நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது என்ன?




 

தெருநாய் என்பவை இல்லாத தெருக்கள் இல்லையெனலாம். ஒவ்வொரு தெருவிலும் இந்த நாய்களின் ராஜ்ஜியம் நடக்கும். சில தெருக்களில் இவை சிங்கங்கள் போல கர்ஜித்துக் கொண்டிருக்கும். வெறி நாய் எது சாதாரண நாய் எதுவென்று கணிக்க முடியாதபடியும் இருக்கும். நாம் அதை சீண்டாதவரை நம்மை ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்போம். ஆனால் நாய்க்கடி செய்திகளைப் படிக்கும் போதோ, கேள்விப்படும் போது பீதியடைவதை தவிர்க்க முடியாது. நாய் கடிக்கு மருந்து உள்ளது என்றாலும், தீவிரமாக ஒரு வெறி நாய் கடித்து குதறிவிட்டால் அந்த மனிதர் பிழைப்பது கடினம் தான். 

ஒவ்வோர் ஆண்டும் உலகெங்கும் 60 ஆயிரம் பேர் வெறி நாய்க்கடியால் இறந்து போகிறார்கள். இதில் இந்தியாவில் மட்டும் 20 ஆயிரம் பேர். இதில் 50 சதவிகிதத்தினர் 15 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள். 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் என ஆய்வுகள் கூறுகின்றன என்றார் டாக்டர் ம.ராஜா. நாய்க்கடிக்கு என்ன சிகிச்சை உள்ளிட்ட பல முக்கியமான விஷயங்களை கூறினார்.

கடுமையான விஷம்

நாய்க்கடிக்கு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சைகளை முறையாக, தொடர்ந்து எடுத்துக் கொண்டால், உயிர் இழப்புகளைத் தவிர்க்கலாம். நாய்க்கடி கடுமையான விஷமாகும்.

நாய்க்கடியால் ஏற்படும் ரேபீஸ் வைரஸ் கிருமிகளின் தாக்கம், அதற்கான சிகிச்சை குறித்து விரிவாகப் பார்க்கலாம் :-

மூளையை நோக்கி நகரும் வைரஸ்

ரேபிஸ் வைரஸ் என்பது மூளையைத் தாக்கும் ஒரு நோயாகும். Lyssavirus எனப்படும் ரேபிஸ் வைரஸ், பாதிக்கப்பட்ட விலங்குகளின் எச்சிலில் இருக்கும். அவை வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கி பயணம் செய்யும். அதனால் முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும். கால், கைகளில் கடித்தால் மூளையை வந்தடைய மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம்.

தசை செல்களில் தொடங்கி

முதலில் தசை செல்களில் பல்கிப் பெருகும் கிருமிகள், பிறகு நரம்பு செல்களை வேகமாகத் தொற்றிக் கொள்ளும். நரம்பு செல்களில் மிக வேகமாக நகரும். 2 முதல் 12 வாரங்களுக்குள் நோயினால் தாக்கப்பட்ட விலங்குகள் கடித்தவுடன் நோய் வெளிப்படலாம்.

காயத்தின் தன்மையை பொருத்து

காயத்தின் ஆழம், கடித்த இடம், நோய்க் கிருமியின் அளவு போன்ற பல காரணங்களினால் சிலருக்கு 6 ஆண்டுகள் தாமதமாக கூட நோய் வரலாம். நோயின் அறிகுறி ஆரம்பித்த 2 முதல் 10 நாள்களுக்குள் மரணம் நிச்சயம்.

நாய் கடித்தவுடன் செய்ய வேண்டியது

வெறி நாயோ தெரு நாயோ வீட்டில் வளர்க்கும் நாயோ, பூனையோ, எலியோ, கடித்த இடத்தை ஓடும் தண்ணீரில் 10 முறை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும். விலங்குகளைத் தாக்கும் ரேபீஸ் கிருமி, அதன் எச்சில் மூலமாகத் தான் பரவும். உடலில் தோல் கிழியாத பட்சத்தில் எந்தக் காயத்திலும் நோய்க் கிருமி பரவாது. பயப்படத் தேவையில்லை.

