கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர
விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தொழிற்பயிற்சி நிலையத்தின்
முதல்வர் (பொறுப்பு) த.செல்வராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், 2021-ம் ஆண்டுக்கான
பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பம்
பெறப்பட்டு, மாநில அளவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. வேலை
வாய்ப்புடன் கூடிய, தொழிற்பிரிவுகளில் சேர 8-ம் வகுப்பு மற்றும் 10-ம்
வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
ஆண்கள் 14 வயது முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.
பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.
இம்மையத்தில், எலக்ட்ரீசியன், மோட்டார் வாகன மெக்கானிக்,
இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், மெஷின் டூல் மெயின்டனன்ஸ், பிட்டர்,
மெஷினிஸ்ட், மெஷினிஸ்ட் கிரைண்டர், ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்
கன்டிசனிங் மெக்கானிக், டெக்னீசியன் மெக்கட்ரானிக்ஸ், ஐசிடிஎஸ்எம்,
டர்னர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வயர்மேன், வெல்டர், ஷீட் மெட்டல்
வொர்க்கர் ஆகிய இரண்டு ஆண்டு தொழிற்பிரிவுகளுக்கும், சிஓபிஏ உணவு
தயாரித்தல், பிபிஓ வெல்டர், இன்ட்டீரியர் டிசைன் மற்றும் டெகரேஷன் ஆகிய
ஓராண்டு தொழிற்பிரிவுகளுக்கும், ரிமோட்லி பைலட்டடு ஏர்கிராப்ட் என்ற 6
மாத கால பயிற்சிக்கும் விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் சேர www.skilltraining.tn.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக, இந்நிலைய
வளாகத்தில் இலவசமாக கணினி வசதிகளுடன் உதவி மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளன. பயிற்சியாளர்களுக்கு பாடப் புத்தகங்கள், வரைபடக்
கருவிகள், மடிக்கணினி, சைக்கிள், இலவச பேருந்து அட்டை, சீருடை,
காலணிகள், ரூ.750 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். கோவையில்
உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு,
பயிற்சிக்கு பின்னர், அதே நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் பெற்று
வழங்கப்படுகிறது. விடுதி வசதிகளும் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு
0422-2642041, 94426-24516, 94431-71698, 80150-12040 ஆகிய
எண்களில் தொடர்பு கொள்ளலாம்.