கையுந்து பந்து பயிற்சியாளர் பணி விண்ணப்பிக்க நாமக்கல் ஆட்சியர் அழைப்பு நாமக்கல் நாமக்கல் மாவட்டத்தில் கையுந்து பந்து பயிற்சியாளர் பணிக்கு, தேசிய அளவில் பதக்கம் வென்ற கையுந்து பந்து வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் எஸ்.ஸ்ரேயா சிங் தெரிவிதுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம், நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், தொடக்கநிலை கையுந்து பயிற்சி வழங்கப்படவுள்ளது. ‘விளையாடு இந்தியா’ திட்டத்தின் கீழ், இம்மையத்தில் 100 வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு கையுந்து பந்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்தமையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்க, தேசிய அளவில் சாதனை படைத்த, 40 வயதுக்குட்பட்ட கையுந்துபந்து வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இப்பணிக்கு விண்ணப்பம் செய்வோர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும், சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவும் இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும். இது தற்காலிக பணி என்பதால், இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப்பணியோ கோர இயலாது. தகுதி உடையவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில், (www.sdat.tn.gov.in) ஜனவரி 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.