ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி: வழிபடும் முறை

மூன்று வயது வரை கோகுலத்திலும், ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழு வயதில் கோபியர் கூட்டத்திலும், எட்டிலிருந்து பத்து வயது வரை மதுராவிலும் கிருஷ்ணனின் இளம் பிராயம் கழிந்தது.

கிருஷ்ணர் இரவில் பிறந்தவர் எனவே, மாலை வேளையில் பூஜை செய்வது வழக்கம். வீட்டு வாசலில் கோலம் போட்டு, காவி வரைந்து, பூக்கள் வைத்து கண்ணனின் சின்னச் சின்னப் பாதங்களை வாசலிலிருந்து வீட்டினுள் பூஜை அறை வருவது போல அரிசி மாவால் நயமாகக் கோலமிடவேண்டும்.

வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி, பூஜை அறையில் கண்ணனின் படத்தை அலங்கரித்து நெய் விளக்கு ஏற்ற வேண்டும். தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற பூஜை பொருட்களுடன் கண்ணனுக்கு பிரியமான வெண்ணெய் ஒரு கிண்ணத்தில் வைத்து, தயாரித்து வைத்துள்ள பட்சணங்களான சீடை, முறுக்கு, தட்டை, போன்ற பிரசாதங்களை அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு அவரவர் குடும்ப வழக்கப்படி பூஜை செய்தபின், தீப தூப ஆராதனை செய்து அதன் பின் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

பக்தியுடன் மனம் உருக வேண்டினால் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் வெண்ணெய் போல உருகி பக்தர்கள் வேண்டும் வரத்தை தந்திடுவான். ‘எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்‘ என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தி இருக்கிறார். பொருள் வேண்டாம் அவனருள் மட்டும் போதும் என நினைப்பவர்கள் ஸர்வமும் அவனே என மனதார உணர்ந்து ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று தியானிக்க வேண்டும். அப்போது கிடைக்கும் மன அமைதியும் மகிழ்ச்சியும் வார்த்தைகளில் சொல்ல முடியாது.

கண்ணன் பிறந்த மதுராவிலும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் `கோகுலாஷ்டமி’ என்றும், வட இந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, `ஜென்மாஷ்டமி’ என்றும் அழைக்கப்படுகிறது. சில கட்டுப்பாடுகளால் கோயில்கள் திறக்கப்படாவிட்டாலும், இருக்குமிடத்திலிருந்தே கண்ணனை வணங்குவோம்.

கிருஷ்ணரின் எட்டு வடிவங்கள்

1. சந்தான கோபால கிருஷ்ணன் : அன்னை யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

2. பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

3. காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

4. கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

5. ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

6. முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

7. மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

8. பார்த்தசாரதி : அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

நன்றி Hindu

(Visited 10035 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − three =