வடுவூரில் ஸ்ரீராமநவமித் திருவிழா துவங்கியது




 

நாராயணன் தர்மம் காக்க தானே மனிதனாக அவதரித்து தசரத மைந்தன் ஸ்ரீராமன் என்ற பெயரோடு அவரே வடிவமைத்த அர்ச்சாரூபமாக  இருந்து வடுவூரில்  எழுந்தருளி உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு ஸ்ரீராமநவமி பெருந்திருவிழா 2022ம் ஆண்டு  பிலவ வருடம் பங்குனி மாதம் 26ஆம் நாள், ஏப்ரல் 8-ஆம் தேதி துவங்கி சித்திரை ஐந்தாம் நாள் ஏப்ரல் 18 வரை நடக்க இருக்கிறது

இன்று ஏப்ரல் ஒன்பதாம் தேதி துவஜாரோகணம் எனப்படும் திரு கொடியேற்றத்துடன்  துவங்கியது. தொடர்ந்து தினம் காலையில் பல்லக்கில் புறப்பாடு நடைபெற உள்ளது. மாலை வேளைகளில் சூரிய பிரபை, சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக, 12ம் தேதி  கருடசேவை – வைரமுடி, ஏப்ரல் 13ஆம் தேதி நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனம்,

14ம் தேதி இரவு மோகன அலங்காரமும் 15ஆம் தேதி ஆறாம் திருநாளின் காலையில் யானை வாகனத்தில் ஸ்ரீ ராமர் ராஜா அலங்காரமும் ஹம்ச வாகனத்தில் தாயார் புறப்பாடும் நடைபெறும்.

15ஆம் தேதி  திருக்கல்யாண கோலத்தில் புறப்பாடும் மாலை சூர்ண  அபிஷேகமும் 16ஆம் தேதி பல்லக்கு நவநீத சேவையும் ஏப்ரல் 17ஆம் தேதி திருத்தேரில் ஸ்ரீகோதண்டராமர் எழுந்தருளி சேவையும்  18ம் தேதி சப்தாவர்ணமும் தொடர்ந்து 19 முதல்  விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.

தொன்மையும் வரலாற்றுச்சிறப்பும் உடைய வடுவூர் ஸ்ரீ கோதண்டராமர் கோவில் சிறப்புகள் கீழ் கண்டவையாகும்

காவிய நாயகன்
அவதாரபுருஷனாகிய  ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் பர்ணசாலையில் சீதை மற்றும் இலக்குவனுடன் மரவுரி தரித்து காய்கனி உண்டு வசித்து  வந்தபோது, நாடு செல்ல வேண்டிய நிலை வந்தபோது  அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டனர். 

அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு தான் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதைக் குறித்து விளக்கி  ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அப்போதும்  முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமர் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

முனிவர்கள் மறுநாள்  ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமர் செய்த விக்ரகத்தை வணங்கி  உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டுச் செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர்.  அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது எப்போதும் உங்களை பிரியாத  ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமர் அங்கே எழுந்தருளிவிட்டார்.

ராமனின் பயணம்
தண்டகாரண்யத்தில் இருந்த அந்த விக்ரகத்தை திருக்கண்ணபுரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், பாடியுள்ளார். தலத்தைப் பாடாததால் திவ்யதேச வரிசையில் சேர்க்காமல் அபிமானத்தலமாகவே ஆகிவிட்டது

ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் பரிவார சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர் பாடினார். ஏதோ ஒரு காரணத்திற்காக  இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது. இதை மக்கள் மறந்தும் போனார்கள்.

நெடுநாள் கழித்து  தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், இராமர்  சென்று நாடு சுபிட்சம் பெற  தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதையும் , அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல வேண்டாமென வேண்டினர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.

வடுவூரழகன்
அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் ஆதி மூலவரான ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் திருக்கோவிலில் சான்னித்தியம் கருதி வைத்தனர். மன்னர் ராமர் விக்ரகம் வைத்திருக்கிறார் என்ற தகவல் பரவி அந்த எழிலார்ந்த விக்ரகங்களை தரிசனம் செய்த அவ்வூர் மக்கள் சிலையின் கலை, தரிசித்தவர்களை கவர்ந்து இழுக்கும் மந்தகாச புன்னகை, மக்கள் கொண்டுள்ள பக்தி ஆகியவற்றால் கவரப்பட்டு அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டனர்! 
மறுத்து மன்னன் விக்ரகங்களை எடுத்துச் சென்றால், தாங்கள் அனைவரும் மொட்டை கோபுரத்தில் ஏறி குதித்து உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். பக்தியில் மக்களின் ஈடுபாடு கண்ட மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். ராமர் சிலைக்கு அருகில் வைக்க லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டது. அது பெண் வடிவமாக உருவானதால் அந்த சிலையை அருகில் ”அழகிய சுந்தரி அம்மன்” என்று பெயர் சூட்டி ஊரிலேயே பிரதிஷ்டை செய்தார்கள். வேறு லட்சுமணர் சிலை வடிக்கப்பட்டு, தற்போது ஸ்ரீ கோதண்ட ராமர், சீதை, லட்சுமணர், அனுமனோடு காட்சியளிக்கிறார். அது முதல் தெற்கு நோக்கியிருந்த ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத கோபாலன் சன்னதியில் கோயிலின் பிரதான மூர்த்தியாக கிழக்கு நோக்கி ராமர் எழுந்தருளினார். பின்னர் புதுப்பிக்கும்போது கிழக்கு பார்த்த 5 நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டது.

தலமரமும் தீர்த்தமும்
ஆலய தல விருட்சம் வகுளம் எனப்படும் மகிழமரம் ஆகும். கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது.
 







நன்றி Hindu

(Visited 10045 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =