பிடித்து வைத்தால் பிள்ளையார்!

தமிழ் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்தார். அந்த நாளே விநாயக சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி என ஆண்டுதோறும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. “பிடித்து வைத்தால் பிள்ளையார் ஆகிவிடுவான்’ என்பர். எந்தப்பொருளாய் இருந்தாலும்; அதில் அவனை கண்டால், அதில் அவனாகி நமக்கு உதவுவான். உள்ள சுத்தியோடு ஒரு புல்லையோ (அருகம்புல்), பூண்டையோ (எருக்கம்பூ) போட்டாலும் ஏற்றுக்கொண்டு; “எனக்கு புல்லும், பூண்டும் ஒன்றுதான்; என் பக்தனை, நான் காப்பேன்; அதனால் அவனுக்கு அளவற்ற ஏற்றம் தருவேன்’ என வலுவில் வந்து வரம் தந்தருளுவான் அந்த விநாயகன்.

 வி = இதற்கு மேல் இல்லை; நாயகர் = தலைவர். “விநாயகர்’ அதாவது இவர் தான் அனைவருக்கும் தலைவர் என்று பொருள். அதனால் தான் இவரை “முழுமுதற்கடவுள்’, “ஐங்கரன்’ என்றும், எல்லா கணங்களுக்கும் அதிபதி என்பதால் “கணபதி’ என்றும் அழைக்கப்படுகிறார். “தும்பிக்கையானிடம் நம்பிக்கை வை’ என்றனர். மஞ்சள், களிமண், வெல்லம், மணல் போன்றவற்றால் எப்படிச்செய்து கூப்பிட்டாலும் அபயக்கரம் நீட்டுவார் வேழமுகத்தோனான விநாயகர்!

வெளியே சென்ற சிவனார் வருவதற்குள் பார்வதி தேவி நீராடிவிடலாமென நினைத்து அதற்குமுன் தான் நீராடும்போது பூசிக்கொள்வதற்காக எடுத்து வரப்பட்ட மஞ்சள், சந்தனம் போன்ற அனைத்து பொருள்களும் அடங்கிய வாசனாதி திரவியத்தை பிடித்து வைத்து அதற்கு உயிரூட்டி, அவனை தன் பிள்ளையாக பாவித்து; “யார் வந்தாலும் உள்ளே அனுமதிக்காதே’ என உத்தரவிட்டு அவனை வெளியே காவலுக்கு வைத்துவிட்டு நீராட சென்றாள் அன்னை. வெளியே சென்ற சிவனார் தன் கைலாயம்தானே என்று வேகமாக உள்ளே நுழைய; வந்திருப்பது வேதநாயகன் என்று அறிந்தும், அன்னையின் உத்திரவினை சிரமேற்கொண்டு அந்த சிறு பாலகன் இமையோனை தடுத்து நிறுத்தினார். கோபமுற்ற முக்கண்ணன், சற்றும் யோசிக்காமல் அப்பாலகனின் தலையை கொய்துவிட்டு, சாய்த்துவிட்டு சென்றுவிட்டார்.

நீராடி திரும்பிய பார்வதி தேவி வெளியே வந்து நடந்ததைக் கண்டு கடும்கோபம் கொண்டு காளி உருவெடுத்து ருத்ரதாண்டவமாட ஆரம்பித்தாள்; பிரளயம் ஏற்பட்டது. பயந்த தேவர்கள் முக்கண்ணனிடம் முறையிட்டனர்.

உண்மையை உணர்ந்த கைலாயபதி ஒரே தீர்வுதான் உள்ளது, வெளியே சென்று பாருங்கள்; கண்ணில் படும் எந்த உயிரினமாக இருந்தாலும் அதன் தலையை கொய்து வந்து இந்த பாலகன் உடலுடன் பொருத்துங்கள் என ஆணையிட்டார். தேடிசென்றோர் கண்ணில் தென்பட்டதோ வடக்கு திசையில் தலை வைத்து படுத்திருந்த ஒரு யானை. அதன் தலை வெட்டப்பட்டு ஈசனின் கையில் கொடுக்கப்பட; அது கைலாசவாசனால் அந்த பிள்ளையின் உடலில் ஒட்டப்பட்டது. அதன் பின்னரே சிவனார் அந்த பிள்ளைக்கு “கணேசன்’ என நாமகரணம் சூட்டினார்.

