கிரகங்களில் முக்கிய ஒளியான சூரியன் என்கிற சிவனின் ஒளியும் அவரைச் சார்ந்த பார்வதியின் பிம்பமான சந்திரன் என்கிற ஒளி கிரகமும் மற்ற கிரகங்களை இயக்கும் கதிர்வீச்சுகள் ஆற்றல் கொண்டது.
பிரபஞ்ச சக்தியை இயக்க வல்ல முக்கிய கோள்கள் இந்த சூரியக் குடும்பத்தில் உள்ளன. அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் பிறக்கும் அனைத்து ஜீவ ராசிக்கும் பலத்தை கொடுக்கவல்லவர். சூரியன் பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சந்திரன் இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் பலத்தை கர்மாவிற்கு ஏற்ப பலம் கொடுக்க வல்லவர்கள். ஜாதக கட்டத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் சூரியன் – சந்திரன் என்ற ஒளி கிரகங்களுக்கு ஒரு ஆதிபத்தியமும் மற்ற கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜெனனம் எடுக்கும் குழந்தைக்கு ஒளிகிரகங்களை வைத்துதான் லக்கினம் மற்றும் ராசி முக்கிய புள்ளிகளாக குறித்து தரப்படுகிறது.
இதையும் படிக்கலாமே.. அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் திரிகோண அதிபதிகள்
ஒருவரது ஜனன ஜாதகத்தில் உள்ள நெருங்கிய பாகையில் உள்ள இரு கிரகங்களின் சேர்க்கை. அது தவிர திரிகோண சேர்க்கை, கிரகங்களின் பார்வை, கோட்சார கிரகத்தோடு ஜெனன கிரகத்தின் சேர்க்கை, என்று பல்வேறு சூட்சம சேர்க்கைகள் உண்டு. இவற்றில் உள்ள பாகை கொண்டு ஜாதகத்தை ஆராய்ந்து கூற வேண்டும்.
வானவியல் அடிப்படையில் சூரியனுக்கும் சனி கிரகத்திற்கும் இடையே உள்ள தொலைவு 142 கோடி கிலோமீட்டருக்கு மேல் இருக்கும், அதனால் சூரியனின் கதிர்வீச்சு சனி கிரகத்திற்கு மிகவும் குறைவாக வந்து சேரும். ஜோதிட வானவியல் சாஸ்த்திரத்தில் சனி என்பவர் முழு இருள் கிரகமாக சொல்லப்படுகிறது. இவர் சூரியனை சுழன்றவாறு சுற்றி வர 29 ஆண்டுகள் 5 மாதங்கள் ஆகும். அதனால் சூரியனின் சுழற்சி மற்றும் கதிர் அளவு கொண்டு சனியை கரியவன்(இருள்), மந்தன் என்று அழைப்பார்கள். முதலில் இவர்களுடைய இயற்கை பண்புகள் காரகத்துவங்களை சற்றுப்பார்ப்போம்.
சூரியன் என்றால் தலை கிரகமாகும். சனி என்கிற சூரியபுத்திரன் கஷ்டங்களும் கடமைகளும் நிறைவேற்றும் ஒரு கடின உழைப்பாளி என்று கூறலாம். சூரியன் ஒளிப் பிழம்பு என்றால் அதற்கு எதிர்மறையாக சனி இருள். இவர்கள் சேரும்பொழுது வெவ்வேறு எதிர் நிலையை தான் ஏற்படுத்தும். அதாவது கருத்துக்கள் செயல்கள் மாறுபட்டு திகழும்.
சூரியன் சிவந்தவன் என்றால் சனி கருப்பு மற்றும் கருநீலம் கொண்டவன். சூரியன் புகழ் மீது ஆசை. ஆனால் சனி எளிமை மீது ஆசை. சூரியன் உயிரை உருவாக்குபவன், சனி ஆயுளுக்கு தடை விதிப்பவன். சூரியன் தனித்த ஆளுமை பெற்றவன், சனி கும்பலான சமூகத்தைக் கொண்டவன்.
முக்கிய உறுப்புகளான மூளைச்சாவு, தலைச் சுற்றல், வழுக்கை, ஒற்றைத் தலைவலி, உயிர்ச்சத்து டி, கால்சியம் மற்றும் தாமிர குறைபாடு, பித்தம் சம்பந்தப்பட்ட பாதிப்பு, இருதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு, வலது கண் பிரச்னை, காய்ச்சல், முதுகு எலும்புகளில் பாதிப்பு, சூட்டால் ஏற்படும் நோய் என்று அனைத்தும் சூரியனால் ஏற்படும் நோய்கள். அதற்கு மாறாக சனி வாதத்திற்கு உரியவன், முடக்கு வாதம், அஜீரணம், கடின உழைப்பால் சோர்வு, அழுக்கு சேரும் பகுதி, இடுப்பு கீழ் பகுதி, கழிவு பகுதி, பற்சொத்தை, கால்வலி, இரும்புச் சத்துக் குறைவால் ஒருவரை சோர்வாகவும் சோம்பலாக்கும் தன்மை (லக்கினத்தில் சனி ) என்றெல்லாம் சனியால் ஏற்படும் நோயின் தாக்கம்.
சூரியனுக்கும் சனிக்கும் இடைவெளி அதிகம். அதுவும் அவர்களின் செயல்கள் எதிர்மறை தன்மையாக செயல்படுத்தும். இவர்கள் வாழ்வில் சேர முடியாத நிலை என்று கூறமுடியாது. ஜாதக ரிதியாக பாவத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இவற்றை ஆராய்ந்து கூற வேண்டும். பிரபஞ்சத்தின் முக்கிய ஒளி கிரகமான சூரியனுடன் சேரும் இருள் கிரகமான சனியின் சேர்க்கை என்ன மாதிரி பலன்களை ஜாதகருக்கு தருவார் என்று பார்ப்போம்.
சூரியன் – சனி இருவரும் சேர்ந்து இருந்தால் தந்தை – மகன் உறவு பாதிக்கப்படும் என்பது ஒரு நியதி. இந்த சூரியன் – சனி சேர்க்கை என்பது மகள்களுக்கு பலன் மாறுபடும். இந்த சேர்க்கை தகப்பன் – மகள் உறவு சீராக இருக்கும். ஜாதகத்தில் அவர்களின் பாகை மற்றும் பாவத்தின் தன்மை கொண்டு ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.
இவற்றில் உள்ள சேர்க்கை என்பது தந்தை மட்டுமல்ல பெரியப்பா, சித்தப்பா, தந்தை சார்ந்த சமமானவர்கள், மூத்த மகன் இவர்களோடு ஜாதகருக்கு கருத்து வேறுபாடுடன் கூடிய பிரிவு பிரச்சனை உண்டு. ஜோதிட ஆராய்ச்சியில் நிறைய சூட்சமங்கள் உள்ளடங்கி உள்ளது.
இதையும் படிக்கலாமே.. ஜாதகத்தில் ஒரு சில திருப்பங்கள் வாயிலாக அதிர்ஷ்டங்களை அள்ளித்தருபவர்கள்
சூரியன் – சனி சேர்க்கை பெற்றவர்கள் தொழிலில் அவ்வளவாக நீடிக்க மாட்டார்கள். ஜாதகரின் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாட்டால் அவ்வப்பொழுது வேலையில் மாற்றம் ஏற்படும். வேலையில் உயர்நிலையில் (promotion ) செல்லமுடியாத நிலை.
இந்த கிரக சேர்க்கை பெற்ற ஜாதகர்கள், முக்கியமாக இரவில் பிறந்தவர்களுக்கு சனியின் பலமும் பெற்றிருப்பார்கள். ஆனால் இவர்கள் சூரியன் பலம் குறைவாக இருக்கும். இவர்கள் செய்யும் செயலின் வெற்றி மற்றவர் பறித்து செல்லும் நிலை, புகழ் பெறாத நிலை, சிலநேரங்களில் பிரயோஜனம் இல்லாத கடின உழைப்பு ஏற்படுத்தும்.
தொழில் என்று எடுத்துக்கொண்டால் சூரிய சனி சேர்க்கை, தொழிலை ஆளுமையுடன் நிறைய வேலையாட்களுடன் செய்யும் வேலையால் லாபம். அதாவது ஜாதகர் தொழிலாளியின் கடுமையான உழைப்பு அதனுடன் சேர்ந்த லாபம் கிட்டும். இங்கும் சூரியன் சனியின் பரல்கள் அளவுகள், குறைந்த பாகை மற்றும் அதிக பாகை கொண்டு லாப நஷ்டங்கள் மாறுபடும்.
