இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தொழில் என்பது மிக மிக அவசியமான ஒன்று. சங்க கால பாடலுக்கு ஏற்ப “வினையே ஆடவருக்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ (குறுந்தொகை- 135).- ஒரு சோம்பல் இல்லா ஆண் மகனுக்கு தொழில்தான் உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர் என்று கூறப்படுகிறது.
இந்த பாடலில் ஒருவனுக்கு தொழில் அவசியத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட உண்மை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் அமைவது என்பது கொஞ்சம் கடினமே. ஒரு சிலருக்கு மட்டும் சந்தோஷமான நிறைவான வேலை அமையும் அது அவர்களின் பாக்கியமாகும். சிலசமயம் வேலை பிடிக்காமல் அவர்கள் செய்யும் வேலையை விட்டு, சொந்த தொழில் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அதில் சொற்பமானவர்கள் மட்டுமே மேலே வர முடியும். முக்கியமாக ஒரு மனிதனுக்கு முதலாளி என்ற சொல்லை கேட்டாலே ஒருவித பரமானந்தமே.
ஒருவருக்கு கொடுப்பனை இருந்தால் மட்டுமே தொழில் செய்து முதலாளியாக இருப்பார்கள். அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் கூட்டமைப்பு மற்றும் பலத்தை கொண்டு சரியான தொழில் துறையை தேர்ந்தெடுத்து வெற்றி பெறவேண்டும். ஒன்று மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கை மற்றும் 1,10ம் பாவத்தோடு தொடர்புகொண்டு அவர்களின் தொழில்களின் பிரிவுகள் அமையும்.
எடுத்துக்காட்டாக: தொடர்பான அனைத்து துறையும் அவற்றில் முக்கியமாக இனிப்பு கடை அல்லது உணவகம் அல்லது சமையல் ஒப்பந்ததாராக தொழில் செய்ய- இரண்டாம் பாவத்துடன் சந்திரன், சுக்கிரன் சுப தன்மையுடனும், அவற்றோடு நெருப்பு சம்பந்தப்படுவதால் செவ்வாய் பகவானின் உதவியும் தேவை. அதேபோல் தையல் துறை தேர்ந்தெடுப்பவருக்கு துணி, தையல் மிஷின் என்றவுடன் சுக்கிரன், செவ்வாய் பலம் பெறவேண்டும். அடுத்த முக்கிய கிரகமான குரு என்பவர் பணம் புழக்கமுள்ள துறை தொடர்பு கொண்டவர். குரு ஆதிக்கம் பெற்றவர்கள் கௌரவமான தொழில், நீதி நேர்மைக்கு உரிய முதலாளியாக இருப்பார். எ.க. பணம் சம்பந்தப்பட்ட துறை, சட்ட நீதித் துறை, ஜோதிட ஆன்மீக ஆராய்ச்சி, தங்க கட்டிகள் விற்பனை (ஆபரண நகையாக விற்க சுக்கிரன் உதவி தேவை) என்று அடுக்கிக்கொண்டு போகலாம். எந்த துறையாக இருந்தாலும் சனி+புதன் கிரகங்களின் பலம் மிக மிக அவசியம் தேவை. ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் பலம் கொண்டு அவரவர் தொழில் துறையைப் பிரித்துச் சொல்ல முடியும்.
முதலாளியாக மாறுவது எப்படி?
