முன்பு கோடி ரிஷிகள் தவம் செய்ததால் “கோடிரிஷிபாக்கம்’ எனப்பட்டது. கார்கோடகன் என்ற நாக அரசன் திருமாலை வழிபட்ட இடம் என்பதால், “கோடகன்பாக்கம்’ எனப்பட்டது. “கோடு’ என்றால் மலை. திரிபுர அசுரர்களை அழிப்பதற்காக சிவன் மேரு மலையை வில்லாக வளைத்தது இத்தலத்தில்தான். இந்த இடம் தற்போது “கோடம்பாக்கம்’ என அழைக்கப்படுகிறது.
வியாக்ரபாதர் என்ற முனிவர் மலர்களை தேனீக்கள் தீண்டுவதற்கு முன்னரே தூய்மையான நிலையில் அதைப் பறித்து, சிவ பூஜை செய்ய விருப்பம் கொண்டிருந்தார். அதற்காக விரைந்து செயல்பட வரமும் பெற்றிருந்தார். வியாக்ரம் என்றால் வேங்கை, புலி எனப் பொருள்படும். பாதம் என்றால் கால். புலியின் கால்களைப் பெற்றிருந்ததால் அவர் வியாக்ரபாதர் என்ற பெயரைப் பெற்றார்.
அவர் தில்லை நடராசப்பெருமானை வழிபட்டு, அருள்பெறுவதற்கு முன்னர் இத்தலத்தில் நெடுநாள் தங்கி தமது பெயரில் லிங்கத் திருமேனியை நிறுவி, வழிபட்டு வந்தார். இந்தத் தலம் “புலியூர்’ என்றும், இறைவன் “வியாக்ர
புரீஸ்வரர்’ எனவும் அழைக்கப்படுகிறார். வியாக்ரபுரீஸ்வரரே தமிழில் வேங்கீஸ்வரர்.
நான்கு புறமும் வாயில்கள் உள்ளன. கிழக்கில் உள்ள பிரதான வாயிலில் சிவபுராணக் கதைகளைச் சித்திரிக்கும் கலையம்சம் கொண்ட ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. அதன் வழியே நுழைந்தால், தங்க முலாம் பூசிய பெரிய கொடிமரம் தகதகக்கிறது. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பலிபீடம், சிறிய மண்டபத்துடன்கூடிய நந்தீஸ்வரர் அடங்கிய முன் மண்டபம் கலையை உணர்த்தும் தூண்களுடன் காட்சி அளிக்கிறது. உள்ளே சென்றால் மேற்கு நோக்கி வியாக்ரபாதரும், அவருடைய நண்பர் பதஞ்சலியும்; வடக்கு நோக்கி நால்வரும் அருள் வழங்குகிறார்கள்.
கருவறை நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களும், உச்சியில் கஜலட்சுமியும் காட்சி அளிக்கிறார்கள். கருவறையின் உள்ளே ஐந்து தலை நாகத்துடன் வேங்கீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
யானையின் பின்புற அமைப்பில், அதாவது கஜபிருஷ்ட வடிவில் அமைந்த கோயிலில் மூலவரைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், கிழக்கு நோக்கி தனிச் சந்நிதியில் அருள்கிறார் வரசித்தி விநாயகர். கோஷ்ட தெய்வங்களாக கணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மன், சண்டிகேஸ்வரர், துர்க்கை, வள்ளி} தெய்வானை சமேத சுப்பிரமணியர், விசாலாட்சி சமேத காசி விசுவநாதர், மகாலட்சுமி சந்நிதிகளும் உள்ளன. நடராஜர் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜரையும் தரிசிக்கலாம்.
விசாலமான திருக்கல்யாண மண்டபத்தின் வழியாக வந்தால், கொடிமரம் அருகிலேயே தனிக்கோயில் போன்ற அமைப்பில் அழகிய முன்மண்டபத்துடன்கூடிய தனிச் சந்நிதியில் அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி எழில் சிந்துகிறாள் சாந்தநாயகி அம்மன்.
நுழைவாயிலின் உச்சியில் அம்மனின் பல்வேறு சுதை வடிவங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசம் தருகின்றன. கருணையே வடிவாகக் காட்சி அளிக்கும் சாந்தநாயகி அம்மனை வணங்கி குங்குமப் பிரசாதம் பெறலாம். ஆடிப் பூரத்தன்று அன்னையின் சந்நிதியில் வளையல் அலங்காரப் பந்தல் அசத்தும். தனி சந்நிதியில் வடக்கு நோக்கி பைரவரும்; அருகே நவக்கிரக சந்நிதியும், மேற்கு நோக்கி தனியாக சனி பகவானும், முனீஸ்வரரும், ராஜகோபுரத்தின் அருகே உள்புறங்களில் சந்திரன், சூரியன், வீரபத்திரரும் அருள்பாலிக்கிறார்கள்.
தனியாக தீபமேற்றும் இடம், வாகன மண்டபம், கோசாலை ஆகியவையும் அமைந்துள்ளது.
“அம்மன் வேண்டும் வரங்களை விரைவில் அருள்வார். பக்தர்கள் பசுக்களுக்கு அகத்திக்கீரை, பழங்கள் வாங்கிக் கொடுத்து வழிபடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும், சுப காரியத்தடைகள் நீங்கும், முன்னோர் சாபம் விலகும்’ என்பது ஐதீகம்.
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்குச் செல்லும்போது, அருகில் இருக்கும் மிகவும் பழமையான இந்தக் கோயிலையும் தரிசிக்கலாம்.
– மு.வெங்கடேசன்