அகேவ் இனிப்புத் திரவம் பற்றி தெரியுமா?




கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை, பனையில் இருந்து பெறப்படும் வெல்லம், தேனீக்கள் சேகரித்துகொடுக்கும் தேன் போன்றவை உணவுப் பொருள்களில் இனிப்பச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அதுபோன்று அகேவ் எனப்படும் ஒரு வகை மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் இனிப்புத் திரவமும், உணவுப் பொருள்களில் இனிப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.

அகேவ் தயாரிப்பு முறை: தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த அகேவ் மரங்கள் குறுகிய வளர்ச்சியுள்ள பனைமரம், கற்றாழைச் செடி போன்ற அமைப்புடன் இருக்கின்றன. சிறு முள்களுடன் மடல் போன்றிருக்கும் இலைகளில் நீரை சேமித்து வைக்கும் இந்த மரங்கள் 2 முதல் 5 மீட்டர் நீளம் வளரும் தன்மையுள்ளவை.

அகேவ் மரங்கள் 7 முதல் 12 ஆண்டுகள் நன்கு வளர்ந்து முதிர்ச்சியடைந்தவுடன் ஒவ்வொரு இதழாக, கீற்றாக அறுவடை செய்யப்பட்டு, பெரிய கலன்களில் வேக வைக்கப்படுகிறது. பிறகு, இயந்திரங்கள் மூலம் சாறு பிழிந்தெடுக்கப்பட்டு வடிகட்டப்படுகிறது. இந்தத் திரவத்திலுள்ள அதிகப்படியான நீர் ஆவியாக்கப்பட்டு, அடர்த்தியான அகேவ் இனிப்புத் திரவம் தயாரிக்கப்படுகிறது.

உணவுப் பயன்பாடுகள்: உணவுப் பொருள்களில், தேன், மேப்பிள் இனிப்புக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் அகேவ் இனிப்பு மிக எளிதில் கரைந்துவிடும் தன்மையுடையது என்பதால், சூடான திரவ உணவுகள் மட்டுமல்லாது, ஐஸ் டீ, ஐஸ் காஃபி, காக்டெயில், ஸ்மூதி போன்ற குளிர்ச்சியான திரவ உணவுகளிலும் சேர்க்கப்படுகிறது.

பாக்கெட்டுகளில் பக்குவப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் காலை உணவுகள், தானிய வகை நொறுக்குகள், கேக், பிஸ்கட் வகைகள் போன்றவற்றிலும் இனிப்பாகப்ப பயன்படுகிறது. மாமிச உணவுகளை விரைவாகச் சமைப்பதற்கு ஏதுவாகவும், மென்மையாக்கி சுவையைக் கூட்டவும் பின்பற்றப்படும் முறைக்கும் அகேவ் இனிப்பு உதவுகிறது. இதுமட்டுமல்லாமல், சாலட், ஜாம், ஜெல்லி, கெட்சப், ஜூஸ் உணவுகளிலும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.

உடலியல் நன்மைகள்: அகேவ் இனிப்பில் இருக்கும் நுண்பொருள்கள் குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் பெருகுவதற்கு உதவுகிறது. இந்த நுண்பொருள்கள், சிறுகுடலில் செரிக்காமல் பெருங்குடலை அடைந்து, சிறிய கொழுப்பு அமிலங்களை உருவாக்கி குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. அகேவ் இனிப்பிலுள்ள நார் பொருள்கள் மலச்சிக்கல் வராமல் தடுப்பது மட்டுமல்லாமல், மலச்சிக்கல் இருக்கும்போது முறையாகப் பயன்படுத்தினால், நிவாரணமும் கொடுக்கிறது.

தீமைகள்: அகேவ் இனிப்பால் சில தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எளிதில் செரிக்கும் ஒற்றை மூலக்கூறு சர்க்கரை என்பதால், தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால், ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதுடன், உடல் பருமன், இதய நோய்கள் கல்லீரலில் கொழுப்பு அதிகம் சேரும் நிலை போன்றவை ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது.

சாப்பிடும் முறை: அகேவ் இனிப்பில் கிளைசிமிக் இன்டெக்ஸ் என்னும் ரத்த சர்க்கரையை நிர்ணயிக்கும் காரணி குறைவாக இருந்தாலும், இது ஒரு சேர்மானச் சர்க்கரை என்பதை நினைவில் வைக்க வேண்டும். பழங்கள் போன்று நேரடியான இயற்கை சர்க்கரை அல்ல. ஏறக்குறைய 10 சதவீதம் கலோரி மட்டும்தான் சேர்மானச் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளில் இருந்து கிடைக்கப் பெற வேண்டும் என்று இந்திய, அமெரிக்க உணவு வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

எனவே, அகேவ் அல்லது வேறெந்த சேர்மான இனிப்பாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கிலோ கலோரிக்கு 50 கிராம் எடுத்துகொள்ளலாம். எந்த நோயும் இல்லாத மனிதனுக்கு ஒரு நாளைக்கு 7.5 கிராம் வரையில் அகேவ் இனுலின் பவுடர் அல்லது திரவத்தை 3 முதல் 6 மாதங்களுக்கு கொடுக்கலாம் என்று ஐக்கிய நாடுகளின் உணவு, மருந்து நிர்வாகத் துறை அனுமதித்துள்ளது.





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =