மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!




மன அழுத்தம்.. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் இந்த காலத்தில் இருக்கும் ஒரு பிரச்னை. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், நகரமயமாக்கல், தனிக் குடும்பச் சூழ்நிலை, உடல் பிரச்னைகள், உறவுகள் என மன அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

இந்த மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த நாம் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்.

மனதை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஒட்டுமொத்த மன நலனுக்காக தினமும் சில நிமிடங்கள் தியானப் பயிற்சி செய்யலாம்.

அடுத்து நடைப்பயிற்சி, யோகா போன்றவை உடலில் எண்டோர்பின் ஹார்மோன் அளவை அதிகரிக்கும். இது மனநிலையை மேம்படுத்தும். மன அழுத்தத்தைக் குறைக்கும். ஒட்டுமொத்த உடல் நலன் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும். வாரத்திற்கு 150 நிமிட உடல் செயல்பாடுகள் அவசியம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

உடல் ஆரோக்கியத்திற்காகவும் மூளையின் ஆரோக்கியத்திற்காகவும் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்ளுங்கள்.

இரவில் 7 முதல் 9 மணி நேர ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது உடலையும் மனதையும் ஒருமுகப்படுத்தி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிக்கும்.

குடும்பம், நண்பர்கள், சமூகத்துடன் இணைந்திருக்க வேண்டும். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் செலவிடுவது, சமூக செயல்பாடுகளில் ஆர்வம் காட்டுவது உங்கள் வலிமையை மேம்படுத்துவதுடன் நல்ல மனநிலையைத் தரும்.

உங்கள் வாழ்க்கைக்கு என ஒரு குறிக்கோளை வைத்துக்கொள்ளுங்கள். ஏன், குறிப்பிட்ட நாள்களுக்கு என ஒரு குறிக்கோள் வைத்து அதை நோக்கி செயல்படும்போது உங்கள் உடலும் மனமும் வலிமை பெறும். வாழ்க்கையிலும் முன்னேற்றம் அடைய முடியும். வெற்றிகள், நம்பிக்கையை அளிக்கும்.

தினமும் நன்றி தெரிவிக்க வேண்டும். உங்கள் நன்றியுணர்வை நாட்குறிப்பில் எழுதுங்கள். நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கும் அல்லது நன்றி தெரிவிக்கும் விஷயங்களைப் பட்டியலிடுங்கள். இது உங்களிடையே நேர்மறையை அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருக்க வழிவகுக்கும்.

ஸ்மார்ட்போன், கணினி ஆகியவற்றைப் பார்ப்பதை குறைத்துக்கொள்ளுங்கள். இது கண்களை பாதுகாப்பதுடன் நினைவாற்றலை அதிகரித்து வேலையில் அதிக கவனம் செலுத்த உதவும்.

உங்கள் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். அதிகமாக சோர்வு அடைவதைத் தவிர்க்க வேலைகளுக்கு நடுவே உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். பிடிக்காத சிலவற்றுக்கு ‘நோ’ சொல்லவும் கற்றுக்கொள்ளுங்கள்.

ஒருவேளை மன அழுத்தம் அதிகமாக இருந்தால் மன நல ஆலோசகரை அணுகுவதற்கு சற்றும் கூச்சப்பட வேண்டாம். உங்களுடைய உடல் மற்றும் மன நலம் உங்களுக்கு மட்டுமின்றி உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துச் செயல்படுங்கள்.

10 tips to boost your mental health

இதையும் படிக்க | ஆன்லைன் ஷாப்பிங் அதிகம் செய்கிறீர்களா? என்னென்ன பாதிப்புகள் வரும்?





நன்றி Dinamani

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =