சிறுநீரக பாதிப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை: ஸ்வீடன் மருத்துவ நிபுணர்




doctor

கருத்தரங்கில் ஸ்வீடன் கரோலின்ஸ்கா பல்கலைக் கழகப் பேராசிரியர் எலின்டர் கர்ல்கஸ்டாப்புக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் கருத்தரங்கத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர். 

சிறுநீரக பாதிப்பு நோயைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து இந்தியர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு அதிகரிக்கவில்லை என்று ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக சிறுநீரகவியல் துறைத் தலைவர் எலின்டர் கரோல்கஸ்டாப் கூறினார்.
குரோம்பேட்டை பாலாஜி மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறை சார்பில் அண்மையில் நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் அவர் பேசியது: சர்க்கரை நோயும், உணவில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் உப்பு மூலம் அதிகரிக்கும் உயர்ரத்த அழுத்தமும், சிறுநீரக கோளாறுக்கு முக்கிய காரணங்களாகும்.
தற்போது உலக வெப்பமயமாவதலும், உடலில் நீர்ச்சத்துக் குறைபாடும் சிறுநீரக நோய்கள் அதிகரிக்கக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மனித உடலில் உள்ள நீர்ச்சத்து சமநிலையில் மாற்றம் நிகழும்போது உடல் சோர்வு, தலைச்சுற்றல், நாவறட்சி, மயக்கம், சுயநினைவு இழப்பு ஏற்பட்டு, சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும்.
வெயிலில் கடின உழைப்பு மேற்கொள்ளும் விவசாயிகள், கட்டடத் தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள் அதிக அளவில் குடிநீர் பருக வேண்டும். பெரும்பாலோர் பணி இடங்களில் கிடைக்கும் பாதுகாப்பற்ற தண்ணீரை பருகும் நிலை உள்ளது. இதனால் சிறுநீரக பாதிப்புக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
தென்னிந்தியாவில் வேலைக்குச் செல்லும் பெண்கள், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் முதியோர், பள்ளி மாணவிகள் கழிப்பிடக் குறைபாடு காரணமாக போதிய அளவில் குடிநீர் அருந்துவது இல்லை என்று அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பாலாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும், ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழகச் சிறுநீரகவியல் துறையும் இணைந்து மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் பொதுமக்கள் மத்தியில் சிறுநீரக நோய் வரும் முன் காக்கும் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார். ஸ்வீடன் கரோல்னிஷ்கா பல்கலைக் கழக பேராசிரியை அன்னிகா ஓஸ்ட்மன் சிறுநீரக நோய்கள் குறித்தும், சிம்ஸ் மருத்துவமனை இயக்குநர் முத்து வீரமணி சிறுநீரக புற்றுநோய் சிகிச்சை குறித்தும், அப்பல்லோ மருத்துவமனை ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் அனந்தகிருஷ்ணன் சிவராமன் புரோஸ்டேட் புற்றுநோய் நவீன அறுவை சிகிச்சை குறித்தும், சிறுநீரக கல் அகற்றும் சிகிச்சை முறை குறித்தும் விவரித்தனர்.
பாலாஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர். குணசேகரன், துணை முதல்வர் வில்லியம் ஜான்சன், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வித்யா வேணுகோபால், கருத்தரங்குத் தலைவர் கே.எஸ்.ரவிசங்கர், செயலர் பி.சசிகுமார், பி.சுரேஷ்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

 







நன்றி Hindu

(Visited 10017 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + nine =