தந்தை தொழில் செய்ய ஆசைப்படுவார். அரசியல் ஈடுபாடு, அரசாங்க தொழில் செய்வது, தொழில் அனைத்தும் வேர்வை சிந்தி உழைக்கும் நிலை. உயர்ந்தபதவியை பெரும் ஏக்கம் என்று சூரியன் – சனி சேர்க்கை பாவத்திற்கு ஏற்ப மற்றும் தசா புத்தி கோட்சார அடிப்படையில் பலனைக் கூற முடியும்.
சூரியன் – சனி சேர்க்கை கொண்டு தந்தை சார்ந்த பல தலைமுறைப் பிரிவுகள் இருக்கும்.
இந்தக் கிரக சேர்க்கையைப் பொறுத்து தந்தையின் ஆயுள் மற்றும் உடல் பிரச்னைகள் மற்றும் அவரின் செயல்கள் அனைத்தும் வெளிப்படும்.
கண்ட சனியும் கதிரோனும்
கதித்த ஒன்பா னாதிபனும்
அண்டி ஒருவீட் டினில்இருக்க
ஐயர்க்(கு ) அரிட்டம்! அவரைப்பொன்
மண்டி நோக்க ஐந்தாதி
மனையோன் உச்ச மாய்இருக்க
மிண்டாய்ச் சிலநாள் இருந்தரிட்டம்
மேவும் விடம்போல் விழியாளே!
சூரியன் – சனி பற்றி ஜாதக அலங்காரத்தில் கூறப்படுகிறது. சனியும் சூரியனும் ஒன்பதுக்கு உடையவன் மூவரும் இணைந்து ஒரே வீட்டில் நின்றால் தந்தையின் உயிருக்கு ஆபத்து. இவற்றில் மூவரையும் குரு பார்வையிட, 5-க்குடையவன் உச்சமாக இருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் சிலகாலம் சென்ற பின்னர் ஏற்படும். ஜோதிட சூட்சமத்தில் சூரியன் – சனி பற்றி நிறைய நூல்களில் கூறப்படுகிறது
சூரியன் – சனி சேர்க்கை திரிகோண தொடர்பு பெற்றிருந்தால் பிதுர்தோஷ நிலையை ஜாதகருக்கு ஏற்படுத்தும். இதனால் முக்கிய சுப தன்மையை ஜாதகருக்கு தடை செய்யும்.
தலை மற்றும் மூளை சார்ந்த பகுதி, முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னை, கால், ஆசன பகுதி, இருதயம் அல்லது கல்லீரல் பிரச்னை, உடலில் உள்ள அழுக்கு சேர்க்கையால் பாதிப்பு என்று நோயின் தன்மை அவரவர் தசா புத்திக்கு ஏற்ப செயல்படும். இவற்றை திரேக்காணம் கொண்டு கணிக்கலாம்.
குழந்தை பிறப்பை பாதிக்கும் கிரக சேர்க்கை. உயிர் அணுவை ஏற்படுத்தும் சூரியன், தடை செய்யும் ஆற்றல் கொண்ட சனி சேரும்பொழுது, ஜாதகரின் தசா புத்திக்கு ஏற்ப குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் நிலை .
ஜனன கால சூரியனை, கோட்சார சனி தொடும் பொழுது வேலையில் தடங்கள் மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படும். அவை எந்த பாவத்தில் உள்ளதோ அந்த பாவம் பிரச்னைகளை எதிர்க்கொள்ள தயாராகும் நிலை என்று கூறலாம்.
இந்த கிரக சேர்க்கையில் சூரியனை விட சனியின் பாகை அதிகம் பெற்றால் உழைப்பால் கட்டாயமாக உயரும் தன்மை உண்டு.
மேலே கூறப்பட்டது அனைத்தும் பொதுப்பலன்கள். இவற்றோடு மற்ற கிரக தொடர்பு அவசியம். இவை அனைத்தும் கோட்சரம் மற்றும் தசா புத்திகள் நடக்கும்பொழுது செயல்படும் என்பது விதி.
இது தவிர இரவில் ஒளிரும் சந்திரனுடன், இருள் கிரக சனி என்பது பெரிய பலன்களுடன் புனர்பூ தோஷங்களையும் தரவல்லது. இந்த பாடத்தை பின்பு வரும் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
குருவே சரணம்.
ஜோதிட சிரோன்மணி தேவி
வாட்ஸ்ஆப்: 8939115647
மின்னஞ்சல்: vaideeshwra2013@gmail.com