முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறவிருந்தது. ஆனால் நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அந்தத் தேர்வு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “நீட் முதுநிலை தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும். இந்த ஆண்டு நீட் முதுநிலை தேர்வு எழுத 175,063 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வை ஏப்ரல் 18-ஆம் தேதி எழுத பெறப்பட்ட தேர்வுக்கூட
அனுமதிச்சீட்டுசெல்லாது.புதிய அனுமதிச்சீட்டுகள் வழங்கப்படும் தேதி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) வலைதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். கரோனா தொற்றை கருத்தில் கொண்டு நீட் முதுநிலை தேர்வு நடைபெறும் நகரங்கள், மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் 260 நகரங்களில் சுமார் 800 மையங்களில் அந்தத் தேர்வு நடத்தப்படும். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு முகத் தடுப்புக் கவசம், முகக் கவசம், கை சுத்திகரிப்பான்கள் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது.