இன்று பகுதிநேர சந்திர கிரகணம் – 2021




நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் – தக்ஷிணாயனம் – சரத் ரிது – கார்த்திகை மாதம் 03ம் நாள் – வெள்ளிக்கிழமை – பௌர்ணமி திதி – க்ருத்திகை நக்ஷத்ரத்தில் – சந்திர கிரகணம் நிகழ்கிறது. 

பௌர்ணமி தினமான நவம்பர் 19ஆம் தேதியன்று இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. பகுதி கிரகணமாக 3 மணி நேரம், 28 நிமிடங்கள் மற்றும் 24 வினாடிகள் நீடிக்கும். முழு கிரகணமாக 6 மணி நேரம் 1 நிமிடம் நீடிக்கும். சுமார் 580 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்று அறிவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் வரும் சந்திர கிரகணமும் – பகல் நேரத்தில் வரும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும்.

வெள்ளிக்கிழமையன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் தமிழ் பஞ்சாங்கப்படி பகல் நேரத்தில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5.32 மணி வரை நீடிக்கிறது. 6 மணி நேரம் மிகநீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது.

கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
வானவியலில் சூரியன் அல்லது சந்திரன் மீது ஏற்படும் நிழலை கிரகணம் என கூறுகிறது. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் பௌர்ணமி நாளிலும் உண்டாகிறது. எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது. எல்லா பௌர்ணமி நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. சூரியன், பூமி, சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். நவம்பர் 19ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால், சந்திரன் பிரகாசம் குறைந்து கருஞ்சிவப்பாக காட்சியளிக்கும்.

ஜோதிட ரீதியாக கிரகணம் ஏன் ஏற்படுகிறது?
சந்திர கிரகணம் சூர்யனுக்கு நேர் எதிராக 180 டிகிரியில் சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ சேரும் போது ஏற்படும். இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியாததால் யாருக்கும் கிரகண தோஷம் இல்லை. எனவே கிரகண பரிகாரம் தேவையில்லை. இருப்பினும் ரிஷபம் – வ்ருச்சிக ராசிக்காரர்கள் தங்களால் முடிந்த தானங்கள் செய்யலாம்.

கிரகண உச்சம் எப்போது?
இந்த வருடம் நிகழும் சந்திர கிரகணம் மிக நீண்டதாக உள்ளது. சந்திர கிரகணம் வெள்ளிக்கிழமை 19ம் தேதி இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் மாலை 5.32 மணி வரை மிகவும் நீண்டு நிகழ்கிறது. அதாவது 6 மணி நேரம் 2 நிமிடங்கள் என நீடிக்கின்றது. இந்த கிரகணத்தின் உச்சம் மதியம் 2மணி 32 நிமிடத்தில் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் எந்த நாட்டில் தெரியும்? 
இந்த சந்திர கிரகணத்தை அலாஸ்கா மற்றும் ஹவாய் போன்ற பகுதிகளில் நவம்பர் 18ம் தேதி வியாழக்கிழமை (இந்திய தேதி 19ம் நவம்பர் – வெள்ளிக்கிழமை) பார்க்க முடியும். மேற்கு ஆப்ரிக்கா, மேற்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா, ஆஸ்திரேலியா, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் பசிபிக் பகுதிகளை உள்ளடக்கிய சில பகுதிகளிலும் கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் வட மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் பகுதி சந்திர கிரகணம் நன்றாகத் தெரியும் எனவும் வட கிழக்கு ஐரோப்பா, ரஷ்யா போன்ற பகுதிகளில் மிகவும் தெளிவாக இந்த பகுதி சந்திர கிரகணம் பார்க்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது? 
இந்தியாவைப் பொறுத்தவரை, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாமின் வடகிழக்குப் பகுதிகளில் கிரகணம் மிகக் குறுகிய நேரத்திற்குத் தெரியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் நிகழப்போகும் மிகநீண்ட சந்திர கிரகணம் கடந்த 1440ம் ஆண்டில் நிகழ்ந்தது. இது போன்ற நீண்ட கிரகணம் அடுத்து 2669ம் ஆண்டில் தான் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்குச் செல்லலாமா?
19ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சந்திர கிரகணம் நிகழ்ந்தாலும் இந்தியாவில் பாதிப்பு இல்லை என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது. அனைத்து கோவில்களிலும் மகா தீபத்திருவிழா நடைபெற உள்ளது. வீடுகளிலும் விளக்கேற்றி வழிபடுவார்கள். கிரகண தோஷம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

அடுத்த கிரகணம் சூர்ய கிரகணம்?
டிசம்பர் 04ஆம் தேதி கார்த்திகை 18ஆம் தேதியன்று இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. சனிக்கிழமையன்று காலையில் 10.59 மணி முதல் பிற்பகல் 03.07 மணிவரை கேட்டை நட்சத்திரத்தில் நிகழும் இந்த கேது கிரகஸ்த முழு சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. இதற்கு அடுத்த சந்திர கிரகணம் 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி அன்று தெரியும். இது முழு சந்திர கிரகணமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 







நன்றி Hindu

(Visited 10071 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =