கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் – பகுதி 8 




திருப்பேரூரிலே சிவபெருமான் பெரும் கருணையினால் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் சமயத்தில், உமாதேவியார் எழுந்து வணங்கி, "சுவாமி, பெத்த நிலை நீங்கி முக்தியின் பத்தில் அழுந்துகின்றவர்களுக்குக் காட்டும் ஆனந்த தாண்டவத்தைக் கோமுனி முதலியோர்க்குக் காட்டிய காரணம் என்ன?" என்று வினவினாள்.

அதற்குச் சிவபிரான், "தேவி! கோமுனியும், பட்டி முனியும் பேரன்போடு சடைமுடியுடன் விபூதி, உருத்திராக்கங்களைத் தரித்து, வில்வத் தளிர்களைக் கொண்டு உபசாரங்களினால் நம்மை சிவலிங்கத்தினிடத்தே நெடுங்காலம் பூசித்ததேயன்றி, வெள்ளிச் சபையிலே நடிக்கும் நமது வடிவித்தும் அருச்சித்து, மகோற்சவம் நடத்தி வணங்கிப் பஞ்ச மலங்களையும் வென்று, விரும்பியபடியால், அப்பொழுது நமது நாடகத்தைக் காட்டினோம்" என்று திருவாய் மலர்ந்தனர்.

அதனைக் கேட்ட உமாதேவியார், அம்முனிவர் இருவரும் சடை முதலியவற்றைத் தரித்துப் பூஜித்தபடியால், அச்சடை முதலியவற்றின் மகிமைகளைக் கூறியருள வேண்டும்" என்று கேட்டார்.

அதற்குச் சிவபெருமான் அருளிச் செய்யத் தொடங்கினார். "உமையே, நமது வேடங்கள் பலவற்றுள் சடை முடியே சிறந்தது. சடைமுடி தரித்தவரை யாமாகக்கருதி தேவர் முதலியானோர் வழிபடுவர். ஒவ்வொரு சடையும் ஒவ்வொரு சிவலிங்கமே!.

சடையை முடித்தவனுக்கு ஆயிரம் பிறவியின் முன்னுள்ளாரும் பின்னுள்ளாரும் நமது சிவலோகத்தைச் சேர்வர். அவனை வணங்கினோன் பாவியாயினும், புண்ணியமும் செல்வமும் பெறுவான். சடையிற் பொருந்திய ஒரு நீர்த்துளி ஒருவன்மேற் றெறித்தால், பேய், பூத மாதியால் வருந்துன்பமும், நோயும், பாவமும் போகும்.

விபூதியாவது, வைதீக விபூதியென்றும், இலெளகிக விபூதியென்றும் இரண்டு உள்ளன. அவற்றுள் வைதிக விபூதி ஓமகுண்டத்தில் விளங்குவதாம். இலெளகிக விபூதி கோமயத்தால் ஆகுவதாகும்.

வைதிக விபூதி, பிரமண ஓமகுண்டத்திலே தோன்றுவதாகிய புராதனியென்றும், பிராமணர் ஓமகுண்டத்திலே தோன்றுவதாகிய சத்தியோசாதையென்றும் இரண்டாம் என்பன.

இலெளகிக விபூதி தீட்சிதர்க்குரிய (தீக்கை பெற்றோர்) சைவ விபூதி என்றும், அத்தீட்சிதர்க்குரிய (தீக்கை பெறாதவர்) அசைவவிபூதி எனவும் ஆகும். தீட்சிதராகிய சைவர் தயாரிக்கும் விபூதி, கற்பம், அநு கற்பம், உப கற்பம், என மூன்றாகும்.

அவற்றுள், கற்பமாவது கன்றீனாத பசு, இளங்கன்று பசு, கன்றிழந்த பசு, மலட்டுப் பசு, குறைந்த செவி, கொம்பு, வால்களையுடைய பசு, பவ்வீயுண்ணும் பசு, நோயுள்ள பசு, என்னும் இவைகளை விட்டுப் பங்குனி மாதத்தில், நெல்லரித்த கழனிகளிலுள்ள தாளை மேய்ந்த நல்ல பசுக்கள் விட்ட மயத்தை எட்டாம் திதி, பதினான்காம் திதி, பதினைந்தாம் திதிகளிலே, சத்தியோ சாதத்தினாற், பூமியில் விழுமுன்னே தாமரை இலையில் ஏற்று மேல் வழும்பு நீங்கி, வாமதேவத்தினால் பஞ்சகவ்வியம் பெய்து, அகோரத்தினாற் பிசைந்து, தற்புருடத்தினாலே திரட்டி, ஓமாக்கினியில் இட்டு ஈசானத்தால் எடுத்து, புது வஸ்திரத்தினால் வடிகட்டி, புதிய குடத்தில் நிறைத்துக் காயத்திரி மந்திரம் உச்சரித்து, பரிசுத்தமான இடத்தில் வைத்து, நறுமலர் சாத்தி, சுத்த வஸ்திரத்தால் வாய்கட்டுவதாகும்.

