
நம்மில் பலர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது முடி கொட்டிவிடும் என்கிற பயத்தில் தலைக்கவசம் அணிவதையே தவிர்ப்போம், ஆனால் முடி அடர்த்தியாக வளர்ந்து, உதிர்வைத் தடுக்க இயற்கை வைத்தியத்திலேயே பல வழிகள் இருப்பது நமக்குத் தெரிவதில்லை. உங்கள் முடி உதிர்வு பிரச்னையை சில மாதங்களிலேயே நிருத்தி மேலும் அடர்த்தியான முடியைப் பெற ஒரு அர்ப்புதமான வழியைச் சொல்ல போகிறேன், அதனால் இனி எந்தவொரு பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது உங்களின் உயிர் காப்பான் ஆன தலைக்கவசத்தை கட்டாயம் அணிந்து செல்லுங்கள்.
ஆண், பெண் என யாராக இருந்தாலும் அடர்த்தியான முடி என்பது எப்போதும் ஒரு கூடுதல் அழகு தான். ஆனால் சுற்றுச்சுழல் மாசு, மன அழுத்தம், தினமும் தலையில் எண்ணெய் வைக்காமல் இருப்பது மற்றும் பல கெமிக்கல்களை தலையில் போடுவது போன்றவற்றால் பல பிரச்னைகள் வருகின்றன, உதாரணத்திற்கு முடி உதிர்வு, அடர்த்தி குறைவது, பொடுகு தொல்லை, இள நரை, வழுக்கை விழுவது என. இந்த அனைத்து பிரச்னைக்கும் ஒரே தீர்வாக உங்கள் சமையலறையில் எப்போதும் கிடைக்கும் வெங்காயத்தைப் பயன்படுத்தினால் போதும்.
3 வகையான வெங்காய சாறு தயாரிக்கும் முறை:
1. முடி அடர்த்தியாக வளர:
- முதலில் 2 பெரிய வெங்காயத்தை நல்லா மசிய அரைத்து தண்ணீர் ஊற்றாமல் பிழிந்து சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
- அந்தச் சாற்றில் இரண்டு தேக்கரண்டி தேனைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- ஒரு துணியோ அல்லது பஞ்சையோ அதில் நனைத்து வேர் கால்களில் அதைத் தடவவும், பின்னர் பொறுமையாக மசாஜ் செய்யுங்கள்.
- 20 நிமிடங்களுக்குத் தலையில் இதை ஊற வைத்துவிட்டு பின்னர் தலைக்குக் குளிக்கவும் (ஷாம்பு பயன் படுத்தலாம்).
2. பொடுகு தொல்லை தீர:
- ஒரு முழு வெங்காயத்தை 200.மி.லி தண்ணீரில் வேக வைத்து அது மென்மையாகும் வரை காத்திருக்கவும்.
- மென்மையான பிறகு அது முழுமையாக ஆறும் வரை காத்திருந்து அதில் சிறிதளவு தேனைச் சேர்க்கவும்.
- இந்தக் கலவையை ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு அடுத்த நாள் காலை பிழிந்து சாற்றை எடுக்கவும்.
- இந்தச் சாற்றை தலையில் மசாஜ் செய்து ஒரு 15 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும்.
3. முடி உதிர்வைத் தடுக்க:
நாம் உபயோகிக்கும் ஷாம்புவில் இருக்கும் கெமிக்கல் கலவைகளாலேயே முடி உதிர்வு ஏற்படுகிறது, எனவே இந்த வெங்காய கலவையைத் தயாரித்து ஷாம்பு போட்டு குளித்த பின்னர் இதை வைத்து தலையை அலசவும்.
- 4 அல்லது 5 வெங்கத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
- 1 லிட்டர் தண்ணீரில் வெட்டிய வெங்காய துண்டுகளை கொதிக்கச் செய்யவும்.
- 5 நிமிடம் கொதித்த பின்னர் சிறிது ஆற விட்டு சாற்றை பிழிந்து எடுக்கவும்.
- குளித்து முடித்த பின்னர் இந்தச் சாற்றை வைத்து தலை முடியை அலசவும்.
டிப்ஸ்: உங்கள் தலையில் வெங்காய சாற்றின் வாடை வருவதைத் தவிர்க்க உங்களுக்குப் பிடித்த ரோஜா, லேவண்டர், ஆரெஞ் எண்ணெய்யை அதனுடன் சேர்த்து கொள்வது வாடையைத் தடுக்கும்.
பொதுவாகவே முடி உதிர்வு ஏற்படுவதற்குப் பாக்டீரியா அல்லது புஞ்சை தொற்றே காரணமாக இருக்கும், வெங்காயத்தில் இருக்கும் சல்ஃபர் கலவை ஒரு நல்ல கிருமி நாசினியாக செயல்படக் கூடிய ஒன்று. வெங்காயச் சாற்றில் இயற்கையாகவே இருக்கும் இந்தக் கலவை முடி நரைத்தலைத் தடுத்து சாறு நேரடியாகவே முடியின் வேர் கால்களை சென்றடையச் செய்கிறது.