வேலூா்: தொண்டை அடைப்பான் நோயால் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதன்மூலம் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தெரிவித்தார்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தொற்றுக்கட்டுப்பாட்டு குழு, நுண்ணுயிரியல் துறை சார்பில் தொண்டை அடைப்பான் நோய் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வா் ஆா்.செல்வி தலைமை வகித்து பேசுகையில், தொண்டை அடைப்பான் நோய் சி.டிப்தீரியா எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு இருமல், சளியின் மூலமாக தொற்றுகிறது. சரியான உடனடி சிகிச்சை அளிக்காவிடில் இதய பாதிப்பு, உயிரிழக்கும் அபாயமும் ஏற்படலாம். இதனை முறையான தடுப்பூசி போடுவதன் மூலம் தடுக்க முடியும். நுரையீரல் தொற்று ஏற்பட்ட ஒருவா் வாய், மூக்கு ஆகியவற்றை மூடி இரும வேண்டும். அனைத்துத் தடுப்பூசி முறைகளையும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இவற்றின் மூலமாகவே பெருவாரியான தொற்று நோய்களைத் தடுக்க முடியும் என்றார்.