இதய நோய் உள்ளவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!




heart

 

இதய நோய் என்பது இன்றையச் சூழலில் சாதாரண ஒரு விஷயமாகிவிட்டது. இந்நிலையில் இதய நோய் பற்றி ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பல தகவல்கள் இருக்கின்றன, ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. அது என்னவென்று பார்ப்போம் வாங்க.

பொதுவாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை:

  • இதய நோய் உள்ளவர்கள் எவ்வளவு நேரம் நடக்க வேண்டும் என்று டாக்டர் கூறுகிறாரோ அந்த நேரத்திற்கு மேலும் உங்களால் நடக்க முடிந்தாலும் அதற்கு மேல் நடக்கக் கூடாது. வேகமாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும். சாப்பிட்ட உடனேயே நடப்பதைத் தவிர்த்தல் நல்லது.
  • இதய நோய் உள்ளவர்கள் ஒரே ஒரு நேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடக்கூடாது. சிறிதளவு சிறிதளவாக நான்கு முறையோ அல்லது ஐந்து முறையோ பிரித்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் காலையில் 4 இட்லியும் இரவில் 4 சப்பாத்தியும் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்று வைத்துக் கொள்வோம். அவர் காலை 7.30 மணிக்கு இரண்டு இட்லியும் காலை 9.30 மணிக்கு இரண்டு இட்லியும் சாப்பிடலாம். அதுபோல மாலை 5 மணிக்கு 2 சப்பாத்தியும் இரவு 9 மணிக்கு 2 சப்பாத்தியும் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும். 
  • டாக்டர் கூறியபடி அளவான உப்பையும், கொழுப்பையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • அதிக விலையுள்ள மருந்துகளே மிக்க நல்லது என்ற எண்ணம் தவறானது.குறைந்த விலையிலும் நல்ல மருந்துகள் நல்ல நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.
  • புகைபிடிப்பவர்கள், பருமனானவர்கள், அதிக கொழுப்புச் சத்து, அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ப்பொன நோய்கள் உள்ளவர்கள் இதய வலி , மாரடைப்பு நோய், போன்ற நோய்களால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புண்டு.
  • மருத்துவரின் ஆலோசனைகளை ஒழுங்காகப் பின்பற்றவில்லையென்றால் நோய் சீக்கிரமே முற்றிய நிலை அடையும். 
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்த அழுத்தத்தை 130/80mmHg -க்கு குறைவாக வைத்துக் கொள்வது நல்லது.
  • ரத்த அழுத்த நோய், நீரிழிவு நோய், இதய நோய் உள்ளவர்கள் கீழ்க்கண்ட அளவில் கொழுப்புச் சத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
    1. மொத்த கொலஸ்ட்ரால் 150mg-க்கு கீழே இருக்க வேண்டும்.
    2. ஊறு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் 70mg-க்கு கீழே இருக்க                           வேண்டும்.
    3. நன்மை விளைவிக்கும் கொலஸ்ட்ரால் 40mg-க்கு மேலே இருக்க வேண்டும்.
    4. டீரை கிளிஸைரட்ஸ் 150mg-க்கு கீழே இருக்க வேண்டும்.
  • சர்க்கரை நோய் உள்ளவர்கள் காலையில் சாப்பிடும் முன் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை 100mg-க்கு கீழே வைத்திருக்க வேண்டும். இதைவிட முக்கியமானது HbA1C என்ற டெஸ்ட். இந்த டெஸ்டை கடந்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தினமும் ரத்தத்தில் இருந்த சராசரி குளுகோஸின் அளவைச் சதவீதத்தில் தெரிவிக்கும். இதை 7% கீழே வைத்திருப்பது நல்லது. 6.5% கீழ் வைத்துக் கொண்டால் மிக்க நல்லது.

  • சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மாரடைப்பு நோய் வந்தால் சில சமயங்களில் அவர்களுக்கு மார்புவலி இருக்காது. மூச்சு வாங்குதலோ, இதய படபடப்போ மயக்கமோ வரலாம். இதை வலியில்லாத மாரடைப்பு நோய் என்பர். எனவே மேற்கண்ட பிரச்னைகள் சர்க்கரை நோயாளிகளுக்கு வந்தால் அவர் மருத்துவரிடம் சென்று மாரடைப்பு நோய் உள்ளதா இல்லையா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தாலோ அல்லது மிக அதிகமாகக் குறைந்தாலோ மயக்கம் வரலாம். அதனால் மயக்கம் வரும் போது ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம் என்று நினைத்து ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்தை உட்கொள்ளக் கூடாது. ஏனெனில் மயக்கம் குறைந்த ரத்த அழுத்தத்தால் மேலும் ரத்த அழுத்தம் குறைந்து உயிருக்கு ஆபத்து நேரிடலாம். ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
  • ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவர்கள் பொதுவாக மூன்று வகை மருந்துகளையே அடிக்கடி எழுதிக் கொடுப்பார்கள் அதில் ஏ.சி.இ இன்ஹிபிட்டார் என்பது சிலருக்கு வறட்டு இருமலை ஏற்படுத்தும். இதை நிறுத்துவிட்டால் இருமலும் நின்று விடும்.

  • நடக்கும்போதோ, மாடி ஏறும்போதோ, கடினமான வேலைகளைச் செய்யும்போதோ மார்பு வலி வந்தால் டாக்டர் ஒரு மாத்திரையை நாக்கின் கீழே வைத்துக் கொள்ளச்  சொல்வார். இந்த மருந்து  நைட்ரேட் வகை மருந்துகளில் ஒன்றாகவே இருக்கும். இதை நின்று கொண்டிருக்கும்போது நாக்கின் கீழ் வைத்துக் கொள்ளக்கூடாது. திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் அடைந்து கீழே விழ மயக்கம் அடைந்து கீழே விழ நேரிடும். ஆகவே உட்கார்ந்து  கொண்டோ படுத்துக்கொண்டோ நாக்கின் கீழ் வைத்துக் கொண்டால் மயக்கம் வராது. அப்படி வந்தாலும் கீழே விழ நேரிடாது.
  • டாக்டரை பார்க்க நேரமில்லையென்றாலும், இதய நோய் மருந்துகளை டாக்டரை பார்க்கும் வரையில் தொடர்ந்து வாங்குதல் மற்றும் பிற பிரச்னைகள் எதுவும் இல்லையென்றாலும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
  • புகைபிடிப்பவர்கள் அப்பழக்கத்தை நிறுத்தினால்  அவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்படும் வாய்ப்பு கண்டிப்பாக குறையும்.

    டாக்டர் சு. வைத்தியநாதன்
    MD (General Medicine), DM (Cardiology)

    திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இதய இயல் துறைத்தலைவராகவும், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிவில் சர்ஜனாகவும், ஸ்டேன்லி மருத்துவம் கல்லூரியில் இதய நோய் துணைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்







நன்றி Hindu

(Visited 10025 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + two =