலடு இல்லை. குழந்தை பெறுவதில், தாமதமோ அல்லது பெறுவதில் சிரமமோ ஏற்படுமே தவிர நிச்சயம் பெண் மலடு இல்லை. இதனை இன்று அறிவியலும் நிரூபித்திருப்பது தான் உண்மை நிலவரம். இந்த விஷயத்தில் யோனிப் பொருத்தமும், கணப்பொருத்தமும் ஜாதகத்தில் ஓரளவு தெரிய வரும். இதனை கரணப்பொருத்தம் வெளிப்படையாக தெரிவிக்கும்.

ஒரு ஆணின் மலட்டுத் தன்மையை பீஜ ஸ்புடம் எனும் ஜோதிடக் கணிப்பு மூலமும், பெண்ணின் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் தன்மையை க்ஷேத்ர ஸ்புடம் எனும் கணிப்பு மூலமும் திருமணத்திற்கு முன்னரே அறியமுடியும். ஒரு தம்பதியருக்கு மருத்துவ ஆலோசனை தேவையா அல்லது தேவை இல்லையா என்பதனை தெரிவிக்க முடியும். இது தவிர நிச்சயம் ஒருவருக்குக் குழந்தை பாக்கியம் உண்டா இல்லையா என அறிய, சதுர் ஸ்புடம் எனும் ஜோதிடக் கணிப்பு கூறிவிடும். ஏன்? ஒருவருக்கு இவ்வாறு குழந்தை பாக்கியம் இல்லாத போது, தத்து புத்திர யோகமாவது உண்டா இல்லையா என அறியும் நிலையையும் நமது முன்னோர்களான முனிவர்களும், ஜோதிட விற்பன்னர்களும் தெளிவுபடுத்தி உள்ளனர்.

ஒருவரின் ஜாதகத்தில், ஐந்தாம் அதிபதியின், நட்சத்திரத்தில், சுபக் கிரகம் அமைந்துவிட்டால் (இயற்கை சுபர் / லக்கின சுபர்), குழந்தை இல்லாமல் போகாது எனலாம். 

மனைவியின் ஜாதகத்தில் புத்திர காரகரான குரு இருக்கும் ராசியில், கணவரின் ஜாதகத்தில், ராகு, மாந்தி இருப்பின், இந்த தம்பதியினருக்கு, கருத்தரித்தும், கரு தங்காமல் போய்விடும். இதுபோல் பல விஷயங்களைச் சீர்தூக்கிக் காணுதல் அவசியம்.

ஜோதிடம் பார்க்க வருபவர்களின் அவசரமும், திருமணப் பொருத்தத்தின் போது பெற்றோர் காட்டும் அலட்சியமும் குழந்தை பிறப்பில் பல கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வருகிறது.  இது ஒரு புறம் இருக்க , நாம் பெற்றுக்கொள்ளும் புத்திரரின் நிலை, அவர்களால் மகிழ்ச்சியா அல்லது பிரச்னை தானா என்பதனையும் ஒருவரின், ஜனன கால ஜாதகத்தில் அறிய முடியும். அதனை ஓரளவு சில லக்கினங்களுக்கு மட்டும் இப்போது காண்போம்.

பிறக்கும் குழந்தைகளின் நிலைமை / நிலை என்ன என்பதனை, லக்கினம் வாரியாக பார்க்கலாம்..

மேஷ லக்கினம்

இந்த லக்கினத்திற்கு புத்திரகாரகரான குரு, பாக்கிய ஸ்தானத்து அதிபதி மற்றும் விரையாதிபதியும் ஆகிறார். பாக்கியாதிபதி 5ஆம் இடமான புத்திர ஸ்தானத்தில் இருப்பின், நல்ல குழந்தைகள் ஏற்படுவார்கள். பெண் குழந்தைகளே அதிகமாக இருக்கும். அதே சமயம் குருவே விரையாதிபதியாகவும் இருப்பதால், பிள்ளைகள் துஷ்டர்கள் ஆவார்கள். இந்த குருவானவர் மகம் 2, 3 பாதத்தில் மற்றும் பூரம் 3ஆம் பாதத்தில்   பகை சாரம் பெறுவதால், மேற்சொன்ன கெடு பலன்கள் அமையும். இல்லை எனில் நல்ல பலன்களே ஏற்படும்.

மிதுன லக்கினம்

இந்த லக்கினத்திற்கு, புத்திர காரகரான குரு 7, 10 எனும் கேந்திரத்துக்கு உடையவர் ஆகிறார். இந்த குரு 5ல் இருப்பது திரிகோணம் ஆகிறது. குரு இங்கு உள்ளதால், யோக பலன்களை அளிக்கும் நிலையில் இருப்பார். நல்ல புத்திரர்களைத் தருவார் எனலாம். இந்த இடத்தில் உள்ள குரு, விசாகம் 2, 3ல் பகை நவாம்சம் ஸ்வாதி -2ல் நீச்ச நவாம்சமும் பெறுவதால், அதிகமான நன்மைகள் ஏற்படாது எனலாம். மற்ற பாதங்களில் நிற்கும் குரு நற்பலன்கள் தருவார் எனலாம்.

சிம்ம லக்கினம்
இந்த லக்கினத்திற்கு, புத்திர காரகரான குரு, 5ஆம் இடத்திற்கும் அஷ்டமஸ்தானம் எனும் 8ஆம் இடத்திற்கும் உடையவராகிறார். புத்திர நாசம் உண்டாகும். இவரே 8ஆம் அதிபதியும் ஆவதால், புத்திர தோஷம் உண்டாகும். மேலும், குரு, மூலம் – 2 , 3 பாதமும் , பூராடம் -3 ல் பகை நவாம்சம் பெறுவது, கெடுதலாகும்.

துலாம் லக்கினம்

இந்த லக்கினத்திற்கு, புத்திர காரகரான குரு, 3ஆம் இடத்திற்கும், 6ஆம் இடத்திற்கும் அதிபதியாகிறார். தனது புத்திரனை வைத்து ரட்சிப்பவர் ஆகிறார். குரு 6-ம் அதிபதியும் ஆவதால், 6க்கு உடையவர் 5ல் இருப்பதால், தனது புத்திரனால், பகை உண்டாகும். தந்தையுடன், சுமுகமான உறவு இருக்காது. இந்த குருவானவர், சதயம் -2 ல் நீச்ச நவாம்சம், அவிட்டம் 3, பூரட்டாதி 2, 3ல், பகை நவாம்சம் பெறுவது, கெடுதலாகும்.

பொதுவாகவே, 5ஆம் இடத்தில் பாவர் இருந்து குருவுக்கு 5ல் சனி இருந்தால், கட்டிய மனைவியிடம் அல்லாமல் வேறு இடத்தில் பிள்ளை உண்டாகலாம். அல்லது 2ஆவது மனைவிக்குக் குழந்தை பிறக்கலாம்.

மகர லக்கினம் 

இந்த லக்கினத்திற்கு புத்திரகாரகரான குரு ஆனவர் 3ஆம் இட த்து அதிபதி மற்றும் விரையாதிபதியும் ஆகிறார். தனது மூத்த சகோதரர்களின் பிள்ளைகளை ஆதரிப்பவர் ஆகிறார். இது எப்படியெனில், லக்கினத்திற்கு 11ஆம் இடம் மூத்த சகோதரர் / சகோதரி  ஸ்தானம், அவரின் புத்திர ஸ்தானம் 5ஆம் இடம், குரு அதிபதி. அந்த குழந்தைகளையும் இவரே பராமரிக்க / உதவ வேண்டி வரலாம்.

அதே சமயம், குரு விரயாதிபதியும் ஆவதால், ஜாதகரின் பிள்ளை துஷ்டராக இருப்பார். அதனால், இவரின் பணம் / பொருள் கரையும். சரி இது எல்லா, மகர லக்கினகாரர்களுக்கும் பொருந்துமா என்றால், இல்லை. அப்படியானால், இந்த லக்கினகாரர்களின் ஜாதகத்தில், குரு கார்த்திகை -2 ஆம் பாதத்தில் நீச்ச நவாம்சம் பெற்றிருந்தாலோ அல்லது ரோகினி- 2, 3 ல் பகை நவாம்சம் பெற்றிருந்தாலோ இதுபோன்ற கெடு பலன்கள் நடைபெறும்.

மீன லக்கினம் 

இந்த லக்கினத்திற்கு , லக்கினாதிபதியே புத்திர காரகரான, குரு ஆவதால், ஐந்தாம் இடத்தில் உள்ள குரு, முதலில் புத்திர நாசம் உண்டாக்கும். அதற்கு காரகோ பாவ நாஸ்தி என ஜோதிடத்தில் அழைப்பார்கள். காரக கிரகம், காரக ஸ்தானத்தில் இருப்பின் இவ்வாறு நிகழும். இந்த லக்கினத்தைப் பொறுத்தவரை, லக்கினாதிபதியே, 10ஆம் அதிபதியும் ஆவதால், ஜாதகரை சத்தியவானாக ஆக்குவார். மேலும் புத்திர லாபம் அடைவார்.

அதே சமயம் இந்த 5ஆம் இடத்தில் குருவானவர், இந்த மீன லக்கினகாரர்களுக்கு, ஆயில்யம் -2 நீச்ச நவாம்சம், பூசம் – 3 பகை நவாம்சம் பெறுவதால், கெடுதலையே செய்யும் எனலாம். மேலே கூறப்பட்ட அனைத்தும் புத்திர காரகரான குருவை மட்டுமே வைத்து பலன் கூறப்பட்டுள்ளது மற்றும் அனைத்து கிரகங்களனைத்தும் வைத்து சீர்தூக்கி காணுதல் அவசியம் ஆகிறது.

மேலே கூறப்பட்ட அனைத்தும் ஜோதிடம் கூறும் தகவல்களே தவிர, இதுவே முடிவானது கிடையாது. அதற்கு உங்கள் அருகில் உள்ள, தக்க ஜோதிடரை அணுகி பலன்களை அறிந்துகொள்ளுங்கள்.

மகான்களை வணங்குவதனாலும், அவர்களின் ஜீவ சமாதிகளைச் சென்று வழிபடுவதாலும், சித்தர் வழிபாடுகளாலும், அனைவரும், புத்திர பாக்கியம் பெற்று, வாழ்வாங்கு வாழ, சீரடி சாயி நாதன் பாதம் பணிந்து, வாழ்த்துகிறேன்.

-“ஜோதிட ரத்னா” தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

மெயில்: sathyalogaveda@gmail.com







நன்றி Hindu

(Visited 1001,140 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 2 =