பற்களின் பளீர் புன்னகையைக் காக்க சாப்பிட வேண்டிய ஐந்து எளிய உணவுப் பொருட்கள்…




tooth_health

 
1. செலரி…
 

இதைப் பொடியாக நறுக்கி பிரியாணி மற்றும் நான்-வெஜ் கிரேவிகளின் மீது தூவி இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த செலரி விலையும் அப்படி ஒன்றும் பிரமாதமானதில்லை. மலிவான விலையில் சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் காய்கறி மொத்தவிலைக் கடைகளில் கிடைக்கும். 

செலரியை வாயிலிட்டு மெல்லும் போது அரிசிச் சாதம் போலவோ, மைசூர் பாகு போலவோ வாயிலிட்டதும் உடனே கரைந்து விடாது. நன்றாக மென்று விழுங்க வேண்டிய உணவு இது. அப்படி மெல்லும் போது சுரக்கும் அதிகப்படி உமிழ்நீர் பற்குழியை உருவாக்கக் கூடிய ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் எனும் பாக்ட்டீரியாவின் செயல்களை நியூட்ரலாக்கி கட்டுப்படுத்துகிறது. இதனால் செலரியை உணவில் எந்தவகையில் சேர்த்துக் கொண்டாலும் அவை பற்குழியை கட்டுப்படுத்த உதவுகின்றன. பற்குழி இல்லா வாழ்வைப் பெற செலரி சாப்பிடலாம். தினமும் நமது பல் துலக்கும் நேரங்களை சந்தோசமாக்கிக்  கொள்ளலாம் .
 
2. க்ரீன் டீ…
 

நாம் வீடுகளிலும் டீக்கடைகளிலும் வழக்கமாக சாப்பிடும் ரெட் டீயைக் காட்டிலும் க்ரீன் டீ பல வகைகளில் உடல் நலனுக்கு ஆரோக்கியமானது. பற்களின் நலனைப் பொறுத்தவரை க்ரீன் டீ ஒரு வரப்பிரசாதம். க்ரீன் டீயில் இருக்கும் “கேட்டசின்கள்” எனப்படும் மூலக்கூறுகள் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை உண்பதனால் வாயில் உருவாகும் பாக்டீரியாக்களை அழிப்பதுடன் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களையும் முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிறது என்பதால் ரெட் டீக்குப் பதிலாக எல்லோரும் தினம் ஒரு முறை க்ரீன் டீ சாப்பிட்டுப் பழகலாம்.
 
3. கிவி பழங்கள்…
 

கிவி பழம் ஆரஞ்சு, லெமன் போல விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பழ வகையைச் சேர்ந்தது, நாளொன்றுக்கு நமது உடலின் ஆரோக்கியப் பயன்பாட்டுக்குத் தேவைப்படும் விட்டமின் ‘சி’ யைக் காட்டிலும் 100  மடங்கு அதிகமான விட்டமின் ‘சி’ இந்தக் கிவி  பழத்தில் அபிரிமிதமாக தேங்கியுள்ளது.

பல் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட முக்கியக் காரணமாக இருப்பது இந்த விட்டமின் சி குறைபாடு தான். அத்தகைய விட்டமின் ‘சி’ சத்துக்கள் இந்தப் பழத்தில் நிறைந்திருப்பதால் கிவி பழங்களை வாரத்திற்கு மூன்று நாட்கள் பிற பழங்களோடு சேர்த்து உண்ண ஆரம்பிக்கலாம், ஏனெனில் பல் ஈறுகளின் பொலிவையும் பலத்தையும் தகர்க்கக் கூடிய பெரியோடென்டல்(periodontal ) நோய்களில் இருந்து பற்களைக் காக்கின்றன இந்த கிவி பழங்கள் .
 
விட்டமின் ‘சி’ சத்துக்கள் நிரம்பிய பிற கனி வகைகள் – ஆம்லா(நெல்லிக்கனி) கோவா(கொய்யாப் பழம்)
 
4. சீஸ்…
 

குழந்தைகளுக்கு தினசரி உணவில் ப்ரெட் அல்லது சப்பாத்தி மற்றும் நான் வகைகளில் சீஸ் தடவி சாப்பிடத் தரலாம். சீஸ்க்கு வாயின் அமிலகாரத் தன்மையை (PH) சமநிலைப் படுத்தும் தன்மை உண்டு என்பதால் வாய்ப்புண்கள் வராமல் தடுக்கும் என்பதோடு சீஸ் சாப்பிடுவதால் பற்களின் எனாமல் பாதுகாக்கப் படுவதோடு சீஸ்  சுவையானது வாயில் உமிழ் நீர் சுரப்பையும்  அதிகரிக்கும். இதனால் உணவை மென்று விழுங்குவது எளிதாகும்.
 
5. தண்ணீர்…


 
நாளொன்றுக்கு குறைந்த பட்சம் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது உடலின் மொத்த இயக்கத்துக்கான நீர்த் தேவையை நிறைவேற்றும் என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுவான தகவல்.ம்அப்படி ஒவ்வொரு முறை நீர் அருந்தும் போதும் பல் ஈறுகளின் ஈரப் பதம் பாதுகாக்கப் பட்டு உமிழ்நீர் சுரப்பது  தூண்டப் படுகிறது மேலும் எந்த உணவானாலும் சாப்பிட்டு முடித்த பின் எப்போதும் வாய் கொப்பளிப்பதை வழக்கமாக்கிக் கொள்வதன் மூலம் பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துணுக்குகள் அகற்றப் பட்டு வாய்துர்நாற்றம் ஏற்படும் நிலை தவிர்க்கப் படுகிறது. எல்லாக் காரணங்களையும் தாண்டி தண்ணீர் குடித்தே உயிர் வாழ்வோரும் உண்டு அதனால் தான் நீரின்றி அமையா உலகு என்று திருவள்ளுவரும் கூறி இருக்கிறார். எனவே எப்படிப் பட்ட  பிஸியான நேரங்களிலும் சரி தினமும் நமது உடலின் சமநிலைக்குத் தேவையான குறைந்த பட்ச தண்ணீரை குடிக்க மறக்கவே கூடாது அதே போல ஒவ்வொரு முறை எதை உண்டாலும் உண்டு முடித்த பின் வாய் கொப்பளிக்க வேண்டும். இதை தவறாது செய்தால் பற்களின் நலன் பாதுகாக்கப் படும்.
 
தண்ணீர் உட்பட மேலே குறிப்பிடப் பட்ட நான்கு வகை எளிய உணவுப் பொருட்களும் மிக எளிதாக நமக்குக் கிடைக்கக் கூடியவையே, பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உணவில் சேர்த்துக் கொள்ளத்தக்க வகையிலான மிக எளிமையான உணவுப் பொருட்களும் கூட. இவற்றை உண்பதால் உடல் எடை கூடி விடும் என்று அஞ்சத் தேவையின்றி அரிசி சாதம், சப்பாத்தி, ரொட்டி  போன்றவற்றோடு சேர்த்து கடைசியில் உண்ணத் தக்க இரண்டாம் நிலை உணவுப் பொருட்கள் தான். ஆகவே பற்களைத் தூய்மையாக்கி பற்குழியைக் இல்லாமலாக்கி வாய் துர்நாற்றத்தை கட்டுப் படுத்தும் செலரி, க்ரீன் டீ மற்றும் கிவி பழம், சீஸ் போன்றவற்றுக்கு இன்று முதல் ரசிகர்களாகி பளீர் புன்னகையால் நாம் நடமாடும் இடங்களை எல்லாம் ஒளிமயமாக்குவோம்.







நன்றி Hindu

(Visited 10016 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =