சூரியன் – சந்திரன் சேர்க்கை நம்மை என்ன செய்துவிடும்? ஜோதிட சூட்சுமங்கள்




நம் பரசார ஜோதிடத்தில் ஒளி கிரகங்களான சூரியன் சந்திரன் என்பவர்கள் சிவனாகவும் சக்தியாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஒளிகிரகங்கள் மற்ற கிரகங்களையும் இயக்கும் முக்கிய பிரபஞ்ச சக்தியாகும். அவற்றில் சூரியன் என்பவர் பகலிலும் சந்திரன் என்பவர் இரவிலும் தன்னுடைய கதிர்வீச்சால் அனைத்து ஜீவ ராசிக்கும் பலத்தைக் கொடுக்க வல்லவர். 

ஒவ்வொரு உயிர் அணுக்களின் ஜீவன் என்பவர் சூரியன் ஆவார். அதனால் சூரியன் என்பவர் ஜாதக கட்டத்தில் வயிற்றையும் குழந்தையைக் குறிப்பது 5ம் பாவம் சிம்ம வீடு ஆகும். அவரே ஜாதத்தில் முக்கிய புள்ளி. அவரோடு ஜீவ சக்தியாக சந்திரன் உள்ளார். சந்திரன் வைத்துதான் கோச்சாரம் பலன் சொல்லப்படுகிறது. சூரியன் பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கும், சந்திரன் இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கும் அவரவர் கர்மாவிற்கு ஏற்ப பலம் கொடுக்க வல்லவர்கள். ஜாதக கட்டத்தில் முக்கிய தலைமை பொறுப்பில் சூரியன் சந்திரன் என்ற பிரகாச கிரகங்களுக்கு ஒரு ஆதிபத்தியமும்  மற்ற கிரகங்களுக்கு இரண்டு ஆதிபத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. 

சூரியனிலிருந்து சந்திரன் நகரும் பாகையைக் கொண்டு அது வளர்பிறை மற்றும் தேய்பிறை என்று பிரிக்கப்படுகிறது. ஒருவரது  ஜனன ஜாதகத்தில் உள்ள இரு கிரகங்களின் நெருங்கிய பாகை,  திரிகோணம்,  மற்றும் அவற்றின் பார்வை என்று பல்வேறு சூட்சுமங்களை சேர்க்கை என்று அழைக்கிறோம். நாம் இன்று சூரியன் சந்திரன் சேர்க்கையின் பொது பலன்களை சிறு விளக்கமாக பார்ப்போம். இவர்களோடு மற்ற அசுப கிரகங்களின் சேர்க்கை என்பது மாறுபட்ட பலன்களை கொடுக்கும். இது அவரவர்  ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து கூற வேண்டும்.

புலிப்பாணி தன் நூலில் இருவரின் சேர்க்கை பற்றி நல்ல பலனை கூறியுள்ளார். 

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே .  

விளக்கம்: சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் எல்லாவித செல்வங்களும், வீடு, ஆயுள் விருத்தி கொண்டவராகவும் மற்றும்  ஜாதகர் இரவில் சப்தங்களைக் கேட்பானாகவும் இருப்பார்.  இத்தகைய அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 78 வயது வரை உயிர் வாழ்வார் என  சித்தர்  கூற்று.

நமக்கு பிராண வாயுவை தரும் நெருப்பு கிரகமான சூரியன் அவரோடு குளிர்ந்த சந்திரன் சேரும்பொழுது நன்று. இந்த இரு கிரகங்களின் பிரகாச சேர்க்கை ஒருவரின் ஜாதகத்தில் அதிக நன்மைகளையும் குறைந்த தீமைகளையும் தரவல்லது. சூரியன் மன உறுதியையும் சந்திரன் மனசலனத்தையும் குறிக்கும். இவர்கள் சேர்க்கை உள்ள ஜாதகர் குழப்பம் ஏற்பட்டாலும் தெளிந்த நீராக முடிவு எடுக்கும் குணம் உண்டு. இந்த சேர்க்கை அரசு சம்பந்த வேலை மற்றும் அரசியல் ஈடுபாடு மனதில் ஒரு ஓட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். 

நீர் ஓடை போல பல்வேறு  இடத்தில் வாழ பழகிக்கொள்வார்கள். குடும்ப தலைவர் மற்றும் தந்தைக்கு வெவ்வேறு இடங்களில் வேலை மாற்றம் இருக்கும். இவர்கள் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவும், தாய் தந்தை ஒழுக்கத்தில் கண்டிப்பு மிக்கவராகவும், அறிவாளியாகவும், புகழ் மிக்கவராகவும், சாமர்த்தியசாலியாகவும், மனதில் மறைக்கும் குணம் கொண்டவராகவும், ஒரு செயலை குறிபார்த்து அடிப்பவனாகவும், தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் கொண்டவராகவும், தர்ம நெறி மிக்கவராகவும், பிடிவாதம் கூடிய கொஞ்சம் விதண்டாவாதம் மிக்கவராக இருப்பார்கள். அதுவே சூரியன் சந்திரனோடு பாவர்கள் சேர்க்கை ஏற்பட்டால் எதிர் விளைவுகளும் ஏற்படுத்தும். முக்கியமாக இந்த சேர்க்கையோடு ராகு சம்பந்தம் பெரும் பொழுது நீச்ச சந்திரனோடு சூரியன் மற்றும் பாவிகள் சேர்க்கை பெரும்பொழுது தற்கொலை எண்ணங்களைத் தூண்டும்.

ஜாதகரின் தசாபுத்தி காலகட்டத்தில் தொழிலில் அல்லது பெற்றோர் சொத்தில்  நஷ்டம், அவமானம், தவறான மனபோக்கால் ஏற்படும் விளைவு, நோய்களை உண்டாக்கும்.எடுத்துக்காட்டாக இந்த கால சூழலில் இந்த சேர்க்கை பலம் குன்றிய நிலையில் 6,8,12 தொடர்பில் இருந்தால் உடலில் தாக்கம் ஏற்படும் அதாவது முக்கிய உறுப்புகளான மூளை, இருதயம், கண், எலும்பு, ஒற்றை தலைவலி மற்றும் கல்லீரல் சம்பந்த நோய், கால்சியம் மற்றும் தாமிர குறைபாடு, பித்தம் மற்றும் சூடு சம்பந்த பாதிப்பு, நீர்ச் சத்து குறை என்று பல்வேறு நோயின் தாக்கம் இருக்கும்.  அனைத்து செயலும் ஜாதகருக்கு கோச்சாரமும் அவரின்  தசா புத்தியும் ஒன்றாக இருந்து செயல்படுத்தும்.

அனைத்து கிரகங்களில் முதன்மை கிரகமான சூரியன் மிகவும் ஒளிபொருந்தியது. இதற்கு மிக அருகில் செல்லும் கிரகங்கள் சில குறிப்பிட்ட இடைவெளியில் தன்னுடைய சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடைகின்றன. அப்படி சுயத்தன்மையை இழக்கும் கிரகங்கள் தன் ஆதிபத்தியம் மற்றும் காரக பலங்களை இழக்கும். அஸ்தங்க கிரகங்கள் கோட்சாரங்களிலும், ஜனன ஜாதகங்களிலும் நன்மைகளை தருவதில்லை. அதுவே சூரியனை ராகு கேது கடக்கும் பொழுது தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சூரியனுடன் புதன் அவ்வளவு தோஷத்தைக் கொடுக்காது. இவர்கள் நன்நிலையில் 1,4,8  இடங்களில் அமர்ந்தால் அந்த ஜாதகன் அரசனாவான் என்று ஜாதக அலங்காரத்தில்-279 (ஜா. அ.) கூறப்படுகிறது.