உடனே ஓமகுண்டத்திலிருந்து உலர்த்தி விளைவித்தலும் விதியாம். அநுகற்பமானது வனத்தில் உலர்ந்த மயத்தைச் சித்திரை மாதத்தில் கொண்டுவந்து பொடித்து, அதில் கோசலம் பெய்து, முன்கூறிய விதிப்படி விளைவித்தல் வேண்டும். உபகற்பமாவது இயல்பாக அக்கினியினாலே தகிக்கப்பட்ட வனத்தினிலுள்ள பொடியில், பஞ்சகவ்வியம் பெய்து, முற்கூறிய விதிப்படி அக்கினியிலிட்டு எடுத்தலாகும். 

நீலநிறவிபூதி நோயை ஆக்கும். தாமிர விபூதி ஆயுளை நீக்கும். செந்நிற விபூதி புகழைப் போக்கும். பொன்னிற விபூதி தரித்திரத்தைச் சேர்க்கும். வெண்ணிற விபூதி புண்ணியத்தை விளைவிக்கும். ஆதலால், வெள்ளிய விபூதியே தரித்தற்குரிமையுடையதாம். 

அவ்விபூதியை மான்தோல், புலித்தோல், வஸ்திரம் இவைகளால் பன்னிரு விரலளவு உயரமும், எண்விரலளவு அகலமும், வாய் வட்டமுமாக அமைத்த ஆலயத்தில் வைத்து, சைவரும், வைதிகரும் அவரவர்க்குரிய விதிப்படி மூவிரலாலும், சிரமுதலிய தானங்களில் அணியக்கடவீர்.

பிராமணர், க்ஷத்திரியர், வைசியர் இம்மூவருக்கும் வைதிக விபூதியே உரியது. அதீக்ஷதராகிய சூத்திரர்க்கு அசைவ விபூதியும், திருக்கோயிலின் மடப்பள்ளி விபூதியும், திருவடியார் மடாலயத்தின் மடப்பள்ளி விபூதியும், வனத்தில் வெந்த விபூதியும் உரிமையாம்.

சங்கரசாதியார்க்கு மடைப்பள்ளி விபூதியும், வனத்தில் வெந்த விபூதியும் ஆகும். அக்கினி, தேவர், குரவர் இவர் முன்னும் வழி, அசுத்த நிலம், இழிஞர் இவற்றிடத்தும் விபூதி தரிக்கப்படாது. ஒரு கையால் ஏற்ற விபூதி, விதிப்படி இயற்றா விபூதி. விலைவிபூதி, அதீக்ஷதர் கொடுத்த விபூதி ஆகிய இவைகள் தரிக்கலாகா. பூமியில் வீழ்த்தலும், அங்காத்தலும், தலை நடுக்கலும், கவிழ்த்தலுஞ் செய்யாது திருநீறு தரிக்கக்கடவர்.

பிராமணர் உருவ முழுவதும் மற்றையோர் நாபிக்கு மேலும் உத்தூளனஞ் செய்வன. விபூதி தரித்தே அறமாதிகள் புரிக. திருநீறு தறியாதவர் முகஞ் சுடுகாடாகும். அதனைப் பார்த்தவர் பஞ்சாக்கரத்தில், நூறுரு ஜபிக்கக் கடவர். விபூதி தரியாது தவமுதலியன நிரம்பச் செய்தாலும் பயனில்லை. அப்படியே தரித்தவர் சும்மாவிருந்தாலும் பயன் பெறுவர். திருநீறு தரித்தே சிதார்த்தஞ் செய்க. 

பாவத்தை நீற்றலால் நீறு

செல்வந்தரலால் விபூதி, உயிர்களின் மலக்குற்றத்தைக் கழுவுதலாற் சாரம், அறியாமை நீங்க விளக்குதலாற் பசிதம், பூதாதிகளைப் போக்கிக் காத்தலாற் காப்பு என்னுங் காரணப் பெயர்களும் அவ்விபூதிக்கு உண்டு.

