எந்தவித ரசாயனமும் கலக்காத அன்று முதல் இன்றுவரை ஓர் இயற்கை உணவாக இருப்பது இளநீர். பானங்களில் இயற்கை அளித்த ஒரு பெரும்கொடை இளநீர் என்று கூறலாம்.
உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, தேவையான நீர்ச்சத்தை அளிக்கும் வல்லமை இளநீருக்கு உண்டு.
வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் சூட்டைத் தணிப்பதில் முதல் பொருளாக இருக்கிறது. இளநீரில் வைட்டமின் ஏ,சி,கே உள்ளிட்ட சத்துகளும் பொட்டாசியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்களும் உள்ளன.
இளநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
► உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். கெட்ட கொழுப்புகளை கரைக்கும்.
► ரத்தம் சுத்தமடையும்.
► வயிற்றுக்கோளாறுகளின் போது செரிமானப் பிரச்னைகளின்போது இளநீர் அருந்தினால் சரியாகும்.
► அல்சர் நோயாளிகள் தினமும் இளநீர் சாப்பிடலாம்.
► மலச்சிக்கல், வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு உள்ளிட்டவற்றுக்கு இளநீர் அருந்துங்கள்.
► சிறுநீரகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து இளநீர்தான்.
► கோடை காலத்தில் உடல் சூட்டினைத் தணிக்க, உடல் சூட்டினால் ஏற்படும் நோய்களுக்கு அதிகமாக இளநீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.
► சருமத்தின் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். சருமம் பொலிவு பெறும்.
► உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தொடர்ந்து இளநீர் அருந்தலாம்.
► எலும்புகள் வலுவடையும்.
இளநீர் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால் ஆஸ்துமா, சளி, சைனஸ், தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் மேலும் சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இளநீர் அருந்தலாம்.
இளநீர் எப்போது அருந்த வேண்டும்?
இளநீரில் சுண்ணாம்புச் சத்து இருப்பதால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால், உண்மையில் இளநீரில் உள்ள சத்துகள் முழுமையாக உடலுக்கு சென்றுசேர வேண்டும் என்றால், காலையில் வெறும் வயிற்றில்தான் இளநீர் குடிக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்போது வேண்டுமானாலும் இளநீர் குடிக்கலாம். ஆனால், காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நலம். அது இல்லாது, சாப்பாட்டுக்கு முன் இளநீர் அருந்துவது நல்லது.