சூரியன் சந்திரன் சேர்க்கை என்பது  தந்தையும் தாயும் போல ஜாதகரின் ஒற்றுமையை குறிக்கும். இருவர் சேர்க்கையில் முக்கிய முழு பாவ கிரகங்கள் செவ்வாய், ராகு கேது பிடியில் இருந்தால் அம்மா, அப்பா ஒற்றுமை குறைவு அல்லது பிரிவு ஏற்படும். சூரியன் என்பவர் தந்தை மட்டும் அல்லாமல் மூத்த உறுப்பினர் மற்றும் வீட்டை வழிநடத்தும் முக்கிய உறுப்பினர் மற்றும் வீட்டை நிர்வகிக்கும் தலையை குறிக்கும். எடுத்துக்காட்டாக சந்திரன் அதிக பாகையுடன் இருந்தால் அம்மா அல்லது வீட்டின் தலைவி குடும்பத்தை நிர்வகிக்கும் அதிகாரம் அதிகம் இருக்கும். லக்கினத்திற்கு  திரிகோண, கேந்திர மற்றும் 2 ,9 ,10  ஆகிய இடங்களில் ஒன்று சேர்ந்து இருந்தால் புகழ், செல்வம், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

அரச கிரகங்களான சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று இருப்பது நன்று. இவர்கள் ஒருவருக்கொருவர் சமசப்தம பார்வையில் பார்ப்பது பௌர்ணமி ஒளியாகும். மஹா பெரியவா ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் கேந்திர ஆதிபத்யம் பெற்று ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில், குருவின் சேர்க்கையில் இருப்பது அருமை. அவர்  நம் அனைவருக்கும் ஒரு ஆன்மீக குருவாக இருக்கிறார். இவரின் ஜாதகத்தில் விருச்சிக சந்திரன் நீச்சம் பெற்றாலும், சூரியன் குரு பார்வையில் பூர்ண ஒளியாக இருக்கிறார். 

பௌர்ணமி ஒளிச் சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் மிகவும் மேன்மை உடையவராக இருப்பார்கள், இவர்கள் தொட்டது அனைத்தும் வெற்றி, அதிக பலம் கொண்ட செயல்களை பெற்ற பாக்கியவான்கள், பேசுவதில் வல்லவர், ஆன்மீக ஆற்றல் வெளிப்படுத்துபவராகவும், தர்மவனாக, ஆசைக்கு ஏற்ப மேன்மேலும்  உயர்வார்கள். எடுத்துக்காட்டாக இந்த ஒளி பார்வை பெற்ற ஜாதகர் தங்கள் விருப்பப்படி செயல் செய்து வெற்றி வாகை சூடுவார். அது தலைமை பொறுப்பானாலும் சரி அல்லது ஞான மார்க்க பாதையானாலும் சரி அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறும். ஜாதகரின் யோக கிரகங்கள் இந்த ஒளி ஆற்றல் பெரும் சூரியன், சந்திரனின் நட்சத்திரங்களில் அமர்ந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் உண்டு. ஆனால் இவர்கள் சேர்க்கை 6,8,12ல் மறையக் கூடாது.

சூரியன் சந்திரன் நெருங்கிய பாகையில் ஒன்றாக இருப்பது அமாவாசை யோகம். நல்ல பாவங்களில் இந்த யோகம் இருந்தால் ஜாதகர் உடல் மற்றும் மனவலிமையும் கொண்டவராக, பல எந்திர கருவிகள் உருவாக்குபவனாக, மருத்துவம் அறிந்தவனாக, அரசை ஆள்பவனாக, புத்திக்கூர்மை உடையவனாகவும், சிறந்த நிர்வாகியாக இருப்பார். இந்த  யோகம் ஒருவிதத்தில் நல்லது என்றாலும், அவை ஒருசில அசுப பாவங்களில் அமரும்பொழுது பலன்கள் மாறுபடும். முக்கியமாக அமாவாசையில் பிறந்தவருக்கு சந்திராஷ்டமம் அவ்வளவாக துன்பத்தைத் தராது. இது ஒரு சூட்சும விதி.

