
கடந்த சில நாட்களாக கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் குறித்து அண்டை மாநிலமான தமிழகத்திலும் கடும் பீதி நிலவுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் தாக்குதல் குறித்த பீதியைப் போக்கும் விதத்தில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பரிந்துரைத்துள்ளது. அவை முறையே;
- நிபா வைரஸ் தொற்று இருக்கும் என சந்தேகிக்கும் இடங்களில் வாழும் பன்றிகளிடமிருந்து மனிதர்கள் விலகியிருத்தல் நல்லது. பன்றிக்கறி உண்பவர்கள் எனில் நிபா வைரஸ் தொற்று பீதி நீங்கும் வரை பன்றிக்கறியுண்ணும் ஆசைக்கு முற்றும் போடுவது நல்லது.
- பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன் நன்றாக நீரில் கழுவிய பின்னரே உண்ண வேண்டும், அணில் மற்றும் வெளவால் கடித்த பழங்களை உண்ணக் கூடாது.
- மூளைக்காய்ச்சல் & இன்ஃபுளூயன்ஸா வைரஸ் தொற்று இருப்பவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து போதிய சிகிச்சை அளித்துக் காக்க வேண்டும். ஏனெனில் இத்தகைய நோய்த்தொற்று உள்ளவர்களைத் தான் நிபா வைரஸ் எளிதில் டார்கெட் செய்கிறது. எனவே நோய் நாடி நோய் முதல் நாடி தீர்ப்பது பாதுகாப்பானது.
- நிபா வைரஸ் தொற்றைத் தவிர்க்க வனத்துறை, கால்நடை வளர்ப்புத் துறை, வனவிலங்குப் பாதுகாப்புத்துறை என மூன்று துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், காரணம் வனங்களில் வாழும் வெளவால்களிடமிருந்து பன்றிகளுக்கும் பிறகு பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்குமென இந்த வைரஸ் பரவுகிறது.
- கேரளாவில் இந்த வைரஸ் தொற்றால் 10 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். எனவே நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வை அண்டை மாநிலத்தவர்களான நம் தமிழக மக்களுக்கும் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
- நம்பகத்தன்மை வாய்ந்த தரமான ஆய்வகங்களில் மட்டுமே நிபா வைரஸ் தாக்கம் குறித்த சந்தேக ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
- வீடுகளில் கால்நடைகள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் வளர்ப்பவர்கள் தங்களது விலங்களிடம் நிபா வைரஸ் தொற்று அறிகுறி இருக்கிறதா என கால்நடை மருத்துவர்களை அணுகி சோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் வீட்டு விலங்குகள் வாயிலாகவே இந்த நோய் எளிதில் பரவுகிறது.
- நோய்த்தாக்கம் ஏற்பட்ட நபரை உடனடியாகத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பது நல்லது.
- நோயின் துவக்க கட்டத்திலேயே சிகிச்சை வழங்கத் தொடங்குவது உயிரிழப்பைத் தடுக்கும்.
நிபா வைரஸ் தொற்று அறிகுறிகள்…
- நிபா வைரஸ் மனித உடலைத் தாக்கிய மாத்திரத்தில் 3 முதல் 14 நாட்களுக்குள் மனித உடலில் முழு வீச்சில் பரவி விடுகிறது.
- நோய்த்தொற்று ஏற்பட்ட மூன்றாவது நாளில் இருந்தே காய்ச்சலும், தலைவலியும் தோன்றி விடும்.
- பாதிக்கப்பட்டவர்கள் சதா அரைத்தூக்க நிலையில் இருக்க நேரிடும்.
- நோய்த்தொற்று வீரியமானதாக இருந்தால் நோயாளி 28 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்குச் சென்று விடுவார்.
- சிலருக்கு ஆரம்ப நிலையில் சுவாசக் கோளாறுகளும் பிறகு நேரமாக, ஆக நோயின் வீரியம் கூடி அதிதீவிரமான நரம்பியல் பாதிப்புகளும் ஏற்படும்.
- சிலருக்கு வலிப்பு வரும்.
- கோமா நிலைக்குச் செல்லும் நோயாளிகள் பலர் உயிரிழக்க நேரிடும்.
சிகிச்சை…
நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து பூரணமாக விடுபட தடுப்பூசிகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தால், நோயாளியை தனிமைப்படுத்தி உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதொன்றை மட்டுமே இப்போது செய்ய இயலும். சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் போதிய தற்காப்பு உபகரணங்களை அணிந்து கொள்வது அவசியம்.
(Visited 10013 times, 31 visits today)