கடைசி பெஞ்ச் மாணவர்களே இருக்க மாட்டார்களோ?




கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது நாள்தோறும் பள்ளிகள் சீராக இயங்கி வருகின்றன.

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பள்ளிகளில் இறுதியாண்டுத் தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், அதற்கான பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை ஒரு இருக்கையில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே  அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் தற்போது பள்ளிகள் முழுமையாக செயல்படத் தொடங்கியதால், அனைத்து இருக்கைகளும் முழுமையாக நிரம்பிவிடுகின்றன.

இதற்கிடையே, பள்ளி மாணவர்கள் பலரும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செல்லிடப்பேசி அல்லது கணினி வழியாகவே பாடங்களைக் கற்றுக் கொள்வது முதல் வீட்டுப் பாடங்களை எழுதுவது வரை அனைத்துக்கும் செல்லிடப்பேசிகளின் ஆதரவை நாடியே இருந்தனர்.

இதனால், அவர்களுக்கு பாடங்கள் நன்கு புரிந்து, ஆசிரியர்கள் கற்றுக் கொடுப்பது புரிந்ததோ இல்லையோ, செல்லிடப்பேசியில் இருக்கும் அனைத்து விளையாட்டு மற்றும் செயலிகள் முழுக்க அத்துப்படியானது.

ஸூம் மீட்டிங்கில் பாடம் எடுக்கும் போது, வேறொரு செயலியில் மாணவர்கள் தங்களுக்குள் சேட்டிங்கில் ஈடுபடுவது, செல்லிடப்பேசி விளையாட்டுகளை விளையாடுவது என வகுப்பறை நேரத்தில் செய்யத் தேவையில்லாத அனைத்தையும் செய்து முடித்தனர்.

இதன் பலனாக, மாணவர்கள் பலருக்கும் கண்பார்வை மங்கி, தலைவலி உள்ளிட்டப் பிரச்னைகளும் நேரிட்டன. பேரிடர் பொதுமுடக்கத்துக்குப் பின் பள்ளிக்கு வந்த பல மாணவர்கள் கண்களில் கண்ணாடி அணிந்து கொண்டுதான் வந்திருந்தனர்.

சிலர் அணியாமல் வந்ததால் அவர்களுக்கு கண் பிரச்னை இல்லை என்று கூறிவிட முடியாது. அவர்களுக்கு கண் பிரச்னை இருப்பது இன்னமும் அறிந்துகொள்ள முடியாமல் உள்ளது என்று வேண்டுமானால் சொல்லுமளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

கண் பார்வை மங்கலாக போனதால், வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் அமரும் மாணவர்களுக்கு, ஆசிரியர் கரும்பலகையில் எழுதிப் போடும் பாடங்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடைசி பெஞ்ச் மாணவர்கள் அனைவரும் ஒன்று முன்னால் இருக்கும் நண்பர்களுடன் இடத்தைப் பகிர்ந்து கொண்டோ அல்லது தரையில் அமர்ந்தோ படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதனால், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் என களைகட்டும் கடைசி பெஞ்ச் இப்போதெல்லாம் உட்கார ஆள் இல்லாமல் களையிழந்து காணப்படுகிறது.
 







நன்றி Dinamani

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =