1688 முதல் 1772 வரை வாழ்ந்த இம்மானுவெல் ஸ்வீடன்போர்க் (Emanuel Swedenborg) ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் ஒரு விஞ்ஞானி, தத்துவஞானி, இறையியலாளர், மற்றும் மறைஞானி என்று போற்றப்பட்டவர். இயற்கணிதம் (Algebra), நுண்கணிதம் (Calculus), புவியமைப்பியல் (Geology), மருத்துவ இயல் (Medicine), வானியல் (Astronomy), பொருளாதாரம் (Economics), தொழில்நுட்பம் (Technology) மற்றும் பொறியியல் (Engineering) போன்ற துறைகளில் ஆய்வறிக்கைகளை வெளியிட்டவர் அவர். வெவ்வேறு விதமான மண்ணைப் பற்றியும், மண்ணின் மேற்பரப்பைப் (Soil) பற்றியும், ஊதுலைகளைப் (Blast Furnace) பற்றியும், காந்த சக்தியைப் (Magnetism) பற்றியும், நீர்ம நிலையியலைப் (Hydrostatics) பற்றியும் பல ஆய்வுகளை எழுதியுள்ளார் அவர். படிகவியல் (Crystallography)ஆராய்ச்சித்துறை இம்மானுவெல் ஸ்வீடன்போர்க்கால் நிறுவப்பட்டது. விண்மீன் படலக் கோட்பாட்டை (Nebular Hypothesis) அவரே முதலில் முன்மொழிந்தார் என்று கருதப்படுகிறது. (இப்போது இதுவே சூரியக் குடும்பத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியை விளக்கும் மாதிரியுருவாகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.) மருத்துவ இயலில் அவரே நாளமில்லாச் சுரப்பிகளின் (ductless glands) செயல்பாட்டை முதலில் கண்டுபிடித்தார்.