முதலாளியாக மாறுவது அவரவருக்கு ஏற்படும் ஒருவித மோகம், பாட்டன் மற்றும் மாமனார் வழி தொடர்பான தொழில் என்று சொந்த தொழிலில் கட்டாயம் செய்ய வைத்துவிடும். பொதுவாக ஒரு சிலருக்கு படிக்கும்பொழுதே தன்னுடைய செலவுக்கு யாரிடமும் நிற்காமல் இருக்க பகுதிநேர சிறு தொழிலை தனித்தோ அல்லது நண்பர்கள் உடனோ ஆரம்பிப்பார்கள். அதில் ஒரு சிறு பகுதி வெற்றி கண்ட பிறகு அந்த வேலையின் மீது ஒரு மோகம் மற்றும் முதலாளி என்ற சந்தோஷத்தில் அந்த தொழிலில் ஈர்ப்பு அதிகப்படுத்திவிடும். அவர்கள் படித்து முடித்தவுடன் அதே தொழிலை முழுநேரமாக தொடர்ந்து செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
முன்னோர்களின் ஆசீர்வாதத்தால் ஒரு சாராருக்கு முதலாளி யோகம் என்பது தந்தை / பாட்டன் வழியில் அந்த பரம்பரை தொழில் சுலபமாகக் கிடைத்துவிடும். அதேபோல் ஒருசிலருக்கு திருமணத்திற்குப் பிறகு மனைவியாலும் முதலாளி பாக்கியம் கிட்டும். இதுதவிர ஒருசிலருக்கு 8 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்வது, அங்குள்ள அடிமைத்தனம், அதிருப்தி இல்லா வேலை காரணத்தால் சொந்த தொழிலில் ஆர்வம் ஏற்படும். அந்த முதலாளிகள் கடைசியில் ஒருசிலர் அதீத வெற்றியும், மற்றும் சிலருக்கு நஷ்டமும் ஏற்படும். இதற்கு பல்வேறு காரக கிரகங்கள் மற்றும் பாவ காரகங்களின் சூட்சும வலுவே காரணம்.
முதலாளி யோகம் பெற்ற பாக்கியவான் யார்?
ஜாதக கட்டத்தைப் பார்த்த உடனே, ஜாதகர் சொந்த தொழில் அல்லது கூட்டு வியாபாரம் செய்யும் பாக்கியம் பெற்றவரா? என்று 50% பார்த்தவுடன் சுலபமாக சொல்லிவிட முடியும். மீதமுள்ள 50 %, ஜாதகத்தை ஆராய்ந்து சொல்ல வேண்டும். ஒரு சொந்த தொழிலை குறிக்க முக்கிய காரகர்கள் சனி, புதன் மற்றும் 1,10 பாவாதிபதிகளும் ஆவார். இது தவிர மற்ற கிரகங்களும் வெவ்வேறு தொழில் செய்ய உதவும் முக்கியமான காரணகர்த்தாக்கள். ஒரு தொழிலில் வெற்றி பெற்று சிறந்த முதலாளியாக இருக்க முக்கியமான தகுதிகள் தேவை. அவை நிதானம், புத்திசாலித்தனம், படிப்பு கலந்த அனுபவம், கடின உழைப்பு, சரியாக முடிவெடுக்கும் திறன், நேர்மை, சகிப்பு தன்மை, திட்டமிடல், தைரியமிக்க வேகம், புதுமையான வழி, சிறந்த தொடர்பு திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இதுதவிர அவரவர் ஜாதகத்தில் இந்த மூலக்கூறு உள்ள காரக கிரகங்கள் சுபத்தன்மையுடன் இருக்க வேண்டும். நம்முடைய பராசர ஜோதிடத்தில் ஒருவரின் செயலுக்கு நல்ல வெற்றி இலக்கை கொடுப்பவர்கள்- ஒரு பலம் பொருந்திய லக்னாதிபதி, சுபத்துவமிக்கவர்களான காரகர்கள் மற்றும் பாவகர்கள் என்று முக்கிய வரிசையில் அணிவகுத்து நிற்பவர்கள். இவற்றில் தொழிலில் வெற்றிக்கு முக்கிய காரணியான கடின உழைப்பு, நிதானம் மற்றும் கர்மா என்ற செயலை குறிக்கும் வலுத்த சனி.
அடுத்த வரிசையில் புதுமை செய்வதில் வல்லவன், புத்திசாலி, சகலகலா வல்லவன் என்று கூறப்படும் புதன் ஆவார். அதற்கு அடுத்த வரிசையில் மிகப்பெரிய ஸ்தாபனத்தை நிர்வகிக்கும் தலைவர், முதலாளி என்ற புகழுக்கு உரியவர், உயிர் மற்றும் உடல் வலிமை கொண்ட ஒளி கிரகங்களான சூரியன், சந்திரன் முக்கிய பங்கு வகிப்பவர்கள். தொழிலில் முக்கிய கிரகங்களை தொடர்ந்து பல்வேறு தொழிலில் ஏற்ற தாழ்வை சமாளிக்கும் தன்மை மற்றும் ரெட்டிப்பு லாபம் என்ற சொல்லுக்கு ராகுவின் நட்பு தேவை. தொழில் என்றால் போட்டி உண்டு. அவற்றோடு எதிரிகளை துவம்சம் செய்ய தைரியம் மிக்க செவ்வாயும், 6ம் அதிபதியின் உதவி முக்கிய தேவையாகும். இவற்றோடு சுபத்துவம் மிக்க குரு பார்வை, மற்றும் பலம் பொருந்திய சுக்கிரன் உதவியும் கொஞ்சம் தேவைப்படும்.