கட்டு போடலாமா?

ஆனால் இந்த விலங்குகள் காலை நக்கிக் கொண்டே இருக்கும். அதனால் நகக்கீறலோ, பல் கடியோ, தோல் கிழிந்து ரத்தத்தில் எச்சில் பட்டாலே அதன் மூலம் கிருமி பரவ வாய்ப்பு உள்ளது. காயத்தை நன்றாக கழுவிய பிறகு ரத்தம் அதிகமாக வந்து காயம் ஆழமாக இருந்தால் மருத்துவரை அணுகும் வை கட்டுப் போடலாம். இல்லையெனில் திறந்த புண்ணே மேலானது. நாய் நக்குவதால், தோல் கிழிந்து இருக்காவிட்டால் நாய்க்கு உணவு அளிப்பதால், தொடுவதால் பிரச்னை கிடையாது. தடுப்பூசி தேவையில்லை. தோல் முழுமையாக இருந்தால் பிரச்னை இல்லை. தோல் கிழிந்து இருந்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தோல் கிழிந்து முகத்துக்கு அருகில் ஆழமான காயம் என்றால் உடனே தடுப்பூசி போட வேண்டும்.

தடுப்பூசிகள் (ARV Anti Rabies Vaccine)

நாய் கடித்து காயம் படுவதற்கு முன்பாக, நாய் வளர்க்க ஆசைப்படுபவர்கள், கால்நடை மருத்துவர்கள், உடஹ்வியாளர்கள், தற்காப்பாகப் போட்டுக் கொள்ளும் ஊசிகள். இது 3 மட்டும் போதுமானது. விலங்குகள் கடித்தபின் 5 ஊசிகள் கண்டிப்பாக போட வேண்டும் (1,3,7,14,28 நாள்கள்). வெறும் தோல் மட்டும் கிழிந்திருந்தால் தடுப்பூசி மட்டும் போதுமானது. இந்தத் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வைரஸ் கிருமிகளை அழித்து நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஆழமாக, முகத்துக்கு அருகில் என்றால் Rabbies Immune Globulin என்ற தடுப்பூசியை காயத்தை சுற்றிலும் போடுவது அவசியம். இதன் மூலம் காயத்தைச் சுற்றி தசைகளில் உடனடியாக கிருமிகள் பெருகுவதை முழுமையாக தடுக்க முடியும்.

நாய்க்கு தடுப்பூசி போட்டிருந்தாலும்

பொதுவாக நாய்க்கு தடுப்பூசி போட்டிருந்தால், கடிபட்டவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் என்பது தவறு. அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். 10 நாள், 20 நாள் நாயைப் பார்த்துக் கொண்டால் போதும் என்பதும் தவறானது.

5 தடுப்பூசிகள் அவசியம் : கடித்தால் 5 தடுப்பூசிகள் அவசியம். நாய்க்கு நோய் வராமலே நாயின் உடலில் கிருமிகள் இருக்கலாம். அவை மனித உடலில் பரவி, உடனே நோயாக மாறும். கீறினால் தடுப்பூசி தேவையில்லை என்பது தவறு. கீறினாலும் அவசியம், நகத்தை நக்கிச் சுத்தம் செய்வதால் எச்சிலில் நகத்தை பரவு கிருமி காயத்தில் பட்டால் நோய் பரவும். தோல் கிழிந்த விலங்கு கடித்த காயத்துக்கு 5 தடுப்பூசிகள் அவசியம். 3 தடுப்பூசிகள் போட்டால் போதாது.

5 ஆண்டுகள் மட்டுமே வீரியம் : இவ்வாறு எடுத்துக் கொண்ட 5 தடுப்பூசி 5 ஆண்டுகளுக்கு மட்டுமே வீரியத்துடன் இருக்கும். 5 ஆண்டுக்குள் ஊசி போட்ட ஓராண்டு கழிந்து மீண்டும் கடிபட்டால், ஒரு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். 5-வது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடிபட்டால் 5 ஊசிகளும் அவசியம். எந்த உணவுக் கட்டுப்பாடும் நாய்க்கடிக்குத் தேவையில்லை.
 







நன்றி Hindu

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 3 =