விநாயகர் என்றவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஒருவித சந்தோஷம் மற்றும் நேர்மறை ஆற்றல் நம்மை சூழும். நாம் எழுத ஆரம்பிக்கும் அனைத்து நல்ல காரியங்களும் பிள்ளையார் சுழி கொண்டு ஆரம்பிப்போம். விநாயகர் தன் தாய் – தந்தையாகிய உமையாள், உமையவனை துணையாகவும் முதன்மையாகவும் இருக்க சுருக்கமாக “உ” என்ற சுழியை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
எல்லா இந்துக் கோயில்களிலும் முதலில் விநாயகரை வழிபட்ட பின்பே, மற்ற தெய்வங்கள் அருளும் சன்னதிகளுக்குச் சென்று வழிபடுவோம். அப்பொழுதுதான் அந்த வழிபாடு நமக்கு பூர்த்தியாகும். நம்முடைய முக்கிய புராணங்கள், காப்பியங்கள் மற்றும் ஸ்லோக புத்தகங்கள்கூட, முழுமுதற் கடவுளான விநாயகரின் வாழ்த்து பாடலைக்கொண்டே ஆரம்பித்திருக்கும். இது பிள்ளையாருக்கு கிடைத்த மிகப்பெரும் சிறப்பு. நாம் செய்யும் அனைத்து ஹோமத்திலும் பூஜையிலும் வினையை அகற்றும் விநாயகர் முதலில் வந்துவிடுவார். அப்பொழுதுதான் அந்தக் காரியம் தடையின்றி நடக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை. பிள்ளையருக்கு என்று ஒரு தனி சக்தி உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
நவகோள்களும் உள்ளடங்கிய தெய்வம் விநாயகர் என்று சொல்லுவது நன்று. ஏனென்றால் ஒன்பதுகோளும் விநாயகரின் கட்டுப்பாட்டில் உள்ளது. என்னுடைய ஜோதிட சூட்சமத்தில் கணபதியை சுற்றி இருக்கும் ஒளிக்கதிர் மற்றும் அவரின் அழகிய கண்கள் சூரியன் சந்திரனாகவும் புதன் என்கிற புத்தியின் உருவமான சிவசக்தி மைந்தனாகவும் தைரியத்திற்கு உரிய செவ்வாயின் அங்கமாகவும், பெருத்த வயிறு மற்றும் கணத்த தலைகொண்ட குருவாகவும், ஆசைக்கு இடம் கொடுக்காத சுக்கிரனை இடது கீழ் கையிலும் வைத்துக்கொண்டு, ராகு – கேது உள்ளடக்கிய தும்பிக்கை மூர்த்தியாகவும், அந்த தும்பிக்கை கொண்டு ஆசீர்வாதம் மூலமாக நம் கர்மாவை பிடுங்கி எரியும் சனியாகவும் – மொத்த உருவ நவகோள் விநாயகராக உள்ளார். நவகிரகங்கள் அவரை கண்டு பயந்து வழிவிடும் ஆற்றல் அவருக்கு உண்டு.
விநாயகரின் அங்க உறுப்புகளில் – சூரியனை நெற்றியிலும், சந்திரனை நாபி கமலத்தில், தலையில் குருவையும், செவ்வாயை வலது தொடையிலும், கேதுவை இடது தொடையிலும், சனியை வலது கையின் மேலும், புதனை வலது கையின் கீழும், இடது கையின் மேல் கீழ் ராகு மற்றும் சுக்கிரனையும் உள்ளடக்கியவர் என்று கூறப்படுகிறது.
சூரியன், சந்திரன் என்றால் சிவன், பார்வதி என்று பொருள். இவர்கள் ஆசீர்வாதமும் விநாயகரை வணங்கினால் சீக்கிரம் கிட்டும். சூரியன் சந்திரன் தோஷம் அகன்று ஜாதகருக்கு புகழும், அரசாங்க உதவியும், உயர்ந்த வேலையும் கிட்டும். அதிக ஆசை மோகம் இல்லாதவருக்கு குரு மற்றும் சுக்கிரனின் சுப தன்மையை, அவரவர் தசா புத்தியில் கட்டாயம் செல்வ விநாயகர் தன் பக்தர்களுக்கு பொன், பொருள், நல்ல குடும்ப வாழ்க்கை தர வல்லவர்.