தொழில் என்ற செயல் ஆரம்பிக்க ஜாதகரின் கோட்சாரமும் மற்றும் தசா புத்திகள் ஒன்றாக செயல்பட வேண்டும். ஒரு செயலை செய்ய ராசி கட்டத்தில் முக்கிய பங்கு கிரகங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பாவ காரகர்களின் சுப தொடர்பு தேவை. ஜாதகத்தில் 1,4,7,10 பாவத்தின் முக்கிய வலுமிக்க கேந்திர பில்லர்கள், அவர்கள் அடித்தளம் (foundation) மிக்க ஸ்தான அதிபதிகள் ஆவார். கேந்திராதிபதிகள், திரிகோணாதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது கூடுதல் பலமாகும். முக்கியமாக 10ம் அதிபதி சுபராக இருந்து கேந்திரத்தில், 5,9 பாவத்தில் ஆட்சியோ உச்சமோ பெற்றால் சொந்த தொழில் நிச்சயம். அவரோடு சுபத்தன்மையுடன் குருவின் பார்வை மற்றும் சேர்க்கை பெற்றால் செய்யும் தொழில் அனைத்தும் சிறப்பாக செய்து வெற்றி இலக்கை அடைவார்கள். நல்ல ஸ்தானத்தில் உள்ள சுப கிரகங்கள் உச்சமாகவோ பரிவர்த்தனை பெற்றாலோ தொழிலில் அமோக வெற்றி நிச்சயம்.
லக்னாதிபதி பத்தாம் பாவத்தில் இருப்பது தொழில் மீது ஈடுபாடு இருக்கும். அதுவே பத்தாம் பாவாதிபதி லக்கினாதிபதியும் சேர்ந்து லக்கினத்தில் நின்றால் சொந்தமான முறையில் தொழில் செய்து வெற்றி வாகை சூடுவான். ஆனால் மேஷம், கடக லக்கினகாரர்களுக்கு இது சரிவராது, ஏனென்றால் 10ம் அதிபதிகள் அந்த லக்கினத்தில் நீச்சம் பெறுவார்கள். எடுத்துக்காட்டாக கடக லக்கின காரர்களுக்கு 10ம் அதிபதி செவ்வாய் அவர் நீச்ச வீடான கடகத்தில் இருந்தால் அவ்வப்பொழுது தொழிலில் முடக்கத்தையும், நஷ்டத்தையும் தரவல்லவர்.
தொழில்காராகன் சனியும் 10ம் அதிபதி சேர்ந்தால் சொந்த தொழில் செய்யலாம். தொழில் காரகன் சனி, நீச்சம் அடையக்கூடாது லக்கினம் மற்றும் 10 அதிபதி சார்ந்த கிரகங்கள் நீச்சமோ, பாதகரின் தொடர்பு பெற்றால் தொழில் சிறக்காது. அவ்வாறு நீச்சம் ஏற்பட்டாலும் அந்த நீச்ச கிரகங்கள் பங்க நிலையை அடையவேண்டும்.
பத்தில் ஒரு பாவியாவது இருப்பது நன்று. இது அந்த பாவத்தின், செயல் திறனை ஆற்றல் மிக்க சக்தியாக மாற்ற உதவும். தொழிலில் ஒருவர் கீழே விழுந்து, பின்பு தன்னம்பிக்கை மிக்கவனாக வலிமையுடன் மாற்ற உதவும் ஊன்றுகோல். பத்தில் பாம்பின் ரூபமான ராகு இருந்தால் அதுவும் நீர் ராசியாக இருந்தால் கடல் கடந்து சென்று வியாபாரம் செய்ய முடியும். ஒருவர் எந்த அளவு முதலீடு செய்ய முடியும் என்பதை ஜாதகரின் நான்காம் பாவத்தில் உள்ள கிரகங்களின் அல்லது அதிபதிகள் பலம் மூலம் காணலாம். அந்த பாவாதிபதி கேந்திர திரிக்கோணத்தில் பலம் பெற்று இருந்தால் அதிக முதலீடு கூடிய லாபம் கிட்டும். தொழிலின் லாப வைப்பு நிலவரத்தை அவ்வப்பொழுது கோட்சார குரு காட்டி கொடுத்துவிடுவார்.