அவர்களின் முதல் பிள்ளையாக கஜானனன் ஆன நாள் சதுர்த்தி ஆகும். லிங்கபுராணத்தின்படி அரக்கர்களின் கொடுமையிலிருந்து தங்களை காத்திட தேவர்கள் சிவனை நோக்கி தவமிருந்ததாகவும்; அவர்களின் வேண்டுதலுக்கிணங்கி எல்லா தடைகளையும் தகற்தெறியும் வல்லமை, ஆற்றலுடன் சிவ பார்வதியின் அம்சமாக உருவாக்கப்பட்ட வீரத்திருமகனே விக்ன கர்த்தர் எனப்படும் விநாயகர் ஆவர். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் ஏற்படுத்திய ஷண்மத வழிபாட்டில் முதலாவதாகக் கூறப்பட்டுள்ளது “காணாபத்யம்” எனும் கணபதி வழிபாடாகும்.

இந்தியாவிலேயே மஹாராஷ்டிர மாநிலத்தில் தான் கணபதி பாபாவின் கொண்டாட்டம் மிக அதிகம். உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பெங்கால், கோவா போன்ற வடமாநிலங்களில் பொதுவிழாவாகவும், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா தமிழகம் போன்ற தென்மாநிலங்களில் களிமண்ணால் ஆன பிள்ளையாரை தன் வீட்டில் வரணம் செய்து (வரவழைத்து) பலகையில் வைத்து, அருகம்புல் மற்றும் நறுமண மலர்களால் பூஜித்து அதற்கு வெல்ல கொழுக்கட்டை, உப்புக் கொழுக்கட்டை, மணிக் கொழுக்கட்டை, அப்பம், வடை, சுண்டல், பொறிகடலை மற்றும் அனைத்து விதமான பழங்களையும் படைத்து; சிந்தையை கிளறும் சீறாளனே நின்னை வணங்குகிறோம்; சித்தி புத்தியுடன் வந்து எங்களை ஆசிர்வதியுங்கள் என வழிபடுகிறோம். பின் மறுநாள் அவரை நீர்நிலைகளில் சேர்ப்பிக்கிறோம்.

பிள்ளையாருக்கென்று ஒர் தனிக்கோயில் காரைக்குடிக்கு அருகில் பிள்ளையார்பட்டி என்ற ஊரில் உள்ளது. அங்கு இந்த நன்னாளில் மிகச் சிறப்பாக விழாவெடுத்துக் கொண்டாடுகிறார்கள். குடந்தையிலிருந்து திருவையாறு செல்லும் மார்க்கத்தில் கணபதி அக்ரஹாரம் என்ற ஊரிலும் இவருக்கு கோயில் உள்ளது. இந்த கணபதி, அகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இங்கு, இந்த சதுர்த்தி நாளில் ஹோம, யாக, யக்யங்கள் செய்யப்படுகிறது. இதில் ஒரு விசேஷம் என்னவெனில் அந்த ஊரில் விநாயக சதுர்த்தியன்று அவரவர்கள் வீட்டில் செய்யப்படும் கொழுக்கட்டை அனைத்தும் இந்த கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு படைத்தபின் பேதமின்றி பகிர்ந்தளிக்கப்பட்டு அனைவரும் உண்டு மகிழ்வர் என்பது சிறப்பான ஒன்றாகும்.

சுவாமிமலை அருகிலுள்ள திருவலஞ்சுழியில் தனிக்கோயிலாக, இந்திரவிமானத்தில் தேவந்திரனால் பூஜிக்கப்பட்ட கடல் நுரையால் ஆன வெள்ளைப் பிள்ளையார் தனியே வீற்றிருக்கிறார். அதுபோல் திலதர்பணபுரி என்று பூந்தோட்டம் அருகே உள்ள கிராமத்தில் நரமுக (மனித முகம்) விநாயகர் என்ற பெயரிலும், சென்னை திரிசூலநாதர் கோயிலின் உட்பிரகார தென்புறத்தில் நாக யக்யோபவீத கணபதி என்றும் அருள்பாலிக்கிறார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 10 -ஆம் தேதி, “விநாயகர் சதுர்த்தி’ திருநாள் அமைகிறது.

– எஸ்.எஸ். சீதாராமன்

நன்றி Hindu

(Visited 10013 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 15 =