வியாதன் கழுவாய்ப் படலம்

காசித் தலத்திலே, சிவபிரானைத் தொழுது பல முனிவரும் தவம் செய்யும் போது ஒரு நாள்…….’விட்டுணுவே பரம்பொருளென்றும், உருத்திரனே பரம்பொருளென்றும் கலகஞ் செய்து, வியாச முனிவரை வினவினர்.

அதற்கு வியாச முனிவர்," "வேதங்களெல்லாம் விளக்கும் பரம்பொருள் விட்டுணுவே" என்றபோது விட்டுணுவைச் சார்ந்த முனிவர்கள் மகிழ்ந்தனர்.

உருத்திரமூர்த்தியே பரப்பிரமென்னும் முனிவர் குழாங்கள் வியாச முனிவரை நோக்கி, "உயர்ந்தோர் அனைவரும் சிவபிரானே பரமென்று தெளிந்திருக்கவும், அதற்கு விரோதமாக விரோதமாக நீவிர் கூறினமையால், விசுவேசர் சந்நிதானத்தில் விட்டுணுமே பரமென்று கூறுவீராயின் அதனை உறுதியாகக் கொள்வோம்" என்றனர். அதனைக்கேட்ட வியாச முனிவர் தீயூழினாற் சற்றும் அஞ்சாது கங்காநதியில் மூழ்கி,  விசுவேசர்  திருமுன்னர்ச் சென்று சிரசின் மீது இரண்டு கைகளையும் மேலுயர்த்திக் கொண்டு, "விட்டுணுவேபரம்" என்று சொன்னார்.

அதனையுணர்ந்த திருநந்தி தேவர் வியாச முனிவரை நோக்கிக் கோபித்துச் சாபமிட்டவளவில், மேலேயுர்த்திய கையோடு நாவும் தழுதழுக்க, விசுவேசர் சந்நிதியில் நாட்டிய வெற்றித் தம்பம்போல வியாச முனிவர் நின்றார். விஷ்ணுவைப் பரமென்று கருதும் மதத்தாரன்றி மற்றைய பல மதத்தினரும் விசுவநாதரே பரப்பிரமமென்று மெய்ம்மையாக உணர்ந்து உய்ந்தார்கள். 

அப்பொழுது வியாச முனிவர் விட்டுணுவைத் தியானிக்க அவர் அங்கே வந்து வியாசரை நோக்கி "ஏ வியாசனே, நீ என்னையுங் கெடுக்க, இங்கே எத்தனைப் பெருங் கொடுஞ் செய்கை புரிந்தாய்? சிவபெருமான் அருட்சித்தி எங்கும் வியாபித்திருத்தலால் என் போன்ற தேவர்களாகிய பசுக்களையும் பதியென்று வேதங்கள் உபசரித்து ஓதியதாம். ஆதலால், தசஷணாமூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் சிவபிரான் திருவடிகளைத் தியானித்து உய்யக் கடவாய்" என்று சொல்லி மறைந்தனர்.

வியாச முனிவர் அதனைக் கேட்டுச் சிவபெருமானைச் சிந்தித்துக் காத்தருள வேண்டுமென்று பிரார்த்தித்தார். 

பிரமாவும், விஷ்ணுவும் இரு பக்கத்தும் பாதுகைகளைத் தாங்கும் வண்ணம் இடபாரூடராய் விசுவநாதர் எழுந்தருளி வியாசரை நோக்கி "நின்னாலே முதல்வனாகச் சுட்டப்பட்ட விஷ்ணு நமது அகத்தொண்டின் கண்ணே நிற்பதைக் காண்பாய்.

நமது தன்மையிற் சிறிதும் அறிவாய். நீ புரிந்த குற்றம் பெரிதாயினும் நம்மைத் தியானித்தபடியால் திருப்பேரூரைச் சார்வாயாக இரும்" என்று திருவாய் மலர்ந்து மறைந்தருளினார்.

உடனே வியாச முனிவர் திருப்பேரூர் சேர்ந்து காஞ்சி நதியில் மூழ்கி, வெள்ளியங்கிரியை அடுத்து சுவாமியைத் தரிசித்துத் துதித்தவளவில் கைகளுந் தாழ்ந்து நாவும் அசைவுற்றது. அப்பொழுது கைகளாற் சிவபூசை செய்து நாவினாற் புகழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்தனர்.

– கோவை கு.கருப்பசாமி

– படங்கள் உதவி: ச. பாலகிருஷ்ணன், கோவை





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 16 =