புதன் என்கிற கிரகம் ஜாதகருக்கு சரியில்லை என்றால் தேனால் விநாயகருக்கு அபிஷேகம் செய்தும், பச்சை அருகம்புல் கொண்டு பூஜை செய்து, அவர் முன்பு தோப்புக்கரணம் போட்டுகொண்டு வழிபட்டால் குழந்தைகள் படிப்பில் வெற்றியும், பெரியவர்கள் தன் தொழிலில் முயற்சியுடன் வெற்றியும் கிட்டும். மதி என்கிற புத்தியை தட்டி எழுப்பச் செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டில் கிடைக்கும். அதனால் தான் கீழே உள்ள பாடலின் மூலம் முத்தமிழும் தெரிந்த ஒளவை பாட்டியே விநாயகக் கடவுளிடம் நான் உனக்கு இனிய பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகினையும், பருப்பு வகைகளையும் கலந்து படைக்கின்றேன். நீ எனக்கு இயல், இசை, நாடகம் என்னும் மூன்று தமிழையும் தருவாயாக! என்று வேண்டுகிறார்.
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா” .
குழந்தைகளுக்கும் இந்த பாடலை தினமும் பாடும்படி சொன்னால் நன்று.
குரு அருள் இல்லையென்றால் செல்வச் சிறப்பு ஏற்படாது, திருமணத்திற்கு உரிய ஜாதக பலம் குறைவாக இருக்கும். இந்த குரு எனப்படும் தொந்தி விநாயகரை இனிப்பு கொழுக்கட்டை கொண்டு சதுர்த்தியில் வணங்கினால் செல்வம் கிட்டும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். இந்த ஞான குரு ஆசீர்வாதம் நம் எல்லாருக்கும் தேவைப்படும் எதிர்ப்பு சக்தி மருந்து.
கிரகங்களில் பாவியாக சொல்லப்படும் செவ்வாய், சனி, ராகு, கேது ஜாதகரை மேலுக்கு தாக்காமல் இருக்க, நோய்களின் தாக்கம் குறைக்க, செயல்களில் தடைகள் ஏற்படாமல் இருக்க, விநாயகரை தேய்ப்பிறை சதுர்த்தியில் வழிபட்டால் உங்கள் தடைகளை தகர்த்தெரியும் மகா ஆற்றல் உங்களுக்கு இந்த சிவனின் மூத்த மைந்தன் அருளுவார்.
முக்கியமாக கோட்சர சனி தாக்கங்களில் மற்றும் கேது தசா புத்தி காலங்களில் பிள்ளையாரை பற்றிக்கொள்வோம் எந்த கெட்ட கோளும் அருகே வராது. காரியத்தில் உள்ள தங்கு தடையை அகற்றி வெற்றி வாகை சூடுவீர்.
ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பிரணவ பொருளாகவும் ஓங்கார கணநாதன் எல்லாருக்கும் தலைவனாக விளங்குவான். இந்த மந்திரம் அகரம், உகரம், மகரம் எனும் மூன்று எழுத்துகளின் மொத்த வடிவமாகவும். ‘அ’ – படைத்தல், தொழிலுக்குரிய பிரம்மாவையும், ‘உ’ காத்தல், தொழிலுக்குரிய விஷ்ணுவையும், ‘ம’ – அழித்தல், தொழிலுக்குரிய ஈஸ்வரனை குறிக்கும். இந்த மும்மூர்த்தி கடவுளின் சொரூபமாகவும் விநாயகர் அமர்ந்திருக்கிறார்.
ஆவணி மாதம் பிறந்தவர்களில் 90 சதவீதம் ஜாதகர்கள் அறிவு ஆற்றல், புத்திகொண்டு அடக்கி வெல்லும் ஆற்றல் அதிகம் உண்டு. விநாயகர் அருளும் அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஏனென்றால் ஆவணி மாதம் சூரியன் ஆட்சி பெறுவது சிம்ம ராசி ஆகும்.
பிள்ளையார் வழிபாடு
இந்த பஞ்சபூத சக்தி இயகத்தின் முதல் கடவுள் விநாயகர் என்பது உண்மையே. நாம் கேட்கும் அனைத்தும் தங்குதடையில்லாமல் கிட்ட ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி அன்று அவரின் ஜாதகத்தை பூஜையறையில் கோலமிடுவது சிறந்தது.
பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து, பூ மற்றும் அருகம்புல் அர்ச்சனை செய்து, அவருக்குப் பிடித்த வெல்ல கொழுக்கட்டை, பால், பருப்புப் பாயசம், அப்பம், பழம், சுண்டல் மற்றும் அவருக்குப் பிடித்த அனைத்தும் படைத்தது, உங்களுக்கு தெரிந்த ஸ்லோகங்களை கொண்டு பூஜித்து, அவரை சந்தோஷப்படுத்தினால் நவகோள்களின் தோஷம் உங்களை விட்டு ஓடிவிடும்.
விநாயகர் காயத்ரி மந்திரம்
“ஓம் விநாயகாய வித்மஹே
விக்நராஜாய தீமஹி
தந்நோ கணநாயக ப்ரசோதயாத்”
குருவே சரணம்