கர்மாவை சொல்லும் காரக கிரகம், பாவத்தில் உள்ள காரக கிரகங்களோடு சேர்ந்து வருமானத்தை குறிக்கும். 2,11 பாவங்களில் குரு சம்பந்தம்படுவது முதலாளித்துவத்தின் நிலையை உயர்த்தும். ஒருவரின் எந்த வகை வேலைக்கும் பகுத்தறிவு தன்மையை காட்டும் புத்திசாலியான புதன் மூலதிரிகோணம் பெற்றோ, ஆட்சி உச்சத்தில் அமர்ந்தோ, நட்பு முறையில் பத்தாமிடத்து அதிபதியோடு தொடர்பு பெறும்பொழுது, பல்வேறு தொழில் நுட்பங்களில் கற்று முதலாளியாக இருப்பான்.
ஒருவருக்கு 12ம் பாவம் என்பது நல்ல ஸ்தானம் அல்ல. பத்து, 12 அசுப தொடர்பு, பரிவர்த்தனை பெரும்பொழுது ஏற்றத்தாழ்வு தொழிலில் ஏற்படுத்தும். ஆனால் அதற்கு மாறாக பத்தாம் அதிபதியுடன் 12ம் அதிபதிகள் சுபத்துவ தொடர்பு கொண்டு, நீர் ராசி + ராகு தொடர்பு கொண்டால் வெளிநாட்டு தொழில் நிச்சயம். கர்ம காரகனோடு 3,7,9,12 சம்பந்தம் பெரும்பொழுது வெளிநாட்டு தொடர்பு உடைய தொழிலில் பங்கு பெற்று, வெற்றி வாகை சூடும் முதலாளியாக மாறுவார்கள். ஒருசிலருக்கு அவ்வப்பொழுது பல்வேறு வேலை மாறும் எண்ணம் இருக்கும். அதற்கு முக்கிய காரணம் ஜாதகரின் லக்கினம், ராசி மற்றும் ஜீவனாதிபதி – ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தில் அமரும் போது அல்லது ஜெனன குருவை சனி தொடர்பு கொள்ளும் பொழுது வேலை மாற்றங்கள் ஏற்படும். சந்திரனுக்கு 10ல் பலம் பெற்ற கிரகங்களுடன், சுபர் சேர்க்கை பெற்றால், லாபத்தில் மற்றவருக்கு உதவும் நோக்கை உடையவராக இருப்பார்கள்.
உபஜய ஸ்தானங்களான 3,6,10,11 பாவங்கள் வலுப் பெற்றால் படிப்படியாக தன்னுடைய முயற்சியில்(3), தொழில் மூலம் லாபத்தை(10,11) ஈட்டி வெற்றிப்பெற்று கௌரவமான முதலாளியாக திகழ்வார். அதாவது முயற்சி என்ற மூன்றாம் ஸ்தானமும், வெற்றி குறிக்கோள் என்பது ஆறாம் இடமும் வலுவாக இருந்து கடின உழைப்பு கொண்ட முதலாளியாக முன்னெடுத்து தொழிலில் லாபம் பெறுவர் (10,11) என்பது சூட்சுமம். முக்கியமாக அவர்கள் பரிவர்த்தனை பெறுவது தொழிலில் கூடுதலான உயர்வு பெறுவார்கள்.
