தோஷ சாம்யம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா?




 

தற்போதெல்லாம் காதலித்து திருமணம் செய்தவர்களும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்களும் விவாகரத்து பெற காத்திருக்கிறார்கள்.  ஒருவரை ஒருவர் முழுமையாக முதலிலேயே புரிந்துகொள்ளாமல் அவசரப்பட்டு  ஏற்படுத்திய திருமண பந்தத்தால் வரும் பிரச்னை. 

ஆனால் அடுத்ததில் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்தவர்களுக்கு, எங்கு தவறு ஏற்படுகிறது என்பதை அலசவே இந்த கட்டுரை.

சில காரணங்களும், தவறுகளும்:

1. உறவினர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளும் பந்தம். இதனை இனி செய்யாமல் இருப்பது நன்று, ஏனெனில் உறவுகளிடையே ஏற்படுத்தும் பந்தத்தால், பிறக்கும் குழந்தைகள் பலவிதமான நோய் பாதிப்புகளுக்கு ஆளாவது நிரூபணமாகியுள்ளது.

2. அழகான உருவமைப்பு ஏற்படுத்தும் பந்தம். இதில் அழகு நிரந்தரம் இல்லை என்பதனை உணர்ந்தாலே போதும்.

3. வசதி படைத்ததால் ஏற்படுத்த விழையும் பந்தம். வசதி மட்டுமே முக்கியம் இல்லை. ஆனால் இருவரின் உடல்வாகும் , மன நிலையும் , புரிதலும் நிச்சயம்.

4. இருதரப்பு குடும்பமும் தாமாக முடிவெடுத்து விட்டு, கடைசியாக ஜோதிடரை அணுகி பின் ஏற்படுத்தும்  பந்தம். ஜோதிடரை அவசரப்படுத்தியும், இவர்களின் விருப்பத்துக்கேற்ப முடிவெடுக்க, நிர்பந்தித்து ஏற்படுத்தும். பந்தம்

5. சில ஜோதிடர்கள், நட்சத்திரம் பொருத்தம் மட்டும் பார்த்து, சிறப்பாக இருப்பதாக கூறி நடத்தும் பந்தம். நட்சத்திர பொருத்தம் மட்டுமல்லாது கிரக பொருத்தமும், தீவிர ஆய்வு தன்மையும் இல்லாமல், ஆயிரம் காலத்துப் பயிராகிய திருமண பந்தத்தை ஏற்படுத்துதல்.

6. பல நூறு ஜாதகங்களைப் பார்த்து சரி இல்லை என கூறி திடீர் என்று ஒரு வரனை சரியாக உள்ளதாகக் கூறி அவசரகதியில் ஏற்படுத்தும் பந்தம் . இரு புறம் உள்ள குடும்பத்தினரின் பல்வேறு காரண  நிர்ப்பந்தத்தால், அவசர கதியில் ஏற்படுத்தினால், இப்படி பிரச்னை எழவே செய்யும்.

சரி என்னதான் செய்யணும்?

1. காதலால் ஏற்படும் காந்தர்வ திருமணத்திற்கு, ஜோதிடத்தில் எந்த ஒரு தடையும் இல்லை.

2. பெற்றோர்களால் ஏற்படுத்தி வைக்கும் திருமணத்தில், ஜோதிடம் ஆழ்ந்த அனுபவமிக்க ஜோதிடர் கூறும் அறிவுரையை ஏற்பது மட்டுமே நல்லது.  

அப்படியென்ன ஜோதிடம் கூறுகிறது என பார்ப்போம் ?

தோஷ சாம்யம் :

லக்னம், ஒருவரின் ஜாதகத்தில் ஜாதகரின் ஆத்மா ஆகும். அவருக்கு வருங்கால கணவராக / மனைவியாக வரும் உறவை பற்றி அறிய, இந்த லக்கினத்தில் இருந்து 1, 2, 4, 7, 8, 12 இந்த ஸ்தானங்களில் தோஷம் தரும் நிலையில் ஒரு கிரகம் உள்ளதா என ஆய்வு செய்தல். இதில் தோஷம் இருப்பின் அது 100% பாதிப்பை நிச்சயம் தரும், சந்தேகமே வேண்டாம்.

அது என்ன 1, 2, 4, 7, 8, 12 ஆம் இடங்கள் மட்டும் திருமணத்திற்கு காணுதல் அவசியமாகிறது.

1 லக்கினம் : இது ஜாதகர், அவரை பற்றிய நிலை. 

