திருவாசகம் தந்த மாணிக்கவாசகர்…




பாண்டிய நாட்டின் வைகை நதிக்கரையில் உள்ளது திருவாதவூர். சனி பகவானின் வாத நோயை சிவன் தீர்த்ததால், “திருவாதவூர்’ என்று பெயர். இந்தச் சிறப்புமிகு ஊரில் பிறந்தார் மணிவாசகர், “திருவாதவூரார்’ என்று அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே கல்வி, ஞானத்தில் சிறந்திருந்ததால், அவரை அமைச்சராக்கினார் பாண்டிய மன்னர்.

சோழநாட்டுத் துறைமுகங்களில் கப்பல்களில் வந்திருந்த குதிரைகளை வாங்கி வர திருவாதவூராரை அனுப்பினார். அவர் புறப்பட்டு சென்றபோது, வழியில் திருப்பெருந்துறை தலத்தில் குருந்த மரத்தடியில் ஞானமே வடிவாய் அமர்ந்திருந்தவரை திருவாதவூரார் வணங்க, அமர்ந்திருப்பது சிவன்தான் என உணர்ந்தார் திருவாதவூரார். அப்போது, வாதவூரார் பாடிய பாடல்களைக் கேட்ட சிவன், “” உன் சொற்கள் மாணிக்கத்தைவிட மதிப்புமிக்கவை. இனி நீ மாணிக்கவாசகர் என்று அழைக்கப்படுவாய்” என்று சொல்லி மறைந்தார் சிவன். இதன்பின்னர் துறவியாக மாறினார் மாணிக்கவாசகர். வந்த வேலையை மறந்து, கொண்டுவந்த பொன், பொருள்களை திருப்பணிகளுக்குச் செலவிட்டார்.

நாள்கள் கடந்தும் திரும்பாத மாணிக்கவாசகருக்கு மன்னர் ஓலை அனுப்ப, இறைவனைச் சரணடைந்தார் மாணிக்கவாசகர். அப்போது, “”ஆடி மாதம் முடிவடைவதற்குள் குதிரைகள் வந்து சேரும் என்று ஓலை அனுப்பு” என்ற அசரீரி எழ, அவ்வாறே செய்தார் மாணிக்கவாசகர். ஆடி மாதமாகியும் குதிரைகள் எதுவும் மதுரைக்கு வராததால், சந்தேகம் கொண்ட மன்னரும் மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தார்.

வனத்தில் இருந்த நரிகளைக் குதிரைகளாக்கி மதுரைக்கு அனுப்பினார் சிவன். மாணிக்கவாசகரை விடுதலை செய்தார் மன்னர். அன்றிரவே குதிரைகள் நரிகளாக மாறி ஊளையிட்டன. சினம் கொண்ட மன்னரோ, மாணிக்கவாசகரை வைகை நதியின் சுடு மணலில் நிறுத்தி மரணத் தண்டனை அளிக்க உத்தரவிட்டார்.

அப்போது வைகை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த, “வீட்டுக்கு ஒருவர் கரையை அடைக்க வரவேண்டும்’ என்று ஆணையிட்டார் மன்னர். அப்போது, பிட்டு விற்றுப் பிழைக்கும் மூதாட்டி தனது பங்குக்கு ஆள் இல்லாமல் திண்டாடினார். சிவன் கூலியாள் வேடம் அணிந்துவந்து, பிட்டுக்கு மண் சுமக்க ஒப்புக் கொண்டார். வேலைக்கு வந்த சிவன், படுத்துத் தூங்கினார். அதைக் கண்ட மன்னர் தன் கையில் வைத்திருந்த பிரம்பால் சிவனை அடிக்க, அடியானது அனைத்து உயிர்கள் மீதும் விழுந்தது. மன்னரும் வலியால் துடித்தார். அப்போது பணியாள் உருவில் இருந்த சிவன் ஒரு கூடை மண்ணை எடுத்துச் சென்று கரையில் கொட்ட, வெள்ளம் வடிந்தது. சிவனும் அங்கிருந்து மறைந்தார்.

தவறை உணர்ந்த மன்னரும் மாணிக்கவாசகரை அமைச்சர் பதவியில் மீண்டும் நியமித்தார். அவரோ அதை நிராகரித்துவிட்டு, சிதம்பரம் தலத்துக்குச் சென்றார். அங்கே தங்கி இறைவனை எண்ணி பாடல்கள் பாட வேதியர் ஒருவர் ஓலையில் எழுதினார். பின்னர், அவர் “திருவாதவூரார் கூற திருச்சிற்றம்பலமுடையான்’ என்று எழுதி ஓலைகளைக் கீழ்வைத்து மறைந்தார்.

பன்னிரு திருமுறைகளில் மாணிக்கவாசகர் பாடி அருளிய திருவாசகமும் திருக்கோவையும் எட்டாம் திருமுறைகளாக விளங்குகின்றன. 32 ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகர், ஆனி மாதத்தில், மகம் நட்சத்திரத்தில் சிதம்பரம் தலத்தில் இறைவனோடு கலந்தார். இந்த நாளில் அனைத்து சிவன் கோயில்களிலும் மாணிக்கவாசகரின் குரு பூஜை நடைபெறுகிறது.

“வாத நோய், கை கால் குடைச்சல் என அவதிப்படுபவர்கள் திருவாதவூர் சிவனாரை மனதார வேண்டினாலோ, திருவாசகமும் திருவெம்பாவையும் பாராயணம் செய்து வந்தாலோ நோய்கள் தீரும்’ என்பது ஐதீகம். கோயிலுக்கு அருகில் மாணிக்கவாசகர் அவதரித்த இல்லம், தற்போது மாணிக்கவாசகரின் கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது.

மதுரை} மேலூர் சாலையில் ஒத்தக்கடையில் இருந்து திருமோகூர் திருத்தலத்தையெல்லாம் கடந்து,சுமார் 20 கி.மீ. பயணித்தால், திருவாதவூர் எனும் திருத்தலத்தை அடையலாம். இந்த ஆண்டு மாணிக்கவாசகர் குரு பூஜை ஜூன் 29 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

}மு.கீதா குமரவேலன்





நன்றி Hindu

(Visited 1001 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =