
மன நலம் குன்றிய ஜெயக்குமாருக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழுவுடன் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி. ஜெயக்குமார் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட உலோகப் பொருள்கள்.
மனநலம் பாதிக்கப்பட்டவரின் வயிற்றில் இருந்த சாவிகள், நாணயங்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட உலோகப் பொருள்களை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோபி முறை மூலம் வெளியே எடுத்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மருத்துவமனை முதல்வர் டாக்டர் ஜெயந்தி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (52), தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நலக் காப்பகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது மூளை செயல்பாடுகளை அறிவதற்காக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து, ஜெயகுமாரின் உடலில் ஏதேனும் உலோகப் பொருள்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில், சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் சில விநோதமான பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு, உயர் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜெயக்குமாரின் வயிற்றில் சாவிகள், நாணயங்கள், காந்தத் துண்டுகள், சிம் கார்டு உள்ளிட்ட 42 பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இரைப்பை – குடலியல் துறைத் தலைவர் டாக்டர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன், டாக்டர் ராஜ்குமார் சாலமன் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழு எண்டோஸ்கோபி மூலமாக அந்தப் பொருள்களை வெளியே எடுக்கத் திட்டமிட்டனர்.
சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக எண்டோஸ்கோபி முறையில் ஒவ்வொரு பொருளாக அவர்கள் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சையின்றி எந்த சேதமும் இல்லாமல் அந்தப் பொருள்களை வெளியே எடுப்பது என்பது மிகவும் சவாலான காரியம். அதனை அரசு மருத்துவர்கள் சாத்தியமாக்கியுள்ளனர்.