உஷார்! சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்! 




 

மனித மூளையின் ஆரோக்யமான  செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சக் கெஞ்ச அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது.

அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 

அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது. 

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்னை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல்களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள்  குழப்பமடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது  தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும். 

இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

இம்மாதிரியான ஆழ்மன விசாரங்கள் தன்னைத்தானே உருக்கிக் கொள்வதோடு முடிந்து விடுவதில்லை, தன் சக மனிதர்களையும் தன்னை அணுக விடாது தன்னைச் சுற்றி மனதளவில் ஒரு வேலியிட்டுக் கொண்டு மனநோய் உள்ளிட்ட உளவியல் நோய்களில் வீழ இட்டுச் செல்லும். 

சுருக்கமாகச் சொல்வதென்றால் சரியான தூக்கமின்றி ஆண்டுக்கணக்காக வாழ நேர்பவர்கள் ஒருபாதி மனநோயாளிகளாகி விடுகிறார்கள். அவர்களுக்குத் திடீரென கோபம் வரும், திடீரென நன்றாகப் பேசுவார்கள், சட்டென மூர்க்கமாகி எப்பேர்ப்பட்ட நட்பையும், உறவையும் துண்டித்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஒரு நிலையான பாதுகாப்பான மனநிலையின்றி மனதளவில் ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். மனநல மருத்துவர்களின் கணிப்பின் படி குறைவான தூக்கத்துக்கும் மனநலப் பிரச்னைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால் தான் மனநல மருத்துவர்கள் முதல் அனைத்து மருத்துவர்களும் எல்லாவித உடல் நலக் கோளாறுகளுக்கும் போதுமான தூக்கமின்மையையே முதல் காரணமாக முன் வைத்து நோயாளிகளின் ஆரோக்யமான தூக்க நேரத்தைப் பற்றி அறிவுறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். 

தூக்கமின்மை என்பது மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம், இதயத்தின் ஆரோக்யமான செயல்பாடு, மற்றும் பாலியல் ஈடுபாடு உள்ளிட்ட விவகாரங்களில் கூட குறிப்பிடத்தக்க அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். நாளடைவில் அதே நிலை நீடிக்குமானால் கேன்சர் நோயின் தாக்கத்துக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்யக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள் எனில் நிச்சயம் இனியொரு முறை தங்களது தூக்க நேரத்தை ஒத்திப்போடவோ அசட்டையாக நிராகரிக்கவோ மாட்டார்கள் என நம்புவோம்.







நன்றி Hindu

(Visited 10011 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + fourteen =