பாக்கிய ஸ்தானம் மற்றும் லாப ஸ்தான அதிபதியுடன் (9,11), சனி மற்றும் 10ம் அதிபதியுடன் சுபத்துவம் பெற்றால் பல்வேறு தொழில்களை செய்து, தங்களை மதிக்க தக்கவராக உயர்த்தி லாபதை ஈட்டுவார். ஜாதகர் உபய ராசியில் இருப்பது பல தொழில் செய்யும் ஆற்றலை ஏற்படுத்தும். ராசி கட்டத்தில் உள்ள தொழில் சார்ந்த கிரகங்களின் பலம் பலவீனம் அறிய D10 வர்க்க சக்கரதை நுணுக்கமாக பார்க்க வேண்டும். கேது முடக்கத்துக்கு வழி வகுப்பவர் அவர் தொழில் காரகனுடன் சனியுடன் சேரும்பொழுது தொழிலில் முன்னேற விடாமல் தடுப்பார். அதுவே வக்ரம் பெற்ற சனியுடன் கேது சேரும்பொழுது நல்ல மாற்றம் இருக்கும். இது என் ஆராய்ச்சியில் கண்ட உண்மை.
ஒரு சாராருக்கு முதலாளி என்பது பரம்பரை சார்ந்த மற்றும் சுலபமான முறையில் கிடைக்கும் பாக்கியம். மற்றும் சிலர் போராடி கிடைக்கும். முக்கியமாக கஷ்டப்பட்டு கிடைக்கும் முதலாளித்துவம் மிகவும் சிறப்பான ஒன்று. தொழிலை துவங்க வெற்றி பெற, ஜாதகருக்கு சரியான நடப்பு தசை, புத்தி மற்றும் கோட்சர கிரகங்கள் வேலை செய்ய வேண்டும். கூட்டாளியை குறிக்கும் ஸ்தானம் ஏழாம் பாவமாகும். குரு பார்வையில் 1,7,10 பாவங்கள் வலுத்தால் தனித்து தொழில் செய்வதை விட கூட்டு தொழில் வெற்றியின் திறவுகோல் ஆகும்.
ஜாதக கட்டத்தில் மகர லக்னம், கும்ப ராசி, தொழில் காரகன் மற்றும் லாபாதிபதி 10ம், 11ம் அதிபதிகள் (செவ்வாய்+சுக்கிரன்) 6ல், அவற்றை தனுசில் உள்ள குரு பார்க்க, மற்றும் 3ல் வக்ர சனி கேது சேர்க்கை. பல வருடங்களாக இவர் தனித்து தொழில் செய்ய முடியாத நிலை, நீண்ட நாள் போராட்டம், உழைப்பு இருந்தாலும், தொழிலில் அதிக லாபம் இல்லை, முதலாளிக்கான புகழ் இல்லை. ஆனால் இவர் கூட்டு தொழில் மூலம் லாபம் பெறும் நிலை, காரணம் ஏழாம் அதிபதியான சந்திரன் தனக்காரகன் வீட்டில் (2) உள்ளார்.
தற்பொழுது இவருக்கு கடவுளின் வழிகாட்டுதலுக்கு இணங்க, அவர் உயர்மட்ட குழுவில் நல்ல வழிகாட்டி அதிகாரியாகவும் (mentor) பல்வேறு தொழிலுக்கு மறைமுக முதலாளியாகவும் உயர்ந்துள்ளார். ஆனாலும் இவரின் கடின உழைப்பே இவரை நல்ல உயரத்தில் நிலையாக நிறுத்தும். ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட நீ உனக்கு விதிக்கப்பட்ட பணியை செவ்வனே செய், பலனும் வெற்றியும் நிச்சயம் நம்மை வந்து சேரும் என்பது பகவான் கூற்று. இதே கூற்றை நம் திருவள்ளுவரும் தன்னுடைய குறளில் (620). அழகாகக் கூறியுள்ளார். “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர்”. விளக்கம்: மனதில் சோர்வு இல்லாமல் தொடர் முயற்சியில், குறைவு இல்லாமல் உழைப்பவன், அவன் செய்யும் செயலுக்கு இடையூறாக வரும் ஊழையும் (தலைவிதி) ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்து வெற்றி பெறுவான். இது நம்முடைய விதி, பகவான் நமக்கு கொடுத்தது அவ்வளவுதான் என்று எவன் முயற்சியில் ஈடுபடாமல் இருப்பானோ, அவனை விதி சுலபமாக அவர்களை தழுவும் என்பது குறளின் சூட்சம கருத்து.