2 ஆம் இடம் : இது இந்த ஜாதகரால் ஏற்படுத்தப்போகும் குடும்பம் பற்றிய நிலை. குடும்பத்துக்கு வரும் புதிய நபரை ஏற்கும் பக்குவம்.

4  ஆம் இடம் : இது ஜாதகர் பெற விழையும் சந்தோஷம் , சுகம் அல்லது ஜாதகருக்கு அவை கிடைக்கப்போகும் நிலை.

7 ஆம் இடம் : இது வரும் களத்திரம் பற்றியது, இவருக்கு அமையப்போகும்  களத்திரத்தின் நிலை. கணவர் / மனைவியின் வடிவமைப்பு போன்றவை.

8 ஆம் இடம் : இது திருமணத்தால் ஜாதகர் பெறப்போகும் மகிழ்ச்சிக்கு ஏற்றவரா / இல்லையா எனக் கூறும் நிலை.

12 ஆம் இடம் : இது உறங்கும் இடம். இதில் இவர் சுகமாக உறங்குவாரா அல்லது தூக்கமற்று ஏங்கி தவிப்பாரா எனக் கூறும் நிலை.

மேற்சொன்ன இடங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு இருப்பின் அவர்களின் நிலையை ஒரு ஜோதிடர் ஆய்ந்தறிந்து கூறுவதே தோஷ சாம்யம் ஆகும்.

அதே போல் ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் நிலையிலிருந்தும் இதனை ஆய்வு செய்தல் அவசியம். இது 50% பாதிப்பை உணர்த்தும். அதற்கடுத்து, இன்பத்தை தரும் சுக்கிரன் நிற்கும் நிலையில் இருந்தும் இதனை ஆய்வு செய்து அதன் பாதிப்பை அறிதல் வேண்டும். இது 25% பாதிப்பை  உணர்த்தும்.

மேற்கூறிய அனைத்தையும் சரிபார்த்து, ஆண் , பெண் இருவரின் ஜாதகத்திலும் ஏற்படும் நிலை கண்டு, அதில் ஆணுக்கு அதிகமாகவும், பெண்ணுக்கு குறைவானதாகவும் தோஷம் இருப்பின், திருமண பந்தத்தால் நிச்சயம் பிரிவினை நேராது என கூற முடியும். இருவருக்கும் இடையே சமமான நிலை இருப்பினும் இந்த நிலை திருமண பொருத்தத்திற்கு ஏற்றதாக கூறலாம்.

எந்தக்  காரணம் கொண்டும், ஆணை விட பெண்ணுக்கு அதிகமான தோஷம் இருக்கக்கூடாது. இருப்பின் நிச்சயம், திருமணம் பிரிவினையை நோக்கி அழைத்துச் செல்லும். இவற்றை அறிந்த பின்னும் திருமணம் செய்வித்தால், பிரிவினை நிச்சயம்.

ஒரு தம்பதியினர் எந்த காரணத்தால், பிரிவினையை சந்தித்துள்ளார்கள் என்றும், திருமணம் செய்யும் முன்னர் ஆய்வு செய்தால், எதனால் பிரிவினை ஏற்படுத்தும் என்றும் துல்லியமாக கூறமுடியும். அப்படிபட்டவர்களுக்கு திருமணம் ஜோதிட ரீதியாக பொருத்த முடியாது என்பதனை , திருமண பொருத்தம் பார்க்கும் வேளையிலேயே கூறிவிடுவது சால சிறந்தது.

தோஷ சாம்யம், கிரக பொருத்தம் போன்றவைகளை பார்ப்பவர்கள் ஒரு சிலரே. காரணம் ஒன்று அவர்களுக்கு தெரியாமல் இருப்பது, மற்றொன்று பொருத்தம் பார்க்க வருபவர்களின் அவசர நிலையே ஆகும். இதற்கு மேல், தோஷ சாம்யம் ஆய்வு செய்பவர்கள் கேட்கும் தட்சிணையும் அதிகமாகவே இருக்கும். காரணம், இவற்றை ஆய்வு செய்வதில் சற்றே சிரமம் உள்ளதை மறுக்க முடியாது.

திருமண பந்தம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என சொல்வதால், இதற்கான செலவை முதலிலேயே செய்து விடுவது நல்லது. இல்லை எனில் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறுவதோடு, நோட்டு கட்டுகளையும் செலவு செய்வதால், கிடைக்கப்போவது என்னமோ மன உளைச்சலே. இனியாவது எண்ணிச் செயல்படுவது நல்லது. 

ஜோதிடர் தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு : 98407 17857

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற… ‘தினமணி’யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்…
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G







நன்றி Hindu

(Visited 10029 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =