பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பெருவிழாவில், 21 நாள்களிலும் மூலவர் பெரியபெருமாளுக்கு முத்தங்கி சேவை நடைபெறுகிறது.
108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும், திருஅத்யயன உற்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா 21 நாள்கள் நடைபெறுவது தனிச்சிறப்புக்குரியது.
பகல்பத்து, இராப்பத்து, இயற்பா என 21 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், மூலவரான பெரியபெருமாளையும், உற்ஸவரான நம்பெருமாளையும் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமல்லாது, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் ஸ்ரீரங்கத்துக்கு வருகைத் தருவர்.
திருமொழித் திருநாள் என்றழைக்கப்படும் பகல்பத்து உற்ஸவத்தின் போது, நாள்தோறும் நம்பெருமாள் கருவறையிலிருந்து புறப்பட்டு, அர்ச்சுன மண்டபத்திலும், திருவாய்மொழித் திருநாள் என்றழைக்கப்படும் இராப்பத்து திருநாள்களில் பரமபதவாசல் வழியாகச் சென்று திருமாமணி மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திலும் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் இராப்பத்து எட்டாம் திருநாளில் பரமபதவாசல் திறப்பு கிடையாது.
நிகழாண்டில் கார்த்திகை மாதத்திலேயே பரமபதவாசல் திறப்பு
பொதுவாக அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியன்றுதான் பரமபதவாசல் திறப்பு நடைபெறும். அதற்கேற்றவாறு கார்த்திகை மாத இறுதியில் திருவிழா தொடங்கி, மார்கழி மாத ஏகாதசி திதியன்று பரமபதவாசல் திறக்கப்படும்.
ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திகை மாதத்தில் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கி, இந்த மாதத்திலேயே பரமபதவாசல் திறப்பும் நடைபெறுகிறது. இக்கோயிலில் தை மாதத்தில் நடைபெறும் தேரோட்டத்தையொட்டி, புனர்பூச நட்சத்திரத்தை கணக்கில் கொண்டு கார்த்திகை மாதத்தில் பரமபதவாசல் திறப்பு நடைபெறுவதாக திருக்கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
21 நாள்களும் முத்தங்கி சேவை
நிகழாண்டில் டிசம்பர் 4-ஆம் தேதி பகல்பத்து உற்ஸவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா தொடங்கிய நிலையில், பகல்பத்து பத்தாம் திருநாளான திங்கள்கிழமை (டிச.13) நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சியளித்தார். டிசம்பர் 14-ஆம் தேதி பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது.

பொதுவாக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாவில் உற்ஸவரான நம்பெருமாளுக்கு அணிவிக்கப்படும் ஆபரணங்கள் விலைமதிப்பற்றவை. மேலும் நம்பெருமாளை அலங்காரப் பிரியன் என்றும் அழைப்பர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடாகும் போது, அவர் அணிந்திருக்கும் ஆபரணங்களைக் காண கண்கோடி வேண்டும்.
பொதுவாக வைகுந்த ஏகாதசி திருவிழாவில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருவறையிலுள்ள பெரியபெருமாளையும், நம்பெருமாளையும் தரிசித்து செல்வர். இதற்காக பல மணி நேரம் காத்திருக்கும் நிலையும் பக்தர்களுக்கு ஏற்படும். ஆனாலும், பக்தர்கள் அதை பொருள்படுத்தாது தரிசித்து செல்வர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பரமபதவாசல் திறப்பன்று முதலே கருவறை பெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு, 10 நாள்கள் மட்டுமே அந்த சேவை நடைபெற்றுவந்தது.
இந்நிலையில் பக்த பெருமக்களின் வேண்டுக்கோளுக்கிணங்க, கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா பகல்பத்து தொடங்கும் நாளிலேயே பெரியபெருமாளுக்கு முத்தங்கி அணிவிக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்யும் முறை அமலாக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஸ்ரீரங்கம் கோயில் கருவறையில் சயனக் கோலத்தில் காட்சியளிக்கும் பெரிய பெருமாளை முத்தங்கி சேவையில் தரிசிப்போம். பலன்கள் பல பெறுவோம்.