மேஷத்தில் சூரியன் உச்சம் இங்கு சந்திரன் சேர்வது நன்று. ஜாதகர் தந்தையையும் தாயாகப் பார்க்கும் குணம். சூரியன் சந்திரன் உச்ச ராசிகளில் அமர்ந்தால் அந்த ஜாதகன் வேந்தனாவான், புகழ் ஆற்றல் நிரம்பியவன், இகழத்தக்க கீழான வியாதி எதுவும் அவனை அண்டாது. பணமும் பயிர் செல்வமும், நற்பண்புகள் பெற்றவர், அநேக வாகனங்கள் வைத்திருப்பான், குறைபாடு எதுவுமில்லாத தேகம் கொண்டவன், நவதானிய சம்பத்துள்ளவன், அபிமானத்திற்கு உரியவர், சந்திரன் பாகை அதிகம் பெற்று உச்ச பலம் பெற்றவன் கணக்கற்ற கன்னியரோடு கல்வி புரிகின்ற பெரும் இன்ப நுகர்வாளன் என்று ஜாதக அலங்காரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரியனிலிருந்து 3,6,9,12  என்னும் பாவத்தில் சந்திரன் நின்றிருந்தால், அந்த ஜாதகனுடைய தந்தை பெற்றதைவிட அதிக பிள்ளைகளை பெறுவான். சூரியனிலிருந்து 2,5,8,11 என்னும் பணபர ஸ்தானத்தில் சந்திரன் நின்றிருந்தால், அந்த ஜாதகனுடைய தந்தை பெற்றிருந்த பிள்ளைகளின் எண்ணிக்கை போன்று ஜாதகருக்கும் அதே எண்ணிக்கையுள்ள பிள்ளைகள் பிறக்கும் பாக்கியமுண்டு. ஆனால்  சூரியனிலிருந்து  சந்திரன் கேந்திரத்தில் நின்றிருந்தால், அந்த ஜாதகனுடைய தந்தைக்கு அமைந்ததைவிட குறைந்த எண்ணிக்கையில் பிள்ளைகள் பிறக்கும். சூரியனிலிருந்து 5,7,9,12ல் சந்திரன் ஆட்சி, உச்சம், நட்பு பெற்று, குருவின் பார்வை பெற்றால், அந்த ஜாதகன் தந்தையைவிட அதிக செல்வங்கள் பெற்றிருப்பான். ஆனால் சுக்கிரன் மற்ற பாவிகளின் பார்வை பெறக்கூடாது. 

லக்கினத்தில் சூரியன் சந்திரன் அமர்ந்தால் நீளமான உடல்வாகு, பித்த சம்பந்தமான வியாதி, மெலிந்த சரீரம், ஆழ்ந்த நீண்ட சுவாசமுடையவன், சுத்தமானவன், இனிமையாக பேசுபவர், அறிவாளி, தேவையான நிலையான பேறு பெற்றிருப்பான். முக்கியமாக ஆன்மிகத் தேடல் அதிகம் உண்டு. எடுத்துக்காட்டாக ராமகிருஷ்ண பரமஹம்சர்  ஜாதகத்தில் கும்ப லக்கினத்தில் சூரியன் சந்திரன் மற்றும் அறிவை வெளிப்படுத்தும் புதன் உடன் சேர்க்கை, அவர் ஆன்மிக ஞான வழியில் கடவுளை அடையும் முறைகளை மக்களுக்கு உணர்த்தினார். இந்த சேர்க்கை மற்றும் பார்வை ஆன்மீக குருமார்களுக்கும் உண்டு.

மேஷம், ரிஷபம், கடகம், சிம்மத்தில், சூரியன் சந்திரன் சேர்க்கை என்பது தாய் மற்றும் தந்தை வழி சொத்து கிடைக்கும், விவசாயம் உணவு சார்ந்தவர்கள் உயர்வு பெறுவார், கற்பனை வளம் மிக்கவர், பெரும் புகழும் கிட்டும். இருள் கிரகமான சனி வீடுகளான மகர, கும்பத்தில் மற்றும் சூரியன் நீச்சம் பெரும் துலா வீட்டில், சந்திரன் நீச்சம் பெரும் விருச்சிகத்தில் – இந்த சேர்க்கை நன்கு இல்லை. ஆனால் துலாம், விருச்சிகம், மகரம், கும்ப ராசிக்காரர்கள் வீட்டின் அதிபதிகள் உச்சமோ ஆட்சியோ பெற்றால் யோக பலன்கள் மாறுபடும். கிரக சேர்க்கை என்பது நல்ல பலன்கள் மற்றும் தீய பலன்கள் என்று இருபக்கங்களையும் கொண்டது அவற்றை ஆராய்ந்து சொல்லவேண்டும். 

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற… ‘தினமணி’யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்…
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G







நன்றி Hindu

(